வேதாகமத்தை வாசி

Click to Subscribe

நீதிமொழிகள் 14

                   
புத்தகங்களைக் காட்டு
1புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
2நிதானமாக நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.
3மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
4எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
7மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.
8தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
9மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.
10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
12மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
13சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.
17முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
18பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
19தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
20தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.
21பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.
23எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.
24ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.
25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
27கர்த்தருக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
28மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.
30சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி.
31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;
32துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
34நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
35ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.