வேதாகமத்தை வாசி

Click to Subscribe

நீதிமொழிகள் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
2நல்லவன் கர்த்தரிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
3துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
4குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.
5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.
6துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
7துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
8தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
9உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
10நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.
11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
12துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
13துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.
19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
20தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.
21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
23விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
25மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
26நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
28நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.