தலைப்பு: உபாகமம் (Deuteronomy)

பெயர்க்காரணம்: உபாகமம் 17:18-ல் வரும் “நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒர் பிரதியை எழுதி” என்னும் வார்த்தைகளை, கிரேக்க மொழியாக்கமான செப்டுவஜிண்ட் (LXX), “இரண்டாம் நியாயப்பிரமாணம்” (Second Law) எனத் தவறாக மொழிபெயர்த்தது. இதன் அடிப்படையில் லத்தீனின் வல்கேட் (Vulgate) பதிப்பு, இப்புத்தகத்திற்கு “Deuteronomium” என்ற பெயரை வழங்கியது. ஆனால், எபிரேய வேதாகமத்தில் “சொல்லப்பட்ட வார்த்தைகள்” (The Words) என்னும் முதல் இரண்டு வார்த்தைகளே இப்புத்தகத்தின் தலைப்பாகப் பெறப்பட்டது. இது ஒரு ‘இரண்டாம் நியாயப்பிரமாணமாக’ இல்லாமல், நியாயப்பிரமாணத்தைக் குறித்து மோசே பேசிய வார்த்தைகளைக் குறிப்பெடுத்து வைத்த நூலாக இருப்பதால், எபிரேயத் தலைப்பே இப்புத்தகத்திற்குப் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இலக்கிய அமைப்பில், ஐந்து ஆகமங்களான ‘பஞ்சாகம’ (Pentateuch) புத்தகங்களை நிறைவு செய்வதாக உபாகமம் விளங்குகிறது.

ஆக்கியோன் மற்றும் காலம்: மோசேதான் இப்புத்தகத்தை எழுதினார் என்பதற்கு இந்த நூலே சாட்சியாக நிற்கிறது (1:15; 31:9; 22:24). பழைய ஏற்பாடும் (1 ராஜா. 2:3; 8:53; 2 ராஜா. 14:6; 18:12), புதிய ஏற்பாடும் (அப். 3:22,23; ரோமர் 10:19) மோசேயின் ஆசிரியர் உரிமையை உறுதிப்படுத்துகின்றன. உபாகமம் 32:48 முதல் 34:12 வரையிலான வசனங்கள் மோசே மரித்த பிறகு (ஒருவேளை யோசுவாவால்) சேர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. புத்தகத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் மோசேயின் கரங்களினால், கி.மு. 1405-ல் அவர் மரிப்பதற்கு முன்பு எழுதப்பட்டன.

எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் வெளியேறிய 40-வது வருஷம், 11-வது மாதம், முதல் தேதியில் (1:4) ஆரம்பித்து, இஸ்ரவேல் ஜனத்தாரிடம் மோசே தனது 120-வது வயதில் விடைபெறுவதற்கு முன் பேசிய உரைகளின் தொகுப்பாகவே இப்புத்தகத்தின் பெரும்பகுதி அமைந்துள்ளது. இந்த உரைகள் கி.மு. 1405-ன் முற்பகுதியில் (ஜனவரி-பிப்ரவரி) நிகழ்ந்திருக்கலாம். மோசேயின் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இப்பேச்சுக்களுக்கு எழுத்துவடிவம் தரப்பட்டு, இஸ்ரவேலின் வருங்கால சந்ததியினரிடம் போய்ச் சேரும்படி ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னணி மற்றும் அமைப்பு: லேவியராகமப் புத்தகத்தைப் போலவே, உபாகமமும் வரலாற்று ரீதியாக முன்னேறிச் செல்லும் ஒரு புத்தகமல்ல. இப்புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் அனைத்தும் ஒரே இடத்தில், ஏறக்குறைய ஒரு மாத கால அவகாசத்தில் நடைபெற்றவை (உபா. 1:3; 34:8 மற்றும் யோசுவா 5:6-12). யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே அவர்கள் கூடாரமிட்டு இருந்த வேளை அது (உபா. 1:1). எண்ணாகமம் 36:13-ல் இந்த இடம் – எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள “மோவாபின் சமனான வெளிகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்தை விட்டு வெளியேறியதிலிருந்து ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து எழுதப்பட்ட புத்தகம் இதுவாகும்.

மோசேயின் வாழ்க்கையின் இறுதி வாரங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் இப்புத்தகம் அதிக கவனம் செலுத்துகிறது. இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தெய்வீக வெளிப்பாடாக, கர்த்தர் மோசேயின் மூலமாகப் பேசிய வார்த்தைகளே இப்புத்தகத்தின் மையமாகும் (1:1-30:20; 31:30-32:47; 33:1-29). இதைத் தவிர்த்து, 1) மோசே நியாயப்பிரமாணத்தைப் புத்தகமாக எழுதி வைப்பதும், யோசுவாவை புதிய தலைவனாக நியமிப்பதும் (31:1-29); 2) நேபோ பர்வதத்திலிருந்து மோசே கானான் தேசத்தைப் பார்த்தல் (32:48-52; 34:1-4); மற்றும் 3) மோசேயின் மரணம் (34:5-12) ஆகிய சம்பவங்கள் இதில் அடங்கியுள்ளன.

இஸ்ரவேல் தேசத்தின் இரண்டாம் தலைமுறையினரே மூல உபாகம நூலை வாய்வழியாகவும், எழுத்து வடிவிலேயும் பெற்றுக்கொண்டவர்கள் ஆவர். அந்தத் தலைமுறையில் 40 முதல் 60 வயது வரை இருந்தவர்கள் எகிப்தில் பிறந்தவர்கள்; 40 வயதுக்கும் குறைவானவர்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது குழந்தைகளாகவோ அல்லது பதின்ம வயதினராகவோ இருந்தவர்கள் (யோசுவாவும் காலேபும் தவிர, அவர்கள் வயதில் மூத்தவர்கள்). 40 வயதுக்கும் குறைவானவர்கள் வனாந்தரத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் யோசுவாவின் தலைமையின்கீழ் கானான் தேசத்தைச் சுதந்தரிக்கவிருந்த புதிய தலைமுறையினர் ஆவர் (1:34-39).

வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள்: லேவியராகமத்தைப் போல உபாகமமும் சட்டதிட்டங்களை உள்ளடக்கியது. ஆனால், இதில் ஆசாரியர்களைக் காட்டிலும் மக்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலின் இரண்டாம் தலைமுறையினரைத் தேவனை விசுவாசிக்கவும், ஓரேப் (சீனாய்) மலையில் தேவன் செய்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் அழைத்தபோது, இஸ்ரவேலின் கடந்த கால வரலாற்றைச் சுட்டிக்காட்டி மோசே விளக்கமளித்தார். ஓரேபிலும் (9:7-10:11), காதேஸிலும் (1:26-46) இஸ்ரவேல் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினது எவ்வித அழிவை ஏற்படுத்தியது என்பதை நினைப்பூட்டினார். அதேவேளையில், கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களின்மேல் ஜெயம் பெறச்செய்து, தமது வாக்குறுதியில் எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதையும் நினைவுபடுத்தினார் (2:24 – 3:11; 29:2,7,8).

மிக முக்கியமாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகிய பிதாக்களுக்குத் தேவன் வாக்குப்பண்ணியிருந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி ஜனங்களுக்கு அழைப்பு விடுத்தார் (1:8; 6:10; 9:5; 29:13; 30:20; 34:4). மோசே கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் எதிர்காலத்தையும் தீர்க்கதரிசனமாகக் கண்டார். இஸ்ரவேல் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனால், பிதாக்களுக்குச் செய்த உடன்படிக்கை நிறைவேறுவதற்கு முன்பாகவே, அவர்கள் எப்படி அந்நிய தேசங்களில் சிதறடிக்கப்படுவார்கள் என்பதையும் முன்னறிவித்தார் (4:25-31; 29:22-30:10; 31:26-29).

உபாகமம், சங்கீதம் மற்றும் ஏசாயா நூல்களுடன் இணைந்து, தேவனின் பண்புகளை அதிகமாக வெளிப்படுத்துகிறது. இதனால், புதிய ஏற்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட முறை இப்புத்தகம் நேரடியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “கர்த்தர் ஒருவரே தேவன்” (4:39; 6:4) என்பதை உபாகமம் ஆணித்தரமாக அறிவிக்கிறது. மேலும், அவர் எரிச்சலுள்ள தேவன் (4:24), உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் (7:9), அன்பு கூருகிறவர் (7:13), இரக்கமுள்ளவர் (4:31); ஆனாலும் பாவத்தைக் கண்டு சினங்கொள்கிறவர் (6:15). இந்தத் தேவனே இஸ்ரவேலைத் தம்மிடம் வரும்படி அழைத்தவர். “உன் தேவனாகிய கர்த்தர்” என்னும் சொற்றொடரை இஸ்ரவேலரிடம் மோசே 250-க்கும் அதிகமான முறை மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

இஸ்ரவேலர் தேவனுக்குக் கீழ்ப்படியவும் (28:2), அவருக்குப் பயந்து (10:12), அவர் வழிகளில் நடந்து, அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்வதினால், தங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்க அழைக்கப்பட்டனர் (10:12,13). கீழ்ப்படிதலினால் இஸ்ரவேல் ஆசீர்வாதங்களைப் பெறும் (28:1-14). கீழ்ப்படிதலும், தனிப்பட்ட பரிசுத்தமும் எப்போதும் தேவனுடைய குணாதிசயத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவர் எவ்விதமாய் இருக்கிறாரோ, அவ்விதமே அவருடைய ஜனங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் (7:6-11; 8:6; 11,18; 10:12,16,17; 11:13; 13:3,4; 14:1,2).

வியாக்கியானம் செய்வதிலுள்ள சவால்கள்: உபாகமத்தை வாசிப்பவருக்கு விளக்கம் அளிப்பதில் மூன்று முக்கிய சவால்கள் உள்ளன:

  1. பஞ்சாகமத்தின் ஒருமைப்பாடு: உபாகமம் ஒரு தனிப்பட்ட புத்தகமா அல்லது பஞ்சாகமங்களில் ஒன்றா? தோரா (நியாயப்பிரமாணம்) என்னும் தோல்ச்சுருள், ஆதியாகமம் முதல் உபாகமம் வரையிலான ஐந்து புத்தகங்களையும் உள்ளடக்கியது. வேதாகமத்தின் மற்ற புத்தகங்கள் இந்த ஐந்தையும் ஒரே தொகுப்பாகவே கருதுகின்றன. பஞ்சாகமத்தின் பின்னணியைப் பிரித்துவிட்டு, உபாகமத்தின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. வாசிப்பவர் முந்தைய நான்கு புத்தகங்களையும் அறிந்திருக்கிறார் என்ற அடிப்படையிலேயே இது எழுதப்பட்டுள்ளது. ஆதியாகமம் முதல் எண்ணாகமம் வரை வெளிப்படுத்தப்பட்ட அனைத்தையும் உபாகமம் கருத்தில் கொள்வதோடு, வாக்குத்தத்த தேசத்தில் பிரவேசித்தவுடன் அந்த வெளிப்பாடுகளின் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறது.

  2. உடன்படிக்கை வடிவம்: உபாகமப் புத்தகத்தின் கட்டமைப்பு, மோசேயின் காலத்தில் நிலவிய ‘பண்டைய கிழக்கத்திய உடன்படிக்கை’ (Ancient Near Eastern Treaties) முறையைத் தழுவியதா? என்பது இரண்டாவது கேள்வி. கடந்த 35 வருடங்களாக வேதாகம வல்லுநர்கள், மோசே வாழ்ந்த காலத்தில் மன்னர்கள் மேற்கொண்ட உடன்படிக்கைகளுக்கும் உபாகமத்தின் வடிவமைப்பிற்கும் இடையே உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகின்றனர். கி.மு. இரண்டாம் ஆயிரமாண்டுகளில் நிலவிய இந்த ஒப்பந்தங்களில் ஆறு பிரிவுகள் காணப்பட்டன: 1) முன்னுரை, 2) வரலாற்றுப் பின்னணி, 3) நிபந்தனைகள், 4) சாட்சிகள், 5) ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள், 6) உறுதிமொழிகள். உபாகமமும் இதே வடிவமைப்பைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது (உதாரணமாக, 1:1-5 முன்னுரை; 1:5-4:43 வரலாற்றுப் பின்னணி; 27-28 அதிகாரங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள்). இது ஒரு புதிய வகை இலக்கியம் அல்ல, மாறாக அக்காலத்து வழக்கப்படியான உடன்படிக்கை வடிவத்தை மோசே பயன்படுத்தியுள்ளார்.

  3. மோவாபின் உடன்படிக்கை: மோவாப் தேசத்திலே செய்யப்பட்ட உடன்படிக்கை (29:1) பற்றியது மூன்றாவது சவால். இது சீனாய் மலையில் 40 வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட உடன்படிக்கையின் புதுப்பித்தல் என்று பலர் கருதுகின்றனர். மற்றொரு சாரார், இது இஸ்ரவேலுக்குத் தேசத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் ‘பாலஸ்தீன உடன்படிக்கை’ என்கின்றனர். ஆனால், மோசே சீனாய் உடன்படிக்கையை இஸ்ரவேல் மீறுவார்கள் என்பதை அறிந்திருந்ததால், 29 மற்றும் 30-ம் அதிகாரங்களில் அவர் ஒரு ‘புதிய உடன்படிக்கையை’ எதிர்நோக்கினார் என்பதே மிகச் சிறப்பான கருத்தாகக் காணப்படுகிறது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.