| 1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 2 | நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார். |
| 3 | மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள். |
| 4 | அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா. |
| 5 | சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத். |
| 6 | யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப். |
| 7 | இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால். |
| 8 | எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா. |
| 9 | பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி. |
| 10 | செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல். |
| 11 | யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி. |
| 12 | தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல். |
| 13 | ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர். |
| 14 | நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி. |
| 15 | காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல். |
| 16 | தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான். |
| 17 | அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி> |
| 18 | தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்> |
| 19 | அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்> |
| 20 | நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது. |
| 21 | அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து> |
| 22 | தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது. |
| 23 | பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். |
| 24 | இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு எனப்பட்டது. |
| 25 | அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள். |
| 26 | அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். |
| 27 | அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. |
| 28 | ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம். |
| 29 | அமலேக்கியர்கள் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியர்களும், எபூசியர்களும், எமோரியர்களும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்கள் கடல் அருகிலும் யோர்தானுக்கு அருகில் குடியிருக்கிறார்கள் என்றார்கள். |
| 30 | அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். |
| 31 | அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள். |
| 32 | நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள். |
| 33 | அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். |