| 1 | என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்; |
| 2 | அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். |
| 3 | ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். |
| 4 | அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும். |
| 5 | அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். |
| 6 | நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது. |
| 7 | ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள். |
| 8 | உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. |
| 9 | சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய். |
| 10 | அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும். |
| 11 | முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: |
| 12 | ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே! |
| 13 | என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே! |
| 14 | சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய். |
| 15 | உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. |
| 16 | உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. |
| 17 | அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக. |
| 18 | உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு. |
| 19 | அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு. |
| 20 | என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? |
| 21 | மனிதனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். |
| 22 | துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். |
| 23 | அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான். |