| 1 | தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: |
| 2 | இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து |
| 3 | விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். |
| 4 | இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். |
| 5 | புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து; |
| 6 | நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான். |
| 7 | கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். |
| 8 | என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. |
| 9 | அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். |
| 10 | என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் நீ சம்மதிக்காதே. |
| 11 | எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, குற்றமில்லாமல் இருக்கிறவர்களை காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; |
| 12 | பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; |
| 13 | விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். |
| 14 | எங்களோடு பங்காளியாக இரு; நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; |
| 15 | என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. |
| 16 | அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தம் சிந்த விரைகிறது. |
| 17 | எவ்வகையான பறவையானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. |
| 18 | இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள். |
| 19 | பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும். |
| 20 | ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. |
| 21 | அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது: |
| 22 | பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். |
| 23 | என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். |
| 24 | நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. |
| 25 | என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். |
| 26 | ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன். |
| 27 | நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன். |
| 28 | அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். |
| 29 | அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். |
| 30 | என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். |
| 31 | ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள். |
| 32 | அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்; |
| 33 | எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான். |