| 1 | யோபு மறுமொழியாக: |
| 2 | ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; உங்களுடனே ஞானம் சாகும். |
| 3 | உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? |
| 4 | என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். |
| 5 | ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும். |
| 6 | திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். |
| 7 | இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும். |
| 8 | அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்குப் போதிக்கும்; சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும். |
| 9 | கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? |
| 10 | எல்லா உயிரினங்களின் உயிரும், மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது. |
| 11 | வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா? |
| 12 | முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. |
| 13 | அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. |
| 14 | இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. |
| 15 | இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும். |
| 16 | அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள். |
| 17 | அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார். |
| 18 | அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார். |
| 19 | அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். |
| 20 | அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார். |
| 21 | அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார். |
| 22 | அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். |
| 23 | அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். |
| 24 | அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். |
| 25 | அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார். |