| 1 | அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். |
| 2 | தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து |
| 3 | ஆண்கள்துவங்கி பெண்கள்வரை, இஸ்ரவேலர்களாகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். |
| 4 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான். |
| 5 | அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும் |
| 6 | பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். |
| 7 | அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது: |
| 8 | கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். |
| 9 | அவரைப் பாடி, அவரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். |
| 10 | அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. |
| 11 | கர்த்தரையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். |
| 12 | அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! |
| 13 | அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள். |
| 14 | அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். |
| 15 | ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும் |
| 16 | அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். |
| 17 | அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: |
| 18 | உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். |
| 19 | அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள். |
| 20 | அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள். |
| 21 | அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: |
| 22 | நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். |
| 23 | பூமியின் எல்லா குடிமக்களே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள். |
| 24 | தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். |
| 25 | கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே. |
| 26 | அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். |
| 27 | மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது. |
| 28 | மக்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதை செலுத்துங்கள். |
| 29 | கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். |
| 30 | பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர். |
| 31 | வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ஆளுகைசெய்கிறார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக. |
| 32 | கடலும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. |
| 33 | அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுமரங்களும் முழக்கமிடும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். |
| 34 | கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது. |
| 35 | எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள். |
| 36 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள். |
| 37 | பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து |
| 38 | எதித்தூனின் மகனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான். |
| 39 | கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக |
| 40 | அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களையும் வைத்து |
| 41 | இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும் |
| 42 | பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான். |
| 43 | பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான். |