தலைப்பு: 1 மற்றும் 2 இராஜாக்கள் - ஓர் அறிமுகம்

ஆரம்பத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இராஜாக்கள் புத்தகங்கள் ஒரே புத்தகமாகவே இருந்தன. மூல எபிரேய வேதாகமத்தில், முதல் அதிகாரத்தின் முதல் வசனத்தில் வரும் “இராஜா” என்ற சொல்லைக் கொண்டே இப்புத்தகம் இப்பெயரைப் பெற்றது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான ‘செப்டுவாஜிண்ட்’ (LXX) இப்புத்தகத்தை இரண்டாகப் பிரித்தது.

தொடர்ந்து வந்த லத்தீன் பதிப்பும் (Vulgate - Vg.), ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இதனையே பின்பற்றின. நீண்ட தோல் சுருள்களையும், வேதாகமக் கையெழுத்துப் பிரதிகளையும் கையாள்வதற்கும், பிரதி எடுப்பதற்கும் வசதியாகவே இவை பிரிக்கப்பட்டனவேயன்றி, புத்தகத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அல்ல. நவீன எபிரேய வேதாகமங்கள் இப்புத்தகங்களை “இராஜாக்கள் அ”, “இராஜாக்கள் ஆ” எனப் பெயரிட்டுள்ளன. LXX மற்றும் Vg. மொழிபெயர்ப்புகள், இராஜாக்கள் புத்தகத்தைச் சாமுவேல் புத்தகத்துடன் இணைத்து, “மூன்றாம் மற்றும் நான்காம் இராஜ்ஜியத்தின் புத்தகங்கள்” (3 & 4 Kingdoms) எனத் தலைப்பிட்டுள்ளன. 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களுடன் இணைந்து, 1 மற்றும் 2 இராஜாக்கள் புத்தகங்கள் யூத மற்றும் இஸ்ரவேல் தேசத்து இராஜாக்களின் வரலாற்றை—சவுல் முதல் சிதேக்கியா ராஜா வரை—காலவரிசைப்படி விவரிக்கின்றன. (1 மற்றும் 2 நாளாகம புத்தகங்கள் யூத தேசத்து இராஜாக்களின் வரலாற்றை மட்டுமே தருகின்றன).

ஆகமத்தின் ஆசிரியரும் காலமும்

இது உறுதியாக அறியப்படாவிட்டாலும், யூதப் பாரம்பரியம் இராஜாக்கள் புத்தகத்தை எரேமியா தீர்க்கதரிசி எழுதியிருக்கலாம் எனக் கருதுகிறது. ஏனெனில், இப்புத்தகத்தின் கடைசிச் சம்பவம் பாபிலோனில் கி.மு. 561-ல் நடைபெற்றதாகக் குறிக்கப்பட்டுள்ளது (2 இராஜா. 25:27-30). ஆனால், எரேமியா எகிப்திற்குச் சென்றாரே (எரே. 43:1-7) அன்றி, ஒருபோதும் பாபிலோனுக்குச் செல்லவில்லை. மேலும் கி.மு. 561-ல், அவருக்கு வயது குறைந்தது 86-ஆக இருந்திருக்கும். உண்மையில், பெயர் அறியப்படாத இந்த ஆசிரியர் யார் என்பதை நாம் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. இராஜாக்கள் புத்தகங்களில் தீர்க்கதரிசிகளின் ஊழியங்கள் அதிகமாக வலியுறுத்தப்படுவதால், பாபிலோன் சிறையிருப்பில் வாழ்ந்த, தேவனால் பயன்படுத்தப்பட்ட இஸ்ரவேல் தேசத்துத் தீர்க்கதரிசி ஒருவரால் இது எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆசிரியர் இப்புத்தகத்தைத் தொகுக்க, “சாலமோனின் நடபடி புஸ்தகம்” (1 இராஜா. 11:41), “இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமம்” (1 இராஜா. 14:19; 15:31; 16:5, 14, 20, 27; 22:39; 2 இராஜா. 1:18; 10:34; 13:8, 12; 14:15, 28; 15:11; 15:21, 26, 31), மற்றும் “யூதா ராஜாக்களின் நாளாகமம்” (1 இராஜா. 14:29; 15:7, 23; 22:45; 2 இராஜா. 8:23; 12:19; 14:18; 15:6, 36; 16:19; 20:20; 21:17, 25; 23:28; 24:5) உட்படப் பலதரப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. மேலும், ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்திலுள்ள (36:1 – 39:8) தகவல்கள் 2 இராஜா. 18:9-20:19 பகுதிக்கும், எரேமியா 52:31-34 பகுதி 2 இராஜா. 25:27-29 பகுதிக்கும் ஆதாரமாக இருப்பதைக் காண்கிறோம். இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட ஒரு தேவ மனிதர், தமக்குக் கிடைத்த ஆதாரங்களைப் பயன்படுத்தி இதனை எழுதியிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

பின்னணியும் அமைப்பும்

புத்தகத்தின் ஆதாரப்பூர்வமான அமைப்பு மற்றும் ஆசிரியர் அமைத்த காட்சி அமைப்பு ஆகிய இரண்டின் தனித்தன்மையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இப்புத்தகத்தின் உள்ளடக்கங்கள், சம்பவங்களைக் கண்கண்ட சாட்சிகளாலும் அதில் பங்குபெற்றவர்களாலும் எழுதப்பட்டவை. இத்தகவல்கள் வரலாற்று ரீதியாகத் துல்லியமானவை. உதாரணமாக, இஸ்ரவேல் புத்திரர் குறித்த செய்திகள், தாவீதின் மரணம் மற்றும் சாலமோன் ராஜாவானது (கி.மு. 971) முதல், தேவாலயமும் எருசலேமும் பாபிலோனியர்களால் அழிக்கப்படுவது வரை (கி.மு. 586) இவை பேசுகின்றன. ஆக, இராஜாக்கள் புத்தகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்த தேசங்களையும் (இஸ்ரவேல் மற்றும் யூதா), தேவனுடைய பிரமாணத்திற்கும் அவருடைய தீர்க்கதரிசிகளுக்கும் கீழ்ப்படியாததால் சிறையிருப்புக்கு நேராகச் சென்ற அந்தத் தேசங்களின் வரலாற்றுத் தடங்களையும் ஆராய்கிறது.

இராஜாக்கள் புத்தகம் ஒரு வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல; அது விளக்கமளிக்கப்பட்ட வரலாறு. சிறையிருப்பிலிருந்த ஆசிரியர், இஸ்ரவேலின் வரலாற்றிலிருந்து ஜனங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அறிவுறுத்த விரும்பினார். குறிப்பாக, தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஏன் அவர்கள்மேல் வந்தது என்பதை அவர் விளக்கினார். ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் ராஜாக்கள் தங்கள் சிங்காசனத்தை நிலைப்படுத்தவும், தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியது அவசியம் என்பதை ஆசிரியர் முதலிலேயே வலியுறுத்தியிருந்தார் (1 இராஜா. 9:3-9). ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வெளிப்படும் சோகமான உண்மை என்னவென்றால், இஸ்ரவேலின் அனைத்து இராஜாக்களும், யூதாவின் பெரும்பாலான இராஜாக்களும் “கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தார்கள்” என்பதேயாகும். இந்தப் பொல்லாத இராஜாக்கள், தங்கள் ஜனங்களை விக்கிரகாராதனைக்கு விலக்கி வைக்காமல், அதனை ஆதரித்து விசுவாச துரோகிகளானார்கள்.

ராஜாக்கள் வழிதவறிய வேளையில், அவர்களும் பாவத்தில் வாழும் ஜனங்களும் மனந்திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தக் கர்த்தர் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பினார். இத்தீர்க்கதரிசிகளின் செய்திகள் நிராகரிக்கப்பட்டபடியால், ஜனங்கள் தேவனுடைய சமூகத்தைவிட்டு அகற்றப்படுவார்கள் எனத் தீர்க்கதரிசிகள் முன்னமே எச்சரித்தார்கள் (2 இராஜா. 17:13-23; 21:10-15). அவர்கள் உரைத்த ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் நிறைவேறியதுபோலவே, கர்த்தரிடமிருந்து வந்த இந்த நியாயத்தீர்ப்பின் வார்த்தையும் நிறைவேறியது (2 இராஜா. 17:5, 6; 25:1-11). ஆகையால், விக்கிரகாராதனையினாலேயே தாங்கள் தேவ தண்டனைக்கு ஆளானோம் என்பதை ஜனங்கள் உணந்துகொள்ள இப்புத்தகம் உதவியது. அதேவேளையில், தேவன் எவ்விதமாக ஆகாபுக்கும் (1 இராஜா. 21:27-29) யோயாக்கீனுக்கும் (2 இராஜா. 25:27-30) இரக்கம் காட்டினாரோ, அவ்விதமாக அவர்களுக்கும் இரக்கம் காட்ட விருப்பமாக இருந்தார் என்பதையும் அது விளக்கியது.

இராஜாக்கள் புத்தகத்தின் புவியியல் பின்னணியானது இஸ்ரவேல் தேசம் முழுவதும், அதாவது தாண் முதல் பெயெர்செபா வரை (1 இராஜா. 4:25) மற்றும் யோர்தானைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது. கி.மு. 971 முதல் கி.மு. 561 வரை படையெடுத்து வந்த நான்கு வல்லரசு தேசங்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தின. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் சாலமோன் மற்றும் யெரொபெயாம் (1 இராஜா. 3:1; 11:14-22, 40; 12:2; 14:25-27) அரசாண்ட காலங்களில் எகிப்து இஸ்ரவேலின் வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சிரியா (ஆராம்) தேசம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.மு. 890-800) இஸ்ரவேலின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.

கி.மு. 800-லிருந்து கி.மு. 750 வரையிலான ஐம்பது ஆண்டுகள் இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்திற்குச் சமாதானமும் சுபிட்சமுமான காலமாக இருந்தது. இதற்குக் காரணம், அசீரியர்கள் சிரியா தேசத்தாரைச் சமன்செய்து வந்தபடியால், தென்பகுதிக்குச் சிரியாவின் அச்சுறுத்தல் அக்காலங்களில் இருக்கவில்லை. ஆனால், திக்லாத்-பிலேயெசர் III (2 இராஜா. 15:19, 20, 29) காலத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டது. எட்டாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து கி.மு. ஏழாம் நூற்றாண்டு கடைசி வரைக்கும் அசீரியா இஸ்ரவேலருக்கு அச்சுறுத்தலாக இருந்து, இறுதியில் வட ராஜ்ஜியமான இஸ்ரவேலை மேற்கொண்டு கி.மு. 722-ல் அழித்துப்போட்டது (2 இராஜா. 17:4-6). பின்னர் கி.மு. 701-ல் எருசலேமை முற்றுகையிட்டது (2 இராஜா. 18:17-19:37). கி.மு. 612-லிருந்து கி.மு. 539 வரை பாபிலோன் பண்டைய தேசங்களுக்கு நடுவே ஆதிக்கம் செலுத்தியது. பாபிலோன் யூதா (தென் தேசம்) மீது மூன்று முறை படையெடுத்தது. மூன்றாவது முறை படையெடுத்தபோது, எருசலேமும் அதன் ஆலயமும் கி.மு. 586-ல் அழிக்கப்பட்டன (2 இராஜா. 24:1-25:21).

வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள்

கி.மு. 971 முதல் கி.மு. 561 வரை உள்ள இஸ்ரவேல் புத்திரரின் வரலாற்றில் இராஜாக்கள் புத்தகம் கவனம் செலுத்துகிறது. 1 இராஜாக்கள் 1:1-11:43 சாலமோன் அரியணை ஏறுவது மற்றும் ஆட்சி செய்வது குறித்துப் பேசுகிறது (கி.மு. 971-931). இரண்டாகப் பிரிக்கப்பட்ட இஸ்ரவேல் மற்றும் யூதா தேசங்களைக் குறித்து 1 இராஜா. 12:1 முதல் 2 இராஜா. 17:41 வரையுள்ள வசனங்களில் காண்கிறோம். வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்த ராஜாக்களைக் குறித்து விவரிப்பதில் ஆசிரியர் கருப்பொருட்களை அழகாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ஒவ்வொரு அரசாட்சியைப் பற்றி விளக்கம் தரும்போதும் ஒரு குறிப்பிட்ட இலக்கியக் கட்டமைப்பு பின்பற்றப்படுவதைப் பார்க்கிறோம்.

ஒவ்வொரு ராஜாவிற்கும்: 1) அவரது பெயர் மற்றும் முந்தைய ராஜாவிற்கும் இவருக்கும் உள்ள தொடர்பு; 2) அடுத்த தேசத்து ராஜாவின் ஆட்சி வருஷத்திற்கும், இவர் பொறுப்பேற்கும் நாளுக்கும் உள்ள தொடர்பு; 3) அரியணை ஏறும்போது அவரது வயது (யூதாவின் ராஜாக்களுக்கு மட்டும்); 4) ஆட்சி செய்த காலம்; 5) ஆட்சி செய்த இடம்; 6) தாயாரின் பெயர் (யூதாவின் ராஜாக்களுக்கு மட்டும்); மற்றும் 7) அவரது ஆட்சிக் குறித்த இறையியல் மதிப்பீடு ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு ராஜாவின் காலத்திலும் நடைபெற்ற சம்பவங்கள் விளக்கப்படுகின்றன. ஒவ்வொரு விளக்கமும் இச்செய்திகளுடன் முடிவடைகிறது: 1) ஆதார நூல்களின் விபரம், 2) மேலதிக வரலாற்றுக் குறிப்புகள், 3) மரணத்தைக் குறித்த அறிவிப்பு, 4) அடக்கம் செய்யப்படுதல், 5) வாரிசு குறித்த செய்தி. 2 இராஜா. 18:1-25:21 பகுதி, யூதா தேசம் தனித்து இருந்த காலத்தைக் குறித்துப் பேசுகிறது (கி.மு. 722-586). பாபிலோனிலிருந்து வெளியேறிய நாட்களில் நடந்தேறிய சம்பவங்கள் குறித்து இரண்டு இறுதிப் பத்திகள் பேசுகின்றன (2 இராஜா. 25:22-26; 27-30).

இராஜாக்கள் புத்தகத்தில் மூன்று முக்கிய இறையியல் கருப்பொருட்கள் வலியுறுத்தப்படுகின்றன:

  1. தேவனுடைய நியாயத்தீர்ப்பு: கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்தை, அவருடைய பிரமாணங்களுக்கு அவர்கள் கீழ்ப்படியாதபடியால் நியாயம் தீர்த்தார் (2 இராஜா. 17:7-23). பொல்லாத ராஜாக்களின் விசுவாசத் துரோகம் ஜனங்களை விக்கிரகாராதனைக்குள் வழிநடத்தியது. இதனால், கர்த்தர் தம்முடைய நீதியுள்ள கோபத்தை வெளிப்படுத்தினார்.

  2. தீர்க்கதரிசன நிறைவேறுதல்: மெய்யான தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறின (1 இராஜா. 13:2, 3; 22:15-28; 2 இராஜா. 23:16; 24:2). கர்த்தர் தமது நியாயத்தீர்ப்பின் எச்சரிக்கையைக் கொடுத்திருந்தாலும், அவர் தந்த வார்த்தையில் உண்மையாக இருந்தார் என்பதை இது உறுதிப்படுத்தியது.

  3. தாவீதுக்கு அருளப்பட்ட வாக்குதத்தம்: கர்த்தர் தாம் தாவீதுக்கு அளித்திருந்த வாக்குதத்தத்தை நினைவுகூர்ந்தார் (1 இராஜா. 11:12-13, 34-36; 15:4; 2 இராஜா. 8:19). தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தபோதிலும், இஸ்ரவேலின் மற்ற ராஜாக்களின் (யெரோபெயாம் I, உம்ரி, யெகூ) குடும்பத்தாருக்கு நடந்ததைப்போல தாவீதின் வம்சத்திற்குச் சம்பவிக்க அவர் விடவில்லை. புத்தகம் நிறைவுறும் வேளையில், தாவீதின் வம்சவழியினர் இன்னும் உயிருடன் இருப்பதைக் காண்கிறோம் (2 இராஜா. 25:27-30). இதனால் தாவீதின் “வித்திற்கு” நம்பிக்கை இருந்தது (2 சாமு. 7:12-16). இதிலிருந்து கர்த்தர் தாம் தரும் வார்த்தைகளைக் காப்பாற்றுபவர் என்பதையும், அவருடைய வார்த்தையின் மீது நாம் முழுமையாக நம்பிக்கை வைக்கலாம் என்பதையும் அறிகிறோம்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

இராஜாக்கள் புத்தகத்திற்கு விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்களில் பெரியது, இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் காலவரிசையை (Chronology) அமைப்பதாகும். புத்தகத்தில் காலவரிசை சம்பந்தப்பட்ட தரவுகள் நிறைந்து இருந்தாலும், அவற்றை ஒருங்கிணைப்பது கடினம்.

முதலாவது, தகவல்களில் மேலோட்டமான முரண்பாடு தோன்றுவது. உதாரணமாக, 1 இராஜா. 16:23-ல் "யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்" என்கிறது. ஆனால் 1 இராஜா. 16:29-ல், "ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய… ராஜாவானான்" என்று சொல்லும்போது, உம்ரி 7 வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தது போலத் தோன்றுகிறது.

இரண்டாவது, வேதாகமத்தைத் தவிர்த்து, கிரேக்க, அசீரிய மற்றும் பாபிலோனிய ஆதாரங்களை வானசாஸ்திரத் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கி.மு. 892 முதல் கி.மு. 566 வரையிலான தேதிகளை நாம் ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டறிய முடியும். உதாரணமாக, ஆகாப் மற்றும் யெகூ குறித்த குறிப்புகள் அசீரியக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அதனடிப்படையில், ஆகாப் கி.மு. 853-ல் மரித்தார் எனவும், யெகூ கி.மு. 841-ல் ஆட்சியைத் தொடர்ந்தார் எனவும் கணக்கிடலாம். இந்த நாட்களை மையமாக வைத்து, இஸ்ரவேல் தேசம் பிரிந்த வருடம் கி.மு. 931, சமாரியாவின் வீழ்ச்சி கி.மு. 722, எருசலேமின் வீழ்ச்சி கி.மு. 586 என நம்பப்படுகிறது.

காலக்கணக்கீட்டில் உள்ள முரண்பாடுகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்: இரு தேசத்து ராஜாக்களும் ஒரே நேரத்தில் (Co-regency) ஆட்சி செய்திருக்கலாம் (குறிப்பாகத் தகப்பனும் மகனும்), ராஜ்யபார ஆண்டுகளைக் கணக்கிடும் முறைகளில் (Accession vs Non-accession year dating) வேறுபாடுகள் இருந்திருக்கலாம், அல்லது இரு தேசங்களிலும் வெவ்வேறு நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

விளக்கம் அளிப்பதில் உள்ள இரண்டாவது சவால், சாலமோனின் ராஜ்ஜியத்திற்கும் ஆபிரகாம் மற்றும் தாவீதின் உடன்படிக்கைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்ததாகும். 1 இராஜா. 4:20-21 வசனங்கள் ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குதத்தத்தின் (ஆதி. 15:18-21; 22:17) நிறைவேறுதல் என்று சிலரால் விளக்கப்படுகிறது. ஆனால் எண்ணாகமம் 34:6-ல், வாக்களிக்கப்பட்ட தேசத்தின் மேற்கு எல்லை மத்தியதரைக்கடல் எனக் காண்கிறோம். சாலமோனின் காலத்தில் தீருவின் ராஜாவாகிய ஈராம் அப்பகுதியை ஆண்டார். சாலமோனின் அதிகாரம் பரந்திருந்தாலும், கர்த்தரால் ஆபிரகாமுக்கு உரைக்கப்பட்ட முழுமையான தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதலாகச் சாலமோனின் ராஜ்ஜியம் இருக்கவில்லை.

1 இராஜா. 5:5 மற்றும் 8:20-ல், சாலமோன் தாவீதுக்கு வாக்குதத்தம் செய்யப்பட்ட வம்சத்தில் வருவதாக உரிமை கோருவதைக் காண முடிகிறது (2 சாமு. 7:12-16). எனினும், அந்த வாக்குதத்தம் நிறைவேறக் கைக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் சாலமோனுக்குத் திரும்பவும் வலியுறுத்தப்பட்டன (1 இராஜா. 6:12). ஆனால், சாலமோன் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை (1 இராஜா. 11:9-13). உண்மையில், தாவீதின் வம்சத்தில் வந்த எந்தவொரு ராஜாவும் நிபந்தனைகள் யாவற்றையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. இது வருங்காலத் தீர்க்கதரிசிகளின் (ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் ஏனையோர்) வருகைக்கு அஸ்திபாரம் போட்டது. இத்தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலரின் எதிர்கால நம்பிக்கையான மேசியாவைக் குறித்ததான எதிர்பார்ப்பை உருவாக்கினர். அவரில் மட்டுமே இந்த வாக்குதத்தங்கள் யாவும் நிறைவேறும் என்பதைச் சுட்டிக்காட்டினர் (ஏசாயா 9:6, 7).


புத்தகத்தின் சுருக்கம் (Outline)

I. ஒன்றுசேர்ந்திருந்த ராஜ்ஜியம்: சாலமோனின் ஆட்சி (1 இராஜா. 1:1 – 11:43)

  • அ. சாலமோனின் எழுச்சி (1:1–2:46)

  • ஆ. சாலமோனின் ஞானம் மற்றும் செல்வச் செழிப்பின் ஆரம்பம் (3:1–4:34)

  • இ. தேவாலயம் கட்டுவதற்கு ஆயத்தப்படுதல் (5:1–18)

  • ஈ. தேவாலயம் மற்றும் சாலமோனின் அரண்மனையைக் கட்டுதல் (6:1–9:9)

  • உ. சாலமோனின் மேலதிகக் கட்டிடப் பணிகள் (9:10–28)

  • ஊ. சாலமோனின் ஞானம் மற்றும் செல்வச் செழிப்பின் உச்சகட்டம் (10:1–29)

  • எ. சாலமோனின் சரிவு (11:1–43)

II. ராஜ்ஜியம் பிரிக்கப்படுதல்: இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜாக்கள் (1 இராஜா. 12:1 – 2 இராஜா. 17:41)

  • அ. விக்கிரகாராதனை பெருகுதல்; யெரொபெயாம் (இஸ்ரவேல்) / ரெகோபெயாம் (யூதா) (12:1–14:31)

  • ஆ. யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்கள் (15:1–16:22)

  • இ. உம்ரியின் ராஜவம்சம் மற்றும் அதன் ஆதிக்கம்: பாகால் வணக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் (16:23 – 2 இராஜா. 13:25)

    1. பாகால் வணக்கத்தின் அறிமுகம் (16:23–34)

    2. பாகால் வணக்கத்திற்கு எலியாவின் எதிர்ப்பு (17:1 – 2 இராஜா. 1:18)

    3. மெய்யான தேவனை ஆராதிப்பதில் எலிசாவின் செல்வாக்கு (2 இராஜா. 2:1–9:13)

    4. இஸ்ரவேலில் பாகால் வணக்கம் தூக்கி எறியப்படுதல் (9:14–10:36)

    5. யூதாவில் பாகால் வணக்கம் தூக்கி எறியப்படுதல் (11:1–12:21)

    6. எலிசாவின் மரணம் (13:1–25)

  • ஈ. யூதா மற்றும் இஸ்ரவேலின் ராஜாக்கள் (2 இராஜா. 14:1–15:38)

  • உ. அசீரியர்களால் இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டு நாடு கடத்தப்படுதல் (16:1–17:41)

III. மீதமுள்ள ராஜ்ஜியம்: யூதாவின் ராஜாக்கள் (2 இராஜா. 18:1 – 25:21)

  • அ. எசேக்கியாவின் நீதிநிறைந்த ஆட்சி (18:1–20:21)

  • ஆ. மனாசே மற்றும் ஆமோனின் பொல்லாத ஆட்சி (21:1–26)

  • இ. யோசியாவின் நீதிநிறைந்த ஆட்சி (22:1–23:30)

  • ஈ. பாபிலோனியரால் தோற்கடிக்கப்பட்டு நாடு கடத்தப்படுதல் (23:31–25:21)

IV. முடிவுரை: ஜனங்களின் தொடர் கலகமும், கர்த்தரின் மாறாத இரக்கமும் (2 இராஜா. 25:22-30)


இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜாக்கள் பட்டியல்

ஒன்று சேர்ந்திருந்த ராஜ்ஜியம் வேதாகம வசனம்
சவுல் 1 சாமு. 9:1–31; 1 நாளா. 10:1–14
தாவீது 2 சாமுவேல்; 1 நாளா. 11:1–29:30
சாலமோன் 1 இராஜா. 2:10–11:43; 2 நாளா. 1:1–9:31
வடக்கு ராஜ்ஜியம் (இஸ்ரவேல்) வேதாகம வசனம்
யெரோபெயாம் I 1 இராஜா. 12:25–14:20
நாதாப் 1 இராஜா. 15:25–31
பாஷா 1 இராஜா. 15:33–16:7
ஏலா 1 இராஜா. 16:8–14
சிம்ரி 1 இராஜா. 16:15–20
திப்னி 1 இராஜா. 16:21, 22
உம்ரி 1 இராஜா. 16:23–28
ஆகாப் 1 இராஜா. 16:29–22:40
அகசியா 1 இராஜா. 22:51–53; 2 இராஜா. 1:1–18
யோராம் 2 இராஜா. 2:1–8:15
யெகூ 2 இராஜா. 9:1–10:36
யோவாகாஸ் 2 இராஜா. 13:1–9
யோவாஸ் 2 இராஜா. 13:10–25
யெரோபெயாம் II 2 இராஜா. 14:23–29
சகரியா 2 இராஜா. 15:8–12
சல்லூம் 2 இராஜா. 15:13–15
மெனாகேம் 2 இராஜா. 15:16–22
பெக்காகியா 2 இராஜா. 15:23–26
பெக்கா 2 இராஜா. 15:27–31
ஓசெயா 2 இராஜா. 17:1–41
தெற்கு ராஜ்ஜியம் (யூதா) வேதாகம வசனம்
ரெகோபெயாம் 1 இராஜா. 12:1–14:31; 2 நாளா. 10:1–12:16
அபியாம் 1 இராஜா. 15:1–8; 2 நாளா. 13:1–22
ஆசா 1 இராஜா. 15:9–24; 2 நாளா. 14:1–16:14
யெகோசாபாத் 1 இராஜா. 22:41–50; 2 நாளா. 17:1–20:37
யோராம் 2 இராஜா. 8:16–24; 2 நாளா. 21:1–20
அகசியா 2 இராஜா. 8:25–29; 2 நாளா. 22:1–9
அத்தாலியாள் (ராணி) 2 இராஜா. 11:1–16; 2 நாளா. 22:10–23:15
யோவாஸ் 2 இராஜா. 11:17–12:21; 2 நாளா. 23:16–24:27
அமத்சியா 2 இராஜா. 14:1-20; 2 நாளா. 25:1–28
உசியா (அசரியா) 2 இராஜா. 15:1–7; 2 நாளா. 26:1–23
யோதாம் 2 இராஜா. 15:32–38; 2 நாளா. 27:1–9
ஆகாஸ் 2 இராஜா. 16:1–20; 2 நாளா. 28:1–27
எசேக்கியா 2 இராஜா. 18:1–20:21; 2 நாளா. 29:1–32:33
மனாசே 2 இராஜா. 21:1–18; 2 நாளா. 33:1–20
ஆமோன் 2 இராஜா. 21:19–26; 2 நாளா. 33:21–25
யோசியா 2 இராஜா. 22:1–23:30; 2 நாளா. 34:1–35:27
யோவாகாஸ் 2 இராஜா. 23:31–33; 2 நாளா. 36:1–4
யோயாக்கீம் (எலியாக்கீம்) 2 இராஜா. 23:34–24:7; 2 நாளா. 36:5–8
யோயாக்கீன் 2 இராஜா. 24:8–16; 2 நாளா. 36:9,10
சிதேக்கியா 2 இராஜா. 24:18–25:21; 2 நாளா. 36:11–21

 

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.