வேதாகமம்

வேதாகமம் 'மட்டுமே' தேவனுடைய வார்த்தையா? அல்லது வேதாகமமும் 'கூட' தேவனுடைய வார்த்தையா?
ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 11 நிமிடங்கள்

 இந்த தலைப்பைப் பற்றிய சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடன் சேர்ந்து நீங்களும் சிந்திக்கும் விதமாக இந்த கட்டுரையை ஒரு கேள்வியுடன் நான் தொடங்க விரும்புகிறேன். எனவே நான் கேட்கும் இந்த கேள்வியை நீங்கள் கவனமாக புரிந்துக்கொண்டு பதிலளியுங்கள்.

கேள்வி என்னவென்றால்: வேதாகமம் 'மட்டுமே' தேவனுடைய வார்த்தையா? அல்லது வேதாகமமும் 'கூட' தேவனுடைய வார்த்தையா? இந்த இரண்டில் எது உண்மை?

நிச்சயமாக முதல் கூற்றுதான் உண்மை, அதாவது "வேதாகமம் மட்டுமே தேவனுடைய வார்த்தை" என்ற பதிலில் நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நம்புகிறேன். "வேதாகமமும் கூட தேவனுடைய வார்த்தை" என்று சொன்னால், வேதாகமம் அல்லாத மற்ற எதிலோ தேவனுடைய வார்த்தை இருக்கிறது என்று அர்த்தமாகிவிடும் அல்லவா?

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும் வேதாகமமே ஆதாரமாக இருக்கிறது என்றும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். வேதாகமத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு புதிய தகவலையோ, புதிய செய்தியையோ தேவன் நமக்குத் தருவதில்லை. பரிசுத்த வேதத்தில் உள்ள காரியங்களை அடிப்படையாகக் கொண்டே அவர் நம்மை நடத்துகிறார். வேத செய்தியைப் புரிந்துகொள்ளும் விதமாக நம் மனக்கண்களை பிரகாசமாக்குகிறார். வேதத்தில் உள்ள நியமங்களை ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைப்பூட்டி நம்மை நடத்துகிறார் என்று மிகவும் தெளிவாக நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். இந்த விளக்கங்கள் அனைத்தும் "வேதாகமம் மட்டுமே தேவனுடைய வார்த்தை" என்ற அடித்தளத்தில் இருந்து சொல்லப்பட்டவை ஆகும். அதாவது வேதாகமத்திற்கு வெளியே தேவன் புதிய செய்திகளையோ வெளிப்பாடுகளையோ தருவதில்லை என்பதே இதன் அடிப்படை.

ஆனால், இன்றைய கிறிஸ்தவ சமுகத்தில் பரவலாக என்ன சொல்லப்படுகிறதென்றால், "இல்லை இல்லை, தேவன் இன்றும் பேசுகிறார். வேதாகமத்தில் அவர் பேசிய எல்லா சூழ்நிலைகளையும் போலவே இன்றும் அவர் நம்மோடு பேசுகிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்குத் தேவையான வழிநடத்துதலை தரிசனங்கள் மூலமாகவும், சொப்பனங்கள் மூலமாகவும், மெல்லிய சத்தம் கேட்பதன் மூலமாகவும் அல்லது நம் உள்ளத்தில் ஒரு எண்ணத்தை உருவாக்குவதன் மூலமாகவும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். வேதாகமத்தில் இல்லாத தகவல்களையும் (எடுத்துக்காட்டாக, இன்று நான் எங்கே செல்ல வேண்டும், எந்த வேலையில் சேர வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் போன்ற வாழ்க்கையின் முடிவுகளை) அவர் எனக்குச் சொல்லி நடத்துகிறார்" என்கிறார்கள். இது பரிசுத்த ஆவியானவரோடு அவர்களுக்கு உள்ள ஐக்கியத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறார்கள்.

இந்த அபிப்பிராயத்தை நாம் ஏற்றுக்கொண்டால், "வேதாகமம் மட்டுமே தேவனுடைய வார்த்தை" என்று சொல்ல முடியாது. "வேதாகமமும் கூட தேவனுடைய வார்த்தை, இன்றும் தேவன் தனது வார்த்தையின் வெளிப்பாட்டை நமக்குத் தருகிறார்" என்று நம்ப வேண்டியதிருக்கும்.

அதனால்தான், இந்த கட்டுரையில் "வேதாகமத்தின் நியமத்தன்மை" (வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ தன்மை) என்று இதற்கு தலைப்பை வைத்தேன். வேதாகமம் முழுமையானது. இந்த 66 புத்தகங்களிலேயே தேவனுடைய வார்த்தை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. இது தவிர வேறு எங்கேனும் தேவ வார்த்தை இருப்பதாக யாராவது நம்பினால் (அதாவது இன்றும் தேவன் புதிதாக தன் வார்த்தையை வெளிப்படுத்துகிறார் என்று நம்பினால்), அதையும் தேவனுடைய வார்த்தையாகவே நாம் அங்கீகரிக்க வேண்டும். அப்படியானால், இப்போது வரும் வெளிப்பாடுகளை 67-வது புத்தகமாக ஏன் வேதாகமத்தில் சேர்க்கக்கூடாது? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை ஏற்படும்.

அதற்குச் சிலரின் பதில் எப்படி இருந்தது என்றால், "இல்லை இல்லை, வெளிப்பாடு என்பது இப்போது வராது. வெளிப்படுத்தின விசேஷம் 22:18-ல் இதோடு எதையும் கூட்டக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதே! எனவே வெளிப்பாடுகள் அதோடு நின்றுவிட்டன. அதை நாங்கள் வேதாகமத்தில் சேர்க்க மாட்டோம்" என்கிறார்கள். ஆகையால், இப்போது அவர்களுக்கு வருவதாகச் சொல்லப்படுவதை "வெளிப்பாடு" என்று சொல்வதை மாற்றிவிட்டு, அதை "வழிநடத்துதல்" என்று புதிய பெயர் வைக்கிறார்கள்.

ஆனால் நான் அப்படிப்பட்டவர்களை பார்த்து கேள்வி எழுப்புவது என்னவென்றால், தேவன் எப்போது வெளிப்பாடுகளைக் கொடுத்தாலும் அது எதற்காக? வழிநடத்துதலுக்காகவே கொடுத்தார். இன்றும் அவர் பழைய ஏற்பாட்டில் பேசியது போலவும், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களிடம் பேசியது போலவும் பேசுகிறார் என்றால், அதை ஏன் "வெளிப்பாடு" என்று அழைக்கக்கூடாது? நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 22:18-யை காட்டி வேதத்தில் சேர்க்கக்கூடாது என்கிறீர்கள். ஆனால் உபாகமம் 4:2-லும் வார்த்தையோடு எதையும் கூட்டக்கூடாது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு யோசுவா முதல் அநேக புத்தகங்களைச் சேர்த்தார்கள் இல்லையா? அதேபோல நீதிமொழிகள் 30:6-லும் எதையும் கூட்டக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் அதன்பிறகு பிரசங்கி முதல் மல்கியா வரை சேர்த்தார்கள். புதிய ஏற்பாட்டையும் சேர்த்தார்கள்.

எனவே, வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது என்ற வாதம் அர்த்தமற்றது. தேவனுடைய வெளிப்பாடுகள் எப்பொழுதும் ஒரே மதிப்புடைய வார்த்தைகள். ஆகையால், தேவன் இன்றும் அதே வழியில் பேசுகிறார் என்றால், அவற்றை ஏன் வேதமாக தொகுக்கக்கூடாது? இந்த 66 புத்தகங்களோடு தேவனுடைய வெளிப்பாடுகள் முடிந்துவிட்டன என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? இது வேதாகமத்தின் நியமத்தன்மையை சவால் செய்யும் ஒரு பிரச்சினையாகும்.

இந்த "கெனோனிசிட்டி" என்றால் என்ன? வேதாகமத்தில் எந்தப் புத்தகங்கள் இருக்க வேண்டும், எவை இருக்கக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் முறை. திருச்சபை வரலாற்றைப் பார்த்தால், ஆதி சபை முதல் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் 'நாஸ்டிக்ஸ்' (Gnostics - ஞானவாதிகள்) என்ற ஒரு கூட்டத்தார் இருந்தார்கள். தங்களுக்கு மட்டுமே மறைவான சத்யங்கள் தெரியும் என்று கூறிக்கொண்டு, அவர்கள் அப்போஸ்தலர்களின் பெயர்களில் சில புத்தகங்களை எழுதி சபைகளில் பரப்பினார்கள். அப்போது சபைக்குள் எந்தப் புத்தகம் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது, எது போலியானது என்ற குழப்பம் வந்தது.

அந்த நேரத்தில் எந்தெந்த புத்தகங்கள் அதிகாரப்பூர்வமானவை என்பதை முடிவு செய்ய சபை ஒன்று கூடி விவாதித்தது. அநேக விவாதங்களுக்குப் பிறகு, கி.பி 3 அல்லது 4-ம் நூற்றாண்டில் சபையானது தற்போதைய 27 புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களே அதிகாரப்பூர்வமானவை என்று முடிவு செய்தனர். இதை வைத்து சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், "பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை நாங்கள் விசுவாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரே சபை பிதாக்களை வழிநடத்தி, இந்த 27 புத்தகங்கள் தான் வேதத்தில் இருக்க வேண்டும் என்று காட்டினார். ஒருவேளை ஆவியானவரின் வழிநடத்துதலை நாம் நம்பவில்லை என்றால், இந்த 27 புத்தகங்களை மனிதர்கள் தான் தீர்மானித்தார்கள் என்று ஆகிவிடும்" என்று வாதிடுகிறார்கள்.

இவர்களுடைய வாதம் என்னவென்றால், மனிதர்கள் கூடி சபையாக எந்தப் புத்தகம் வேதாகமத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள் என்பது. ஆனால் எனது முக்கியமான கேள்வி இதுதான்: இந்த 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களில் 27 புத்தகங்கள் தேவனுடைய வார்த்தை என்று மனிதர்கள் தீர்மானித்தார்களா? அல்லது அந்த 27 புத்தகங்களும் இயல்பாகவே தேவனுடைய வார்த்தையாக, தேவன் அருளிய வெளிப்பாடாக இருந்ததனால், அவற்றைச் திருச்சபையானது அடையாளம் கண்டு அங்கீகரித்ததா?

வேதாகமம் என்பது "தன்னையே நிரூபிக்கும் தன்மை" கொண்டது. புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்களும் அதிகாரப்பூர்வமானவை, தேவனே நேரடியாக எழுதச் செய்த புத்தகங்கள் என்பதற்கு வேதத்திற்குள்ளேயே அதாவது வசனத்திலே சான்றுகள் இருக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டும்.

புதிய ஏற்பாட்டின் நியமத்தன்மை (Canonicity) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டது. பழைய ஏற்பாட்டில் மோசே போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

(உபாகமம் 18:18): "உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார்."

இந்த தீர்க்கதரிசனத்தின்படி வரும் புதிய தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவே. அவர் வரும்போது, அவர் விடுதலையை மட்டும் கொண்டுவரவில்லை, அவர் புதிய வெளிப்பாடுகளையும் (New Revelations) கொண்டு வருகிறார். ஏசாயா 11:4-லும், வெளிப்படுத்தின விசேஷம் 1:16-லும் அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் (தேவ வார்த்தை) புறப்பட்டது என்று வாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து புதிய வெளிப்பாடுகளை நேரடியாகப் போதித்தார். அதோடு நிற்காமல், அந்த செய்திகளைத் தொடர்ந்து உலகிற்கு அறிவிப்பதற்காக, தம்முடன் இருந்த அப்போஸ்தலர்களை சாட்சிகளாக நியமித்தார்.

(யோவான் 15:27): "நீங்களும் ஆதிமுதலாய் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்று இயேசு கூறுகிறார்.

மேலும் யோவான் 21:24 கூறுகிறது: "இந்தச் சங்கதிகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து, இவைகளை எழுதின சீஷன் இவனே; இவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்." அப்போஸ்தலர்கள் தாங்கள் கண்டதை, கேட்டதை சாட்சியாக எழுதினார்கள்.

அப்போஸ்தலர் 1:22, "அவர் உயிர்த்தெழுந்ததைக் குறித்து, நம்மோடேகூடச் சாட்சியாக ஒருவன் ஏற்படுத்தப்படவேண்டும்" என்றும், அப்போஸ்தலர் 26:16-ல் அப்போஸ்தலனாகிய பவுலை நோக்கி, "நீ கண்டவைகளுக்கும், நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளுக்கும் உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்" என்றும் தேவன் கூறுவதை நாம் பார்க்கிறோம்.

அப்போஸ்தலர்கள் எழுதும்போதே அவை தேவனுடைய வார்த்தை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

(2பேதுரு 3:2): "பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி..." இங்கே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கு இணையாக அப்போஸ்தலர்களின் கட்டளைகளை பேதுரு வைக்கிறார்.

மேலும், (2பேதுரு 3:15,16): "...நமது பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே உங்களுக்கு எழுதியிருக்கிறான். வித்யாஈனரும் உறுதியற்றவர்களும், மற்ற வேதவாக்கியங்களை புரட்டுகிறதுபோல, தங்களுக்குக் கேடுவர இவைகளையும் புரட்டுகிறார்கள்." இங்கே கவனித்துப் பாருங்கள், பவுல் எழுதிய கடிதங்களை "மற்ற வேதவாக்கியங்களுக்கு" (Scriptures) நிகராகப் பேதுரு குறிப்பிடுகிறார். இது பிற்காலத்தில் யாரோ சபை பிதாக்களால் தீர்மானிக்கப்பட்டது அல்ல; எழுதப்பட்ட காலத்திலேயே அது தேவனுடைய வார்த்தையாக அங்கீகரிக்கப்பட்டது.

(எபிரெயர் 2:3,4) "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்; இந்த இரட்சிப்பு முதலாவது கர்த்தரால் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டது. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்திருக்கிறார்."

இங்கே எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் அப்போஸ்தலர்களிடமிருந்து (கேட்டவர்களாலே) நேரடியாக செய்தியைப் பெற்றதைப் பதிவு செய்கிறார். இது அப்போஸ்தலர்கள் காலத்திலேயே எழுதப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவல் என்பதை நிரூபிக்கிறது.

எனவே, எந்தப் புத்தகங்களில் தேவனுடைய வார்த்தை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் திறன் அன்றைய ஆதி சபைக்கே இருந்தது. அப்போஸ்தலர்கள் எழுதிய கடிதங்களும், அப்போஸ்தலர்களோடு நேரடி தொடர்பில் இருந்தவர்கள் (மாற்கு, லூக்கா போன்றவர்கள்) எழுதிய புத்தகங்களுமே தேவனுடைய வார்த்தை என்று அவர்கள் ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டார்கள். மனிதர்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கூடி முடிவு செய்தார்கள் என்பதை விட, வேதமே தனக்கான அதிகாரத்தை (Canonicity) தன்னுள் கொண்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் வேதத்திற்குள்ளேயே பலமாக இருக்கின்றன.

இதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால், இன்றும் யாராவது ஒரு தரிசனத்தையோ அல்லது ஒரு மெல்லிய சத்தத்தையோ கேட்டு, "தேவன் என்னிடம் பேசினார்" என்று சொன்னால், அதை தேவனுடைய வார்த்தைக்கு இணையாக வைத்து முழு வேதாகமத்தையுமே கேள்விக்குறியாக்கும் மாபெரும் ஆபத்து இருக்கிறது. ஆகையால், ஆவியானவர் நடத்துவார் என்பது உண்மைதான், ஆனால் அந்த வழிநடத்துதல் முழுமையாக வேதாகமத்தின் அடிப்படையிலேயே இருக்குமே தவிர, வேதத்திற்கு அப்பாற்பட்ட புதிய வெளிப்பாடுகளாக இருக்காது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

இந்த காரியத்தில் இன்றைய சபைகள் விழிப்பாக இருக்க வேண்டும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.