படிப்புகள்: 586
Print

தலைப்பு: 1 மற்றும் 2 சாமுவேல் - ஒரு அறிமுகம்

பழைய எபிரேயக் கையெழுத்துப் பிரதிகளில், முதல் மற்றும் இரண்டாம் சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாகவே கருதப்பட்டன. பிற்காலத்தில், கிரேக்க மொழிபெயர்ப்பாளர்கள் 'செப்டுவாஜிண்ட்' (LXX) மொழிபெயர்ப்பில் இதனை இரண்டு புத்தகங்களாகப் பிரித்தனர். இப்பிரிவினை லத்தீன் வுல்கேட் (Vg), ஆங்கில மொழிபெயர்ப்புகள் மற்றும் நவீன எபிரேய மொழிபெயர்ப்புகளிலும் தொடர்வதைக் காண்கிறோம். இஸ்ரவேல் தேசத்தில் ராஜாக்களை அபிஷேகித்து, அரசாட்சியை ஏற்படுத்த தேவன் எடுத்துப் பயன்படுத்தின தீர்க்கதரிசியின் பெயரான “சாமுவேல்” என்பதையே, ஒரே புத்தகமாக இருந்த பழைய எபிரேயக் கையெழுத்துப் பிரதிகள் தலைப்பாகக் கொண்டிருந்தன.

பின்னர், எபிரேய நூல்களும் ஆங்கிலப் பதிப்புகளும் பிரிக்கப்பட்ட புத்தகங்களை '1 மற்றும் 2 சாமுவேல்' என அழைக்க ஆரம்பித்தன. LXX மொழிபெயர்ப்பு இப்புத்தகங்களுக்கு “முதல் மற்றும் இரண்டாம் ராஜ்ஜியத்தின் புத்தகங்கள்” எனவும், வுல்கேட் “முதல் மற்றும் இரண்டாம் ராஜாக்கள்” என்றும் பெயரிட்டன. இதனால், அடுத்து வரும் 1 மற்றும் 2 ராஜாக்கள் புத்தகங்களுக்கு “மூன்றாம் மற்றும் நான்காம் ராஜாக்கள்” என்ற பெயர் வழங்கப்பட்டது.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

யூதர்களின் பாரம்பரியம் “சாமுவேல்” புத்தகத்தை எழுதியது சாமுவேல் தீர்க்கதரிசி எனக் குறிப்பிடுகிறது. தமிழ் வேதாகமத்தில் 1 நாளாகமம் 29:29-30 வசனங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இதனைச் சாமுவேல், நாத்தான் மற்றும் காத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், முழு புத்தகத்திற்கும் சாமுவேல் ஆசிரியராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவரது மரணம் 1 சாமுவேல் 25:1-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தாவீதின் ஆட்சிக்கால சம்பவங்கள் நடைபெறுவதற்கு முந்தைய காலகட்டமாகும். மேலும், நாத்தான் மற்றும் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் ஆகியோர் தாவீதின் நாட்களில் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளாக இருந்தனர். எனவே, சாமுவேல் இப்புத்தகத்தை எழுதத் தொடங்கும்போது இவர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் தீர்க்கதரிசிகளின் குறிப்புகள் (Records) 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களை எழுதப் பயன்பட்டிருக்கலாம்.

உண்மையில் சாமுவேல் புத்தகத்தைத் தொகுத்து எழுதியவர் யார் என்பது அறியப்படாததாகவே இருக்கிறது. இப்புத்தகம் பெயர் அறியப்படாத ஒரு ஆசிரியரால் தொகுக்கப்பட்டு நம் கரங்களில் தவழ்கிறது. இதனை எழுதிய ஆசிரியர் கர்த்தருக்கென்று பேசுகிறார். மேலும், இதில் விவரிக்கப்படும் சம்பவங்களுக்குத் தெய்வீகத்தன்மை வாய்ந்த விளக்கத்தை அவர் தருகிறார்.

சாமுவேல் புத்தகம் தொகுத்து எழுதப்பட்ட சரியான தேதி இதில் குறிப்பிடப்படவில்லை. எனினும், இஸ்ரவேல் மற்றும் யூதா என ராஜ்ஜியங்கள் பிரிக்கப்பட்ட கி.மு. 931-க்குப் பிறகு இது எழுதப்பட்டது என்பது மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறது. ஏனெனில், இஸ்ரவேல் வேறு, யூதா வேறு என்று பிரித்துக்காட்டும் தெளிவான வேதாகமக் குறிப்புகள் பல பகுதிகளில் காணப்படுகின்றன (1 சாமு. 11:8; 17:52; 18:16; 2 சாமு. 5:5; 11:11; 12:8; 19:42-43; 24:9). “சிக்லாக் இந்நாள்வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது” என நாம் 1 சாமுவேல் 27:6-ல் காண்பது, சாலொமோனின் காலத்திற்குப் பின் இப்புத்தகம் எழுதப்பட்டது என்பதற்கான மிகத் தெளிவான ஆதாரமாகும்.

எவ்வளவு காலத்திற்குப் பின் எழுதப்பட்டது என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை. ஆனாலும், எபிரேய வேதாகமத்தில் 'முந்தைய தீர்க்கதரிசிகள்' (Former Prophets) என்ற வரிசையில் - யோசுவா, நியாயாதிபதிகள், 1 மற்றும் 2 ராஜாக்கள் ஆகியவற்றுடன் 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய தலைமுறைத் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஓர் அணியில் சேர்க்கப்படுமானால், சாமுவேல் புத்தகம் இஸ்ரவேலர் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில் (கி.மு. 560-540) எழுதப்பட்டிருக்கலாம். இருப்பினும், சாமுவேல் புத்தகத்தின் எழுத்து நடை ராஜாக்கள் புத்தகத்தைவிட வேறுபட்டு இருப்பதால், ராஜ்ஜியங்கள் பிரிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட காலகட்டத்திற்கு முன்பு (கி.மு. 931 - 722) இது எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் இது முந்தைய தீர்க்கதரிசிகளின் தொகுப்புடன் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

பின்னணி மற்றும் அமைப்பு

1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான சம்பவங்கள், இஸ்ரவேல் தேசத்தின் மைய மலைப்பகுதிகளில் நடைபெற்றிருக்க வேண்டும். இஸ்ரவேல் தேசம் என்பது வடக்கே எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து (1 சாமு. 1:1; 9:4), தெற்கே யூதா மலைப்பிரதேசம் வரை (யோசுவா 20:7, 21:11) இடைப்பட்ட பகுதியாகும். இது வடக்கிலிருந்து தெற்கே சுமார் 90 மைல்கள் தூரமும், கிழக்கிலிருந்து மேற்கே 15 முதல் 35 மைல்கள் தூரமும் கொண்ட இடைப்பட்ட பகுதியாகும். இந்த மைய மலைப்பகுதிகளின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1,500 முதல் 3,300 அடி வரை இருக்கும்.

1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய பட்டணங்கள்:

1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களில், சாமுவேல் பிறந்த வருடமான கி.மு. 1105-லிருந்து (1 சாமு. 1:1-28), தாவீது தன் கடைசி வார்த்தைகளைப் பேசிய (2 சாமு. 23:17) வருடமான கி.மு. 971 வரை உள்ள நாட்களில் இந்தச் சம்பவங்கள் நிறைவேறின. ஆக, இப்புத்தகம் ஏறக்குறைய 135 வருட வரலாற்றை விவரிக்கிறது. இந்த ஆண்டுகளில், இஸ்ரவேல் ஜனங்கள் “நியாயாதிபதிகளின்” விசாரிப்புக்குக் கீழ் ஒரு தளர்வாக இணைக்கப்பட்ட கோத்திரங்களாக இருந்து, பின்னர் மறுரூபமடைந்து, மையப்படுத்தப்பட்ட ராஜாவின் அரசாட்சிக்குள் ஒன்று சேர்ந்த தேசமாக மாறினர். அவர்கள் கி.மு. 1105-1030 வரை சாமுவேலை நோக்கிப் பார்த்தனர்; பின்னர் கி.மு. 1050-1011 வரை சவுல் ஆட்சி செய்தார்; அதற்கடுத்து தாவீது கி.மு. 1011-971 வரை ஒன்றுபட்டப் பேரரசுக்கு ராஜாவாக வீற்றிருந்து ஆட்சி செய்தார்.

வரலாறு மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

1 சாமுவேல் புத்தகம் ஆரம்பிக்கும் வேளையில், இஸ்ரவேலர் ஆவிக்குரிய ஜீவியத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். ஆசாரியத்துவம் சீர்கெட்டுப் போயிருந்தது (1 சாமு. 2:12-17; 22-26). உடன்படிக்கைப் பெட்டி ஆசரிப்புக் கூடாரத்தில் இல்லை (1 சாமு. 4:3-7:2). இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர் (1 சாமு. 7:3,4). நியாயாதிபதிகள் நேர்மையற்றவர்களாக இருந்தனர் (1 சாமு. 8:2,3). தேவபயத்துடன் இருந்த சாமுவேல் (1 சாமு. 12:23) மற்றும் தாவீதினால் (1 சாமு. 13:14) இந்நிலைமை மாறியது. இரண்டாம் சாமுவேல் புத்தகம், “கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின் மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது” (2 சாமு. 24:25) என முடிவடைகிறது.

1 மற்றும் 2 சாமுவேல் விவரிக்கும் ஆண்டுகளில், பண்டைய உலகில் இருந்த சாம்ராஜ்ஜியங்கள் பலவீனப்பட்டு இருந்தன. எகிப்து அல்லது மெசொப்பொத்தேமியா வல்லரசுகள், பாபிலோன் மற்றும் அசீரியா ஆகிய எந்தவொரு தேசமும் இஸ்ரவேலருக்கு அச்சுறுத்தலாக இல்லை. இஸ்ரவேலருக்கு விரோதிகளாக இருந்த இரண்டு முக்கியத் தேசங்கள் – மேற்கில் பெலிஸ்தியர் (1 சாமு. 4:7, 13; 14; 17; 23; 31; 1 சாமு. 5) மற்றும் கிழக்கில் அம்மோனியர்கள் (1 சாமு. 11; 2 சாமு. 10-12) ஆவர். திரளான பெலிஸ்தியர், ஏஜியன் (Aegean) தீவுகள் மற்றும் ஆசியா மைனர் பகுதிகளிலிருந்து 12-ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்திருந்தனர். எகிப்திற்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அவர்கள் கானான் தேசத்து மத்தியதரைக்கடல் பகுதியில் ஏற்கெனவே இருந்த பெலிஸ்தியருடன் சேர்ந்து குடியேறினர்.

பெலிஸ்தியர் இரும்பைப் பயன்படுத்துவதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இது அவர்களை இராணுவ மற்றும் பொருளாதார பலத்தில் இஸ்ரவேலரைக் காட்டிலும் மேலாக வைத்தது (1 சாமு. 13:19-22). அம்மோனியர்கள் லோத்துவின் வழிவந்தவர்கள் (ஆதி. 19:38). இவர்கள் யோர்தான் பீடபூமிப் பகுதியில் வாழ்ந்தவர்கள். தாவீது இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றியிருந்த தேசங்களை வென்றதோடு (2 சாமு. 8:2-14), பெலிஸ்தியர் (2 சாமு. 8:1) மற்றும் அம்மோனியரையும் மேற்கொண்டார் (2 சாமு. 12:29-31).

1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களில் நான்கு இறையியல் கருப்பொருட்கள் மேலோங்கி நிற்கின்றன:

  1. தாவீதின் உடன்படிக்கை: அன்னாள் தனது ஜெபத்தில் குறிப்பிடும் “அபிஷேகிக்கப்பட்ட” ராஜா (1 சாமு. 2:10) மற்றும் தாவீதின் பாடல்களை (2 சாமு. 22:51) மையமாகக் கொண்டு இப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தேவனுக்கு விரோதமாக எழும்பும் தேசங்களை ஜெயிக்கும் ராஜாவாகிய மேசியாவைக் குறிக்கிறது (ஆதி. 49:8-12; எண். 24:7-9; 17-19). கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின்படி, தாவீதின் வம்சத்தில் மேசியா வருவார்; அவர் வந்து தாவீதின் சிங்காசனத்தைச் சதாகாலங்களுக்கும் நிலைப்படுத்துவார் (2 சாமு. 7:12-16). சாமுவேல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தாவீதின் வாழ்க்கை குறிப்புகள், எதிர்காலத்தில் அவரது வம்சவழியில் வரும் குமாரனுக்கு (அதாவது கிறிஸ்துவிற்கு) நிழலாட்டமாக இருக்கின்றன.

  2. தேவனுடைய அரசாட்சி: இப்புத்தகங்களில் தேவனுடைய இறையாண்மை மிகத் தெளிவாகக் காணப்படுகிறது. உதாரணமாக, அன்னாளின் ஜெபத்தைக் கேட்டுப் பதிலாகச் சாமுவேல் பிறந்தது (1 சாமு. 1:19-20), மற்றும் சிறியவனாகிய தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டு (1 சாமு. 16:12,13) இஸ்ரவேலை ஆட்சி செய்தது ஆகியவற்றைப் பார்க்கும்போது, தேவனுடைய திட்டத்தை எதுவும் தடுக்க முடியாது என்பது தெளிவாகிறது.

  3. பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு: தேவன் நியமித்த பணிகளைச் செய்யும் மனுஷருக்கு அதிகாரம் அளிப்பதில் பரிசுத்த ஆவியானவர் இறங்கிச் செயல்படுவதைக் காண்கிறோம். சவுலும், தாவீதும் ராஜாக்களாக அபிஷேகிக்கப்பட்டவுடன் கர்த்தருடைய ஆவியானவர் அவர்கள் இருவர் மீதும் இறங்கினதைக் காண்கிறோம் (1 சாமு. 10:10; 16:13). பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அவர்களுக்குத் தீர்க்கதரிசன வார்த்தைகளை உரைக்கவும் (1 சாமு. 10:6), யுத்தத்தில் அவர்களுக்கு ஜெயத்தைத் தரவும் உதவியது (1 சாமு. 11:6).

  4. பாவத்தின் விளைவுகள்: சாமுவேல் புத்தகங்கள் தனிப்பட்ட நபர் அல்லது தேசத்தின் பாவத்தினால் விளையும் விளைவுகளைத் தெளிவாக நிரூபிக்கின்றன. ஏலி மற்றும் அவனது குமாரர்களின் பாவங்கள் அவர்களின் மரத்திற்குக் காரணமாயின (1 சாமு. 2:12-17; 22-25; 3:10-14; 4:17-18). உடன்படிக்கைப் பெட்டியினிடத்தில் அதற்குரிய பயபக்தியைச் செலுத்தாதபடியால், அநேக இஸ்ரவேலர்கள் மரித்துப் போக நேரிட்டது (1 சாமு. 6:19; 2 சாமு. 6:6,7). சவுலின் கீழ்ப்படியாமை, இஸ்ரவேலின் ராஜ்ஜியபாரத்திலிருந்து அவரை நிராகரிக்கப்பண்ணி, கர்த்தர் அவரை நியாயந்தீர்க்கும்படிச் செய்தது (1 சாமு. 13:9-14; 15:8,9,20-23). தாவீது தான் செய்த விபசாரம் மற்றும் கொலைக் குற்றத்தை உணர்ந்து அறிக்கை செய்தபடியினால் மன்னிப்பைப் பெற்றுக் கொண்டார். எனினும், அப்பாவத்தின் தவிர்க்கமுடியாத மற்றும் அழிவுகரமான விளைவுகளை அவர் சந்திக்கவேண்டியிருந்தது (2 சாமு. 12:14).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

சாமுவேலின் புத்தகங்களுக்கு விளக்கம் அளிப்பதில் அநேக சவால்கள் உள்ளன. அவைகளை இங்கே விரிவாகக் காணலாம்: