1 & 2 நாளாகமம் - ஓர் அறிமுகம்
தலைப்பு வரலாறு மூல எபிரேயப் பிரதிகளில் இப்புத்தகத்திற்கு “காலவரிசை நிகழ்வுகள்” (Chronicles) அல்லது "நாட்குறிப்புகள்" என்றே தலைப்பிடப்பட்டிருந்தது. கி.மு. 200-ல் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடான ‘செப்டுவாஜிண்ட்’ (Septuagint), இதனை முதல் மற்றும் இரண்டாம் நாளாகமப் புத்தகங்களாகப் பிரிக்கும் வரைக்கும், இது ஒரே புத்தகமாகவே இருந்தது. அந்த வேளையில், 1, 2 சாமுவேல் மற்றும் 1, 2 ராஜாக்கள் புத்தகங்களில் விடுபட்ட செய்திகள் இதில் இடம் பெற்றிருப்பதால், “விடுபட்டவைகள்” (The things omitted) என்ற அர்த்தம் தொனிக்கும் சற்றே துல்லியமற்ற தலைப்பு இதற்குத் தரப்பட்டிருந்தது. கி.பி. 400-ல் உருவான ஜெரோமின் இலத்தீன் வுல்கேட் (Jerome's Latin Vulgate) மொழிபெயர்ப்பு, “புனித வரலாற்றின் நாளாகமம்” என்று முழுமையான தலைப்பைக் கொடுத்தது. அதிலிருந்தே நாம் பயன்படுத்தும் “நாளாகமம்” என்ற தலைப்பு நிலைபெற்றது.
ஆசிரியர் மற்றும் காலம் யூத பாரம்பரியத்தின்படி, ஆசாரியனாகிய எஸ்றாவே இதன் ஆசிரியர் என்று பலமாக நம்பப்படுகிறது (எஸ்றா 7:1-6). இருப்பினும், முதல் அல்லது இரண்டாம் நாளாகமப் புத்தகங்களில் இவர்தான் ஆசிரியர் என்பதற்கான நேரடி ஆதாரம் இல்லை. இதிலுள்ள குறிப்புகள் கி.மு. 450 முதல் 430 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1 நாளாகமம் 1-9 அதிகாரங்களில் காணப்படும் வம்சாவளிப் பட்டியல், இப்புத்தகம் கி.மு. 450-க்குப் பின் எழுதப்பட்டிருக்கலாம் என்று கணிக்க வைக்கிறது. புதிய ஏற்பாட்டில், 1 அல்லது 2 நாளாகமத்திலிருந்து நேரடியாக எந்த மேற்கோளும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுப் பின்னணி மற்றும் அமைப்பு பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்கள், மூன்று கட்டங்களாக வாக்குத்தத்த தேசத்திற்குத் திரும்புவதே இப்புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணியாகும்:
-
செருபாபேலின் தலைமையில் (எஸ்றா 1-6) - கி.மு. 538
-
எஸ்றாவின் தலைமையில் (எஸ்றா 7-10) - கி.மு. 458
-
நெகேமியாவின் தலைமையில் (நெகேமியா 1-13) - கி.மு. 445
இவை இஸ்ரவேலின் முந்தைய வரலாற்றாகும். 2 ராஜாக்கள், எரேமியா, எசேக்கியேல், தானியேல் மற்றும் ஆபகூக் ஆகிய புத்தகங்களில் முன்னறிவிக்கப்பட்டபடியே, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட சம்பவத்தையும் (கி.மு. 605 – 538) இது கருத்தில் கொள்கிறது. ஆகாய், சகரியா மற்றும் மல்கியா ஆகியோர் இந்த மறுசீரமைப்புக் காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் ஆவர்.
எழுபது வருட சிறையிருப்பிலிருந்து (கி.மு. 538) திரும்பிய யூதர்கள், தாவீதின் காலத்தில் (கி.மு. 1011-971) இருந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தேசத்தையே கண்டார்கள்:
-
இஸ்ரவேலுக்கென்று சொந்த ராஜா இல்லை; மாறாகப் பெர்சியப் பேரரசனே அவர்களை ஆண்டான் (எஸ்றா 5:3; 6:6).
-
எருசலேம் பாதுகாப்பற்றுக் கிடந்தது; நெகேமியா அதன் அலங்கங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது (நெகேமியா 1-7).
-
தேவாலயம் இடிக்கப்பட்டிருந்தது; செருபாபேல், சாலமோன் கட்டிய ஆலயத்திற்கு ஒப்பான ஒரு ஆலயத்தைக் கட்ட அஸ்திபாரம் போட்டான் (எஸ்றா 3).
-
யூதர்கள் அப்பகுதிகளின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக இல்லாமல், தங்களைப் பாதுகாத்துக்கொள்பவர்களாக மட்டுமே வாழ்ந்தனர் (எஸ்றா 4; நெகேமியா 4).
-
தேசத்திற்குத் திரும்பியது பெரிய ஆசீர்வாதமாக இருந்தாலும், முந்தைய ராஜ்யத்தின் செல்வச் செழிப்பில் மிகச்சிறிய அளவே அவர்களிடம் இருந்தது.
-
தேவ மகிமை எருசலேமில் தங்கியிருக்கவில்லை; அது அங்கிருந்து எடுபட்டுப் போயிருந்தது (கி.மு. 597-591, எசேக்கியேல் 8-11).
வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள் தாவீது மற்றும் சாலமோன் அரசாண்ட காலங்களில் இருந்த கம்பீரத்தோடு ஒப்பிடும்போது, அவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே தென்பட்டது. இஸ்ரவேலர் தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பிய இந்தச் சம்பவம், "இன்பமும் துன்பமும் கலந்த" (Bittersweet) ஒரு அனுபவமாகும். தற்கால ஏழ்மை அவர்களின் முற்பிதாக்கள் செய்த பாவத்தை நினைவுபடுத்துவதாக இருந்ததால் கசப்பாகவும், 17 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கு தேவன் அருளிய வாக்குத்தத்தத்தின்படி (ஆதி. 12:1-3) சொந்தத் தேசத்திற்குத் திரும்பியிருப்பது இனிப்பான செய்தியாகவும் இருந்தது.
நாளாகம ஆசிரியர், இஸ்ரவேலரின் வரலாறு மற்றும் வம்சாவளியை ஆதாம் முதல் (1 நாளா. 1:1), பாபிலோனிலிருந்து திரும்பியது வரை (2 நாளா. 36:23) விவரிக்கிறார். இதன் மூலம், யூதர்களுக்குத் தேவன் அளித்த வாக்குத்தத்தங்களும், அவற்றின் நோக்கங்களான 1) இடம், 2) தேசம், 3) தாவீது ராஜா, 4) லேவிய ஆசாரியத்துவம், 5) தேவாலயம் மற்றும் 6) மெய்யான ஆராதனை ஆகியவை பாபிலோனிய சிறையிருப்பினால் ரத்து செய்யப்படவில்லை என்பதை நினைவுபடுத்துகிறார். அவர்கள் கடினமான சூழலைச் சந்தித்த போதிலும், அவர்களுக்கென்று ஓர் ஆவிக்குரிய பாரம்பரியம் உண்டு என்பதையும், தேவனிடத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உற்சாகப்படுத்துகிறார்.
நாளாகமத்தின் முக்கியத்துவம் முதல் மற்றும் இரண்டாம் நாளாகமப் புத்தகங்கள் தாவீதின் உடன்படிக்கை மற்றும் தேவாலய ஆராதனைக்கு முக்கியத்துவம் அளித்து, பழைய ஏற்பாட்டின் வரலாற்றை மீளாய்வு செய்கின்றன.
-
1 நாளாகமம்: ஆதாம் முதல் தாவீதின் மரணம் (கி.மு. 971) வரை பேசுகிறது. இது 2 சாமுவேல் புத்தகத்திற்கு இணையான வரலாற்றுத் தகவல்களைத் தருகிறது.
-
2 நாளாகமம்: சாலமோனின் ஆட்சியில் (கி.மு. 971) தொடங்கி, யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பும் (கி.மு. 538) வரை பேசுகிறது. இது 1 மற்றும் 2 ராஜாக்கள் புத்தகங்களின் காலக்கட்டத்தை உள்ளடக்கியது.
குறிப்பாக, இது தென்னாட்டினராகிய யூதா ராஜ்யத்தின் ராஜாக்களைக் குறித்து மட்டுமே பேசுகிறது. வடநாட்டினராகிய 10 கோத்திரத்தார் பொல்லாப்பிலும், மாய்மாலமான ஆராதனையிலும் ஈடுபட்டதால் அவர்களைக் குறித்த பதிவுகளைத் தவிர்க்கிறது. நாளாகமத்தின் 55 சதவீதச் செய்திகள் தனித்துவமானவை; இவற்றை சாமுவேல் அல்லது ராஜாக்கள் புத்தகங்களில் காண முடியாது. ஆசிரியர், தாவீதின் ஆட்சிக்கு எதிரான எதிர்மறைச் செய்திகளைத் தவிர்த்து, தேவாலய வழிபாடு மற்றும் தாவீதின் வம்சாவளியின் முக்கியத்துவத்தை மேன்மைப்படுத்துகிறார். 2 ராஜாக்கள் புத்தகம் சிறையிருப்புடன் சோகமாக முடிவடைகிறது; ஆனால், 2 நாளாகமம் (36:22-23) யூதர்கள் விடுவிக்கப்பட்டு எருசலேமுக்குத் திரும்புவதைக் குறித்த நம்பிக்கையான வார்த்தைகளுடன் முடிவடைகிறது.
நாளாகமத்தின் சாராம்சம்
-
இஸ்ரவேலரின் தெரிந்தெடுக்கப்பட்ட வம்சவரலாறு (1 நாளா. 1-9).
-
ஒன்றுபட்ட ராஜ்யத்தில் சவுல் (1 நாளா. 10), தாவீது (1 நாளா. 11-29) மற்றும் சாலமோனின் ஆட்சி (2 நாளா. 1-9).
-
பிளவுபட்ட ராஜ்யத்தில் யூதாவின் ஆட்சி (2 நாளா. 10-36:21).
-
யூதா 70 வருட சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்படுதல் (2 நாளா. 36:22-23).
வரலாறும் இறையியலும் கலந்த இந்தப் புத்தகங்கள், மனுக்குல வரலாற்றின் மேடையில் இஸ்ரவேலரைக் குறித்த தேவனின் தெய்வீக நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. கடந்தகாலத் தவறுகளோ, நிகழ்காலத் துயரங்களோ எதுவாக இருப்பினும், தேவன் தாம் செய்த உடன்படிக்கையில் உண்மையுள்ளவராக இருப்பார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட தேசத்திற்கு, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நியாயத்தீர்ப்புப் பெற்ற பின்னரும் (உபா. 28:15-68), தேவன் அவர்களைத் திருப்பிக்கொண்டு வந்தார். அவர்களின் தேசிய அடையாளமும், ஆசாரியத்துவமும் பாதுகாக்கப்பட்டன. தாவீதின் வம்சத்தில் ராஜா தோன்றுவார் என்ற வாக்குத்தத்தம் (2 சாமு. 7:8-17) இன்றும் உறுதியாக உள்ளது.
நன்னடத்தை விதிகள் இப்புத்தகங்களில் இரண்டு முக்கிய விதிகள் மேலோங்கி நிற்கின்றன:
-
கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.
-
கீழ்ப்படியாமை நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும்.
ராஜாக்கள் தேவனை நம்பிக் கீழ்ப்படிந்தபோதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அவர்கள் தேவனை விட்டுவிட்டு, விக்கிரகங்களின் மீதோ அல்லது மனிதர்கள் மீதோ நம்பிக்கை வைத்தபோது, தேவன் தமது பாதுகாப்பை விலக்கிக்கொண்டார். யூத ராஜாக்களின் மூன்று அடிப்படைத் தவறுகள்: 1) தனிப்பட்ட பாவம், 2) மாய்மாலமான அல்லது விக்கிரக ஆராதனை, 3) தேவனைக் காட்டிலும் மனிதன் மீது நம்பிக்கை வைத்தல்.
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள் இப்புத்தகங்களில் தீர்க்க முடியாத சவால்கள் என்று ஏதுமில்லை. எனினும் சில கேள்விகள் எழுகின்றன:
-
இதன் ஆசிரியர் யார்? (எஸ்றாவா?).
-
2 நாளா. 36:22-23 வசனங்களும், எஸ்றா 1:1-3 வசனங்களும் ஒரே மாதிரியாக இருப்பதால், எஸ்றாவே இதன் ஆசிரியர் என்று கருதலாமா?
-
1 நாளாகமம் 1-9 அதிகாரங்களில் உள்ள வம்சாவளிக்கும், மற்ற பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் உள்ள வம்சாவளிக்கும் உள்ள வித்தியாசங்களை எப்படிச் சமன் செய்வது?
-
70 வருட சிறையிருப்பு முடிந்துவிட்டதால், உபாகமம் 28-ல் சொல்லப்பட்ட சாபங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளனவா?
-
சாமுவேல் மற்றும் ராஜாக்கள் புத்தகங்களோடு ஒப்பிடும்போது, எண்களில் காணப்படும் வித்தியாசங்களுக்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
சுருக்க அட்டவணை I. தெரிந்தெடுக்கப்பட்ட வம்சவரலாறு (1:1-9:34) அ. ஆதாம் முதல் தாவீதிற்கு முன்பு வரை (1:1 – 2:55) ஆ. தாவீது முதல் சிறைப்பட்டுப் போனது வரை (3:1-24) இ. பன்னிரண்டு கோத்திரங்கள் (4:1 - 9:1) ஈ. எருசலேமில் வாசம் செய்பவர்கள் (9:2-34)
II. தாவீது அரியணை ஏறுதல் (9:35-12:40) அ. சவுலின் வம்சவழி மற்றும் மரணம் (9:35-10:14) ஆ. தாவீது அபிஷேகிக்கப்படுதல் (11:1-3) இ. எருசலேம் கைப்பற்றப்படுதல் (11:4-9) ஈ. தாவீதின் வீரர்கள் (13:1 - 29:30)
III. தாவீதின் ஆட்சி (13:1 -29:30) அ. உடன்படிக்கைப் பெட்டி (13:1 - 16:43) ஆ. தாவீதுடன் செய்யப்பட்ட உடன்படிக்கை (17:1-27) இ. ராணுவ வெற்றிகள் (18:1 – 21:30) ஈ. தேவாலயம் கட்ட ஆயத்தங்கள் (22:1 – 29:20) உ. சாலமோனுக்கு ஆட்சி மாற்றம் (29:21-30)