தலைப்பு:
எசேக்கியேல் புத்தகத்தின் ஆசிரியர் பெயரே (1:3; 24:24) இப்புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. இப்பெயர் பரிசுத்த வேதாகமத்தில் வேறு எந்தப் பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை. “எசேக்கியேல்” என்னும் பெயருக்கு “தேவனால் பெலப்படுத்தப்பட்டவர்” என்று அர்த்தம். தீர்க்கதரிசன ஊழியத்திற்குத் தேவனின் அழைப்பைப் பெற்ற இவர் (3:8,9), அந்த ஊழியத்தை நிறைவேற்றியபோது, இப்பெயரின் அர்த்தம் இவர் வாழ்வில் மெய்யாகவே நிறைவேறியது. தேவன் தம்முடைய சொந்த ஜனங்களான, நாடுகடத்தப்பட்ட யூதர்களிடம் சொல்ல விரும்பிய செய்தியை அறிவிக்கவும், அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துக் காட்டவும் எசேக்கியேல் தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள், உவமைகள், உருவகங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தினார்.
ஆசிரியர் மற்றும் காலம்: வசனம் 1:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள ”முப்பதாம் வருஷம்” என்பது எசேக்கியேலின் வயதைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், அவர் சிறைப்பட்டுப் போனபோது அவருக்கு வயது 25 ஆகவும், ஊழியத்திற்கு அழைப்பைப் பெற்றபோது வயது 30 ஆகவும் இருந்திருக்க வேண்டும். ஆசாரியர்கள் தங்கள் ஊழியப் பொறுப்பை முப்பதாவது வயதில் ஆரம்பிப்பார்கள் என்பதால் (எண் 4:3), எசேக்கியேலின் வாழ்க்கையில் இது ஒரு குறிப்பிடத்தக்க வயதாகும். இவரது ஊழியம் கி.மு. 593/92-ல் ஆரம்பித்து, ஏறக்குறைய 22 வருடங்கள், அதாவது கி.மு. 571/70 வரை (25:17) நீடித்தது.
எரேமியா (எசேக்கியேலை விட ஏறக்குறைய 20 வயது மூத்தவர்) மற்றும் தானியேல் (எசேக்கியேலின் சமவயதுடையவர்) ஆகிய இருவரும் எசேக்கியேலின் சமகாலத் தீர்க்கதரிசிகள் ஆவர். எசேக்கியேல் இவர்களை ஏற்கனவே நன்கு அறியப்பட்ட தீர்க்கதரிசிகளாகக் குறிப்பிடுகிறார் (14:14,20; 28:3). எரேமியா (எரே. 1:1) மற்றும் சகரியாவைப் போன்று, எசேக்கியேலும் ஆசாரியராகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தவர் (சகரியா 1:1; நெகேமியா 12:16 உடன் ஒப்பிடுக). இவரது ஆசாரியத்துவப் பின்னணியினால், தேவாலயம் சார்ந்த காரியங்களில் அதிக நாட்டமும், பரிச்சயமும் உடையவராக இருந்தார். இதனால், தேவாலயம் குறித்து எசேக்கியேல் விரிவாக எழுதும்படி தேவன் அவரைப் பயன்படுத்தினார் (8:1-11:25; 40:1-47:12).
வாழ்க்கை சூழல்: எசேக்கியேலும் அவரது மனைவியும் (24:15-27) கி.மு. 597-ல் பாபிலோனியரால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட 10,000 யூதர்களில் ஒருவராக இருந்தனர். பாபிலோனுக்குத் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருந்த கேபார் நதியண்டையிலுள்ள தெலாபீபில் (Tel-abib) இவர்கள் வாழ்ந்தனர். நாடுகடத்தப்பட்டிருந்த வேளையில், எசேக்கியேலின் மனைவி இறந்துபோனாள் என்று எசேக்கியேல் 24:18-ல் வாசிக்கிறோம். ஆனால், எசேக்கியேலின் மரணத்தைக்குறித்து வேதாகமத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. இருப்பினும், யூத ரபீக்களின் பாரம்பரியம் (Rabbinical Tradition), கி.மு. 560-ல் இஸ்ரவேல் இளவரசன் ஒருவனின் விக்கிரகாராதனையை எசேக்கியேல் எதிர்த்தபோது, அவன் கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.
எசேக்கியேல் தனது தீர்க்கதரிசன வார்த்தைகள் அருளப்பட்ட காலத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் (8:1; 20:1; 24:1; 26:1; 29:1; 30:20; 31:1). எருசலேம் கடைசியாக வீழ்ந்த கி.மு. 586-க்கு பிறகு, 14 ஆண்டுகள் கழித்து, அதாவது கி.மு. 573/72-ல் எசேக்கியேல் 40:1-ல் உள்ள தரிசனம் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 முதல் 28 வரையிலான அதிகாரங்களில் உள்ள தீர்க்கதரிசனங்கள் காலவரிசைப்படி அமைந்துள்ளன. ஆனால் 29:1-க்கு வரும்போது, 26:1-க்கு முந்திய வருடத்திற்குப் பின்னோக்கிச் செல்கிறார். எனினும் 30:1-லிருந்து மீண்டும் காலவரிசையைக் கண்டிப்புடன் பின்பற்றுகிறார் (31:1; 32:1,17).
வரலாற்றுப் பின்னணி: ஒன்றுபட்ட இஸ்ரவேல் ராஜ்யம் சவுல், தாவீது மற்றும் சாலமோனின் தலைமையில் 110 வருடங்கள் நீடித்தது (கி.மு. 1043-931). அதன்பின் பிளவுபட்ட ராஜ்யமாக, இஸ்ரவேல் (வடக்கு) மற்றும் யூதா (தெற்கு) எனப் பிரிந்து கி.மு. 931-லிருந்து கி.மு. 722/21 வரை நீடித்தது. அசீரியர்களுடனான போரில் வடதிசை இஸ்ரவேல் வீழ்ந்தது. எஞ்சியிருந்த யூதா ராஜ்யம் மேலும் 135 வருடங்கள் நீடித்தது; அதுவும் பாபிலோனியப் படையெடுப்பினால் கி.மு. 605-586 காலகட்டத்தில் வீழ்ந்தது.
பாபிலோனியப் பேரரசு கி.மு. 605-ல் கர்கேமிஸ் (Carchemish) போரில் எகிப்தைத் தோற்கடித்துத் தீர்மானகரமான வெற்றியைப் பெற்றது. கி.மு. 605-ல் நேபுகாத்நேச்சாரின் தலைமையில் பாபிலோன் எருசலேமைக் கைப்பற்றி, முக்கிய நபர்களை நாடுகடத்தியது; அவர்களில் ஒருவர் தான் தானியேல் (தானியேல் 1:2). கி.மு. 597 மார்ச் மாதத்தில் எருசலேமைத் தாக்கி, யோயாக்கீம் ராஜா மற்றும் 10,000 பேருடன் எசேக்கியேலையும் சிறைபிடித்தனர் (2 இராஜா. 24:11-18). இறுதியில் கி.மு. 586-ல் எருசலேம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, ஆலயம் எரிக்கப்பட்டு, மூன்றாம் கட்ட நாடுகடத்துதல் நடைபெற்றது.
இறையியல் மற்றும் வரலாற்றுப் போதனைகள்: ”இதுவே கர்த்தருடைய மகிமை” என்பதே எசேக்கியேல் புத்தகத்தின் மையக் கருத்தாகும் (1:28; 3:12,23; 10:4,18; 11:23; 43:4,5; 44:4). தேவனது அன்பின் வெளிப்பாட்டின் மத்தியிலும் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் கீழ்ப்படியாமையைச் சித்தரித்துக் காட்டுவது இப்புத்தகத்தின் முக்கிய உள்ளடக்கமாகும் (அதிகாரங்கள் 16 மற்றும் 23). இஸ்ரவேலரின் விக்கிரகாராதனை மற்றும் அதினால் விளைந்த விளைவுகள் குறித்து வேதாகமத்தில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.
இப்புத்தகத்தில் ஆவிக்குரிய சத்தியங்கள் பல அழகிய காட்சிகள் மூலம் சித்தரிக்கப்படுகின்றன:
-
எசேக்கியேல் புஸ்தகச் சுருளை உண்ணுதல் (அதிகாரம் 2).
-
நான்கு ஜீவன்களின் முகங்கள் (1:10).
-
தலைமயிரைக் கத்தரிக்கும் அடையாளம் (5:1-4).
-
சுவரில் தீட்டப்பட்டிருந்த ஊரும் பிராணிகளின் உருவங்கள் (8:10).
-
கெரூபீன்கள் நடுவில் இருக்கும் அக்கினித்தழல் தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சித்தரிக்கிறது (10:2,7).
இறையியல் கருப்பொருள்களில் மிக முக்கியமானது தேவனுடைய பரிசுத்தமும் இறையாண்மையுமே ஆகும். யூதாவின் பாவங்களின் பின்னணியில் (1:26-28), தேவனுடைய பிரகாசமான மகிமையைச் சித்தரித்து, அவரது பரிசுத்தத்தின் மேன்மை வெளிப்படுத்தப்படுகிறது (அதிகாரங்கள் 8-11 மற்றும் 43:1-7). ”நானே கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள்” என்ற சொற்றொடர் இப்புத்தகத்தில் 60 தடவைக்கும் மேலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுவாக நியாயத்தீர்ப்புடன் சேர்த்துச் சொல்லப்பட்டாலும் (6:7; 7:4), சில இடங்களில் மீட்பின் வாக்குத்தத்தத்துடனும் வருகிறது (34:27; 36:11,38).
ஒவ்வொரு தனிநபரும் நீதியைப் பின்பற்றி நடக்க வேண்டும், தவறினால் ஒவ்வொருவரும் தங்கள் பாவத்திற்காகத் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான கருப்பொருளாகும் (18:3-32).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்: ஏசாயா மற்றும் எரேமியாவைப் போல, எசேக்கியேலும் அதிக அளவில் உருவக மொழியைப் (Apocalyptic/Symbolic language) பயன்படுத்துகிறார். இதனால், சில பகுதிகளை நேரடியாகப் புரிந்து கொள்வதா அல்லது அடையாளப்பூர்வமாக அர்த்தம் கொள்வதா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, அதிகாரங்கள் 40-48ல் விவரிக்கப்பட்டுள்ள புதிய தேவாலயம் உண்மையானதா? அப்படியானால் அதன் தோற்றம் என்ன? இது சபை யுகத்தைக் குறிக்கிறதா அல்லது எதிர்கால ஆயிர வருட அரசாட்சியை குறிக்கிறதா என்பது போன்ற கேள்விகள் வேத பண்டிதர்களிடையே விவாதிக்கப்படுகின்றன.
புத்தகத்தின் சுருக்கம் (Outline): இப்புத்தகத்தை "கண்டனம்/நியாயத்தீர்ப்பு" மற்றும் "ஆறுதல்/மீட்டளித்தல்" என இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். விரிவாகப் பார்த்தால், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
I. எருசலேமின் அழிவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் (1:1 - 24:27)
-
அ. எசேக்கியேலின் அழைப்பும் ஊழியப் பொறுப்பும் (1:1 - 3:27)
-
ஆ. எருசலேமின் மீதான தண்டனைத் தீர்ப்பு (4:1 - 24:27)
-
நியாயத்தீர்ப்பின் அடையாளங்கள் (4:1 – 5:4)
-
நியாயத்தீர்ப்பு குறித்த செய்திகள் (5:5 - 7:27)
-
தேவாலயத்தில் காணப்படும் அருவருப்புகள் மற்றும் மகிமை விலகுதல் (8:1 - 11:25)
-
நியாயத்தீர்ப்பு குறித்த விளக்கங்கள் (12:1 - 24:27)
-
II. அந்நிய தேசங்களுக்கு விரோதமான நியாயத்தீர்ப்புகள் (25:1 - 32:32)
-
அம்மோன், மோவாப், ஏதோம், பெலிஸ்தியா, தீரு, சீதோன் மற்றும் எகிப்து தேசங்கள்.
III. இஸ்ரவேலின் மனந்திரும்புதலுக்கான அழைப்பு (33:1-33)
-
காவற்காரனின் கடமை மற்றும் இஸ்ரவேலின் நிலை.
IV. இஸ்ரவேலின் எதிர்கால மீட்பு மற்றும் மகிமை (34:1 – 48:35)
-
அ. இஸ்ரவேல் தேசம் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்படுதல் (34:1 – 37:28)
-
மெய்யான மேய்ப்பன் (கிறிஸ்து) வாக்குத்தத்தம் பண்ணப்படுதல் (34:1-31)
-
உலர்ந்த எலும்புகள் உயிரடைதல் (37:1-28)
-
-
ஆ. கோகு மாகோகு யுத்தம் - எதிரிகள் அழிக்கப்படுதல் (38:1 – 39:29)
-
இ. புதிய தேவாலயம் மற்றும் புதிய ஆராதனை முறைமை (40:1 - 46:24)
-
ஈ. தேசம் பங்கிடப்படுதல் மற்றும் "யெகோவா ஷம்மா" (கர்த்தர் அங்கே இருக்கிறார்) (47:1 – 48:35)