தலைப்பு:
இப்புத்தகத்தின் முக்கிய கதாபாத்திரமும், ஆசிரியருமாகியவரின் பெயரே இப்புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. 'ஓசியா' என்ற பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு” என்பதாகும். யோசுவா (எண். 13:8,16) மற்றும் இயேசு (மத்தேயு 1:21) ஆகிய பெயர்களும் இதே அர்த்தத்தைக் கொண்டவையே. 'சிறிய தீர்க்கதரிசிகள்' என்று அழைக்கப்படும் பன்னிரண்டு தீர்க்கதரிசிகளின் வரிசையில் ஓசியா முதலாவதாக வருகிறார். ஏசாயா, எரேமியா மற்றும் எசேக்கியேல் போன்ற 'பெரிய தீர்க்கதரிசிகளின்' புத்தகங்களோடு ஒப்பிடும்போது, இப்புத்தகங்களின் அளவு சிறியதாக இருப்பதால், இவை 'சிறிய தீர்க்கதரிசன ஆகமங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம் ஓசியா புத்தகத்தில் மட்டுமே அதன் ஆசிரியரைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. ஓசியாவைக் குறித்தும் மிகக் குறைவாகவே சொல்லப்பட்டுள்ளது; அவருடைய தகப்பன் ”பெயேரி” (1:1) என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை. வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேலின் வரலாறு, சூழ்நிலைகள் மற்றும் நிலப்பரப்பைக்குறித்து ஓசியா நன்கு அறிந்திருந்தபடியால் (4:15; 5:1,13; 5:8,9; 10:5; 12:11,12; 14:6), அவர் இஸ்ரவேலைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதிலிருந்து இவரும் யோனா தீர்க்கதரிசியும் இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்தவர்கள் என்பதை அறியலாம். ஓசியா பேசும்போது இஸ்ரவேல் (வடக்கு ராஜ்யம்) மற்றும் யூதா (தெற்கு ராஜ்யம்) ஆகிய இரண்டைக் குறித்துப் பேசினாலும், இஸ்ரவேலை அரசாண்ட ராஜாவையே “எங்கள் ராஜா” (7:5) எனக் குறிப்பிடுகிறார்.
ஓசியா தீர்க்கதரிசியின் ஊழியக் காலம் நீண்டதாக இருந்தது (கி.மு. 755 - 710). யூதாவை அரசாண்ட ராஜாக்களாகிய உசியா (கி.மு. 790–739), யோதாம் (கி.மு. 750–731), ஆகாஸ் (கி.மு. 735–715) மற்றும் எசேக்கியா (கி.மு. 715–686) ஆகியோரின் நாட்களிலும், இஸ்ரவேலில் யெரோபெயாம் II (கி.மு. 793–753; ஓசி. 1:1) அரசாண்ட நாட்கள் வரையிலும் இவரது ஊழியம் தொடர்ந்தது. இஸ்ரவேலை ஆண்ட கடைசி ஆறு ராஜாக்களின் காலம், அதாவது செக்கரியா (கி.மு. 753-752) தொடங்கி ஓசேயா (கி.மு. 732-722) வரை இவரது தீர்க்கதரிசனப் பணி பரந்து விரிந்திருந்தது. ஏனெனில், யெகூவின் வம்சத்தில் வந்த செக்கரியா கி.மு. 752-ல் கவிழ்த்துப் போடப்படுவது ஓர் எதிர்கால நிகழ்ச்சியாக இப்புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது (1:4). வடக்கு தேசத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்குப் பின் இவர் தொடர்கிறார் எனவும், யூதாவில் ஏசாயா மற்றும் மீகா தீர்க்கதரிசிகளின் சமகாலத்தவர் எனவும் அறிகிறோம். ஓசியா தீர்க்கதரிசியின் ஊழிய வரலாற்றுப் பின்னணியை 2 ராஜாக்கள் 14-20 அதிகாரங்களிலும், 2 நாளாகமம் 26-32 அதிகாரங்களிலும் காணலாம்.
பின்னணி மற்றும் சூழல் ஓசியா தன் ஊழியத்தை இஸ்ரவேல் தேசத்தில் (அதன் மிகப்பெரிய கோத்திரத்தின் பெயரால் 'எப்பிராயீம்' என்றும் அழைக்கப்படுகிறது), யெரோபெயாம் II ஆண்ட இறுதி நாட்களில் ஆரம்பித்தார். இந்த ராஜாவின் நாட்களில் இஸ்ரவேலில் அரசியல் ரீதியாகச் சமாதானமும், பொருள் வளமும் இருந்தது. ஆனால், தேசத்தில் தார்மீக வாழ்வு சீர்கெட்டும், ஆவிக்குரிய வாழ்க்கை மிகவும் பின்வாங்கியும் இருந்தது. யெரோபெயாம் II-ன் மரணத்திற்குப் பின் (கி.மு. 753) தேசத்தில் அராஜகம் தலைதூக்கியது; இதனால் இஸ்ரவேல் மிக வேகமாகச் சரிவை நோக்கிச் சென்றது. இஸ்ரவேலை அசீரியர்கள் 30 ஆண்டுகள் கழித்து மேற்கொள்ளும் வரை, இஸ்ரவேலை ஆண்ட 6 ராஜாக்களில் 4 பேர், அவர்களுக்கு அடுத்து வந்த ராஜாவினால் கொலை செய்யப்பட்டனர். சமாரியா தேசத்தின் வீழ்ச்சி நெருங்கிய வேளையில், இஸ்ரவேல் நீதி தவறிக் கெட்டுப்போனதாலும் (ஆமோஸ் புத்தகத்தையும் காண்க), கர்த்தராகிய தேவனோடு செய்திருந்த உடன்படிக்கையை மீறியதாலும், தேவனுடைய நியாயத்தீர்ப்பு உடனடியாக வரப்போகிறது என ஓசியா தீர்க்கதரிசனமாக உரைத்தார்.
தென் தேசமாகிய யூதாவின் சூழ்நிலையும் சிறப்பாக இருக்கவில்லை. ஆசாரியரின் பணியை அபகரித்ததால், உசியா ராஜா குஷ்டரோகத்தால் வாதிக்கப்பட்டான் (2 நாளா. 26:16-21). அவனுக்குப் பின் வந்த யோதாம் விக்கிரக ஆராதனைக்காரர்களை அனுமதித்தான்; இது ஆகாஸ் ராஜா பாகால் வழிபாட்டை இஸ்ரவேலுக்குள் கொண்டுவர வழிவகுத்தது (2 நாளா. 27:1 – 28:4). யூதாவின் சகோதர நாடான இஸ்ரவேலின் அழிவைப் போன்றதொரு அழிவைச் சந்திக்க இருந்த யூதா தேசம், எசேக்கியா ராஜா கொண்டுவந்த சீர்திருத்தங்களால் அழிவை நோக்கிச் செல்வது சற்று தாமதமானது எனலாம். இரண்டு தேசங்களிலும் இருந்த பலவீனப்பட்ட ராஜாக்கள், கர்த்தராகிய தேவனின் உதவியைத் தேடாமல், அந்நிய தேசங்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளத் தேடினார்கள் (7:11; 2 ராஜா. 15:19; 16:7).
இறையியல் மற்றும் வரலாற்றுப் போதனைகள் தேவன் தன்னுடைய உடன்படிக்கையின் ஜனங்கள் விக்கிரக வழிபாட்டிற்கு வழிவிலகிச் சென்றபோதிலும், இஸ்ரவேலரிடத்தில் அவர் கொண்டிருந்த அன்பில் உண்மையுள்ளவராக இருந்தார் என்பதே இப்புத்தகத்தின் மையக்கருத்தாகும். இதனால், ஓசியா தீர்க்கதரிசி ”பழைய ஏற்பாட்டின் யோவான்” (அன்பின் அப்போஸ்தலர்) என அழைக்கப்படுகிறார். தம் ஜனத்தைக் குறித்த கர்த்தரின் நேசம் முடிவற்றது; அதற்கு எதிராக வரும் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். தேசத்திற்கும், தனிப்பட்ட நபருக்கும் எதிராக ஓசியாவின் தீர்க்கதரிசன செய்திகள் கண்டிப்புடன் இருந்தாலும், அதேவேளையில் தேவனுடைய ஆழமான அன்பையும் அது எடுத்துரைக்கிறது.
தேவன் ஓசியாவிடம் ஒரு சோரஸ்திரியையும், சோரப்பிள்ளையையும் சேர்த்துக்கொள் எனச் சொல்கிறார். அவளுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கை அனுபவத்தின் மூலம், இஸ்ரவேலின் பாவத்தையும், அத்தேசம் உடன்படிக்கையை மீறும் தன்மையையும் ஓசியா புரிந்துகொள்ளச் செய்கிறார். ஓசியாவும் அவர் மனைவி கோமேரும், இப்புத்தகத்தின் முக்கியக் கருப்பொருள்களான பாவம், நியாயத்தீர்ப்பு மற்றும் மன்னிக்கும் அன்பு ஆகியவற்றை விளக்கும் சிறந்த உருவகங்களாகத் திகழ்கின்றனர்.
விளக்கவுரையில் உள்ள சவால்கள் சோரம் போன ஸ்திரீயாகிய கோமேர், வாக்குறுதி மீறுகிற, உடன்படிக்கையை முறித்த இஸ்ரவேல் தேசத்திற்கு அடையாளமாக நிற்கிறாள். இருப்பினும், இதில் சில கேள்விகள் எழுகின்றன. சிலர் அதிகாரம் 1-3 வரை நாம் காணும் சோரஸ்திரி சம்பவத்தை ஓர் உருவகக் கதை என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இது மிகச் சாதாரண நடையில் சொல்லப்பட்டிருப்பதால், உண்மையில் இது நிறைவேறியதா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், இது உண்மையான சம்பவமாக இல்லாவிட்டால், அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்வது கடினம். இப்புத்தகத்தில் உண்மையில்லாத தரிசனங்களைச் சொல்லும்போது “கண்டான்” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டிருக்கும் (5:13; 9:10,13). எபிரேய மொழியில் கனவு அல்லது தரிசனங்களுக்கு அறிமுகமாகச் சேர்க்கப்படும் சொற்கள் இங்கு இல்லை. மேலும், ஒரு தீர்க்கதரிசி தன்னையே ஒரு உருவகமாகவோ அல்லது கற்பனைக் கதையின் பாத்திரமாகவோ மாற்றிக்கொண்டதாக வேதாகமத்தில் எங்கும் இல்லை.
இரண்டாவதாக, தேவன் ஓசியாவை ஒரு சோரஸ்திரியைத் திருமணம் செய்யச் சொல்வதில் என்ன ஒழுக்கம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதை இப்படியாகப் பார்ப்பது சரியாக இருக்கும்: ஓசியா திருமணம் செய்தபோது கோமேர் கற்புள்ள பெண்ணாக இருந்து, பின்னாளில் சோரஸ்திரியாக மாறினாள் எனலாம். 'சோரஸ்திரியைச் சேர்த்துக்கொள்' என்னும் வரியானது, எதிர்காலத்தில் வாக்கை மீறும் பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளலாம். எகிப்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட இஸ்ரவேலை ஆரம்பத்தில் ஒரு சோரஸ்திரி என அழைக்க முடியாது (2:15; 9:10). ஆனால் அவள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போனாள் என்பதை 1:1-ல் காண்கிறோம். அதிகாரம் 3-ல், விபச்சாரத்தினிமித்தம் தள்ளி வைக்கப்பட்ட தன் மனைவியை ஓசியா மீண்டும் சேர்த்துக்கொண்டார் என விவரிக்கிறது. எனவே, ஓசியா அவள் ஒரு சோரஸ்திரி என அறிந்தே திருமணம் செய்துகொண்டார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
மூன்றாவதாக, அதிகாரம் 1-க்கும் அதிகாரம் 3-க்கும் இடையில் உள்ள உறவினைக் குறித்தும் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, அதிகாரம் 3-ல் சொல்லப்பட்டிருக்கும் பெண் கோமேர்தானா அல்லது வேறு பெண்ணா என்பதுதான் அது. 1:2-ல் அவர் பெற்ற கட்டளை 'போய், சேர்த்துக்கொள்' என்பது. அதிகாரம் 3-ல் ”இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள்” என்று சொல்லப்படுவதால், ஓசியா தான் மணந்திருந்த பெண்ணிடமே அன்பைப் புதுப்பித்துக்கொள்ள அழைப்பைப் பெற்றார் எனக் காண்கிறோம். மேலும் அதிகாரம் 1-ல் நாம் காணும் கோமேர் இஸ்ரவேல் தேசத்திற்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறாள். மூன்றாம் அதிகாரத்தில் நாம் காண்கிறபடி, இஸ்ரவேல் புத்திரர் பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, ஓசியாவும் செயல்பட அழைக்கப்பட்டார். ஒருவேளை மூன்றாம் அதிகாரம் வேறு ஒரு பெண்ணைக் குறித்துப் பேசுகிறது என்றால், அது இந்த முழுக் கதையின் உருவகத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும்.
சுருக்கம் I. சோர ஸ்திரீயும் உண்மையுள்ள கணவனும் (1:1 - 3:5)
-
அ. ஓசியாவும் கோமேரும் (1:1-9)
-
ஆ. தேவனும் இஸ்ரவேல் தேசமும் (1:10 - 2:23)
-
இ. இருதிறத்தாரும் ஒப்புரவாக்கப்படுதல் (3:1 - 5)
II. வாக்குமீறும் இஸ்ரவேலும் பற்றுறுதியுடன் இருக்கும் கர்த்தரும் (4:1 – 14:9)
-
அ. உடன்படிக்கையை மீறின இஸ்ரவேல் குற்றவாளியாகக் காணப்படுகிறாள் (4:1 - 6:3)
-
ஆ. சோரம்போன இஸ்ரவேல் தள்ளி வைக்கப்படுதல் (6:4 - 10:15)
-
இ. வாக்குமீறின இஸ்ரவேல் கர்த்தரிடம் மீண்டும் சேர்க்கப்படுதல் (11:1 – 14:9)