he went
2இராஜாக்கள் 24:1-7
1
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
2
அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
3
மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது.
4
அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
5
யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
6
யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
7
எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.
2நாளாகமம் 36:5
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
எரேமியா 22:13-17
13
தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
14
அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!
15
நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?
16
அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17
உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.
எரேமியா 26:1-24
1
யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:
2
நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3
அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.
4
நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கும்படிக்கும்,
5
நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,
6
நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
7
எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
8
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப்பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
9
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாப்போகும் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
10
யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக்கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
11
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
12
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
13
இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.
14
நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள்.
15
ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
16
அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
17
தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி:
18
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போகும்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போகும் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
19
அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
20
கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
21
யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
22
அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்.
23
இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனை வெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.
24
ஆகிலும் எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.
எரேமியா 36:1-32
1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
2
நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக்குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.
3
யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக்குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.
4
அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச்சுருளில் எழுதினான்.
5
பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது.
6
நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமின்றி, தங்கள் பட்டணங்களிலிருந்துவருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
7
ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்பண்ணி, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; கர்த்தர் இந்த ஜனத்துக்கு விரோதமாகக் கூறியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான்.
8
அப்படியே நேரியாவின் குமாரனாகிய பாருக்கு அந்தப் புஸ்தகத்தில், கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
9
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிலிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது.
10
அப்பொழுது பாருக்கு கர்த்தருடைய ஆலயத்தின் மேற்பிராகாரத்தில், கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வாசித்தான்.
11
சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,
12
அவன் ராஜாவின் அரமனைக்குப்போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானும், சாப்பானின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
13
பாருக்கு ஜனத்தின் செவிகள் கேட்கப் புஸ்தகத்திலுள்ளவைகளை வாசிக்கையில், தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான்.
14
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிந்த சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால், நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.
15
அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
16
அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
17
அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.
18
அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
19
அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,
20
சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
21
அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.
22
ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாக கணப்பு மூட்டியிருந்தது.
23
யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்துபோகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்து போட்டான்.
24
ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
25
எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணினார்கள்; ஆனாலும், அவர்களுக்கு அவன் செவிகொடாமல்,
26
பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.
27
ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
28
நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்.
29
மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்து விடப்பட்டுக்கிடக்கும்.
31
நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
32
அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.