படிப்புகள்: 447
Print

“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18).

இந்த வார்த்தைகளை எழுதியவர் இன்னல்களுக்கு முற்றிலும் அந்நியராகவோ, அல்லது சிறிய துன்பங்களைத் தவிர வேறு எந்த பெரிய சோதனையையும் அனுபவிக்காதவராகவோ இருந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்டவை. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மூழ்கி, பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள் மற்றும் துன்புறுத்தல்களை ஏராளமாக அனுபவித்த ஒருவரால் எழுதப்பட்ட வரிகள்தான் இவை. அப்போஸ்தலனாகிய பவுலின் சொந்த சாட்சியைக் கேளுங்கள்: “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன். மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன். ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.” (2 கொரிந்தியர் 11:24-27).

வாழ்க்கைப் பயணத்தில், மகிழ்ச்சியில் திருப்தியடைந்து, ரோஜாப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு நடையின் அனுபவத்தில் இருந்து இந்த வார்த்தைகள் வரவில்லை. மாறாக, தன் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டு, கண்ணீர் வடிக்கும் அளவிற்கு காயப்பட்டு, வாழ்வின் அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டவரிடம் இருந்து வரும் வார்த்தைகள்தான் அவை. இப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர் வெளிப்படுத்தும் இவ்வளவு மகிழ்ச்சியுள்ள எதிர்பார்ப்பை எப்படி விளக்குவது? தனக்கு நேரிட்ட இந்த சோதனைகள், இன்னல்களுக்கு மேலாக அவர் உயர்ந்து நிற்பதன் இரகசியம் என்னவாக இருக்க முடியும்?

முதலாவதாக, இவ்வளவு துன்பங்களை அனுபவித்த இந்த அப்போஸ்தலன், கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தற்காலிகமானவை என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொண்டார். அவை ‘தற்போதைய காலத்திற்கு’ மட்டுமே உரியவை. கிறிஸ்துவை வெறுப்பவர்களின் துன்பங்களுக்கு முற்றிலும் மாறான, உன்னதமான அனுபவம் இது. கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுடைய உபத்திரவம் நித்திய காலமாக இருக்கும்; அவர்கள் நித்திய நரகத்தில் வேதனைப்படுவார்கள். ஆனால் விசுவாசிகளுக்கு ஏற்படும் உபத்திரவங்கள் அதற்கு முற்றிலும் வேறானவை. அது காலையில் பூத்து மாலையில் உதிரும் பூக்களைப் போன்றதும், காணப்பட்டு காணாமல் போகும் நிழலைப் போன்றதுமாகும். மொத்தத்தில், இன்னும் சில வருடங்கள் மட்டுமே இந்த உபத்திரவங்கள் வழியாகக் கடந்து போய், கண்ணீரும் பெருமூச்சுகளும் இல்லாத பாக்கிய நாட்டை நாம் சென்றடைவோம்.
இரண்டாவதாக, இனி வெளிப்படவிருக்கும் “மகிமையை” விசுவாசக் கண்களால் அப்போஸ்தலன் கண்டார். பவுலுக்கு இந்த “மகிமை" ஒரு இனிமையான கனவை விட அதிக மேலானதாக இருந்தது. இது அவருக்கு நடைமுறைச் சத்தியமாக அமைந்து, அவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அவருக்கு ஆறுதல் அளித்தது. இது விசுவாசத்தின் மீதான உண்மையான சோதனைகளில் ஒன்றாகும். கிறிஸ்துவை உடையவர்களுக்கு உபத்திரவத்தில் பெரும் ஆதரவு இருக்கிறது; ஆனால் அவிசுவாசிக்கு அது கிடைக்காது. தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பிதாவின் சமுகத்தில் “பரிபூரண ஆனந்தம்” இருப்பதை அறிவார்கள். அவருடைய வலதுபாரிசத்தில் “நித்திய பேரின்பம்” உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள் (சங்கீதம் 16:11). மேலும் விசுவாசம் அவைகளைப் பற்றிக்கொண்டு, தனிப்பட்ட வாழ்வில் சொந்தமாக்கி, அவை தரப்போகும் ஆறுதலான சந்தோஷங்களை எண்ணி நிகழ்காலத்தில் நம்பிக்கையோடு வாழ்கிறது. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் நடந்தாலும் தங்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஊக்கம் தந்தது போல (எண்ணாகமம் 13:23, 26), இன்றும் விசுவாசி தரிசித்து நடவாமல் விசுவாசத்தோடு நடக்கிறார். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தியிருக்கிறார் (1 கொரிந்தியர் 2:9,10) என்பதை அவர் விசுவாசித்து நடக்கிறார்.

மூன்றாவதாக, அப்போஸ்தலன் “இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமை” குறித்து மகிழ்ச்சியடைகிறார். இதன் முழு அர்த்தம் என்னவென்றால், அதைப் புரிந்துகொள்ளும் திறன் இப்போது நமக்கு இல்லை. ஆனால் இதைக்குறித்து வேதம் அதிக விளக்கத்தை நமக்குத் தருகிறது. அந்த நாளில் நாம்:

என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதம் இது! தற்போது எந்த ஒளிக்கதிரையும் காணமுடியாத என்னில் எப்பேர்ப்பட்ட மகிமை வெளிப்படப்போகிறது! மிகவும் வழிதவறிய, மிகவும் தகுதியற்ற, அதிக பாவமுள்ள என்னில் இது வெளிப்படப்போகிறது. ஜோதிகளின் பிதாவுடன் மிகவும் சிறிய அளவில் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கிறேன்! இப்படிப்பட்ட என்னில் பிதாவின் இந்த மகிமை வெளிப்படுவது சாத்தியமா? சாத்தியமே என்று தவறில்லாத தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. தேவனுடைய மகிமையின் பிரதிபலிப்பான அவரிடம் நான் வசிப்பதன் மூலம் ஒளியின் பிள்ளையாக இருந்தால், நான் இப்போது உலகின் இருண்ட நிழல்களுக்கு மத்தியில் வசித்தாலும், ஒரு நாளில் வானத்தின் ஒளிகளைக் காட்டிலும் நான் பிரகாசிப்பேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த பூமிக்குத் திரும்பி வரும்போது, அவர் தம்மை “விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராய்” இருப்பார் (2 தெசலோனிக்கேயர் 1:10).

இறுதியாக, அப்போஸ்தலன் நிகழ்காலப் “பாடுகளை” இனி நம்மில் வெளிப்படும் “மகிமையுடன்" சீர்தூக்கிப் பார்த்து, முதலாவது இரண்டாவதுடன் ஒப்பிடவே தகுதியற்றது என்று உரக்கச் சொல்கிறார். இக்காலப் பாடு நிலையற்றது, இனி வரப்போவது நித்தியமானது. எல்லைக்குட்பட்ட ஒன்றிற்கும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, பூமிக்குரிய துன்பங்களுக்கும் பரலோக மகிமைக்கும் எந்தவித ஒப்பீடும் இல்லை.

மகிமையின் ஒரு இமைப்பொழுது என்பது வாழ்நாள் முழுவதும் படும் பாடுகளை விட அதிக கனமானது. இம்மானுவேலின் தேசத்தின் மகிமையுடன் ஒப்பிடும்போது நம்முடைய வருடக்கணக்கான பிரயாசம், வியாதி, வறுமையின் போராட்டம், அல்லது எல்லாவிதமான துக்கங்களை என்னவென்று சொல்வது! தேவனுடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்ப நதியில் அனுபவிக்கும் ஒரு துளி, பரலோகத்தில் ஒருமுறை சுவாசிக்கும் மூச்சுக்காற்று, இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் சேர்ந்து சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு மணிநேரம், உலகின் எல்லாக் கண்ணீருக்கும் துயரங்களுக்கும் மேலான இழப்பீடாக அமைகிறது. “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." வாசகரும் எழுத்தாளரும் இந்த வார்த்தைகளை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு, தற்போதைய சூழ்நிலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தவும், அதன் விளைவாக தேவனுடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உதவுவாராக!