பெண்கள் திருச்சபையில் அமைதியாக இருக்க வேண்டுமா?
படிப்புகள்: 685
Print
ஆசிரியர்: D. யஷ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 19 நிமிடங்கள்

(1 கொரிந்தியர் 14:33-35)

வசனம் 33: தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

வசனம் 34: சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

வசனம் 35: அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

இந்த அதிகாரத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து திருச்சபையில் நிலவிய ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துரைக்கிறார். கொரிந்தியர்கள் சபையாகக் கூடிவரும்போது அங்கே பெரும் குழப்பம் நிலவியது (வசனம் 33). அவர்கள் ஒரு ஒழுங்குமுறையுமின்றி, தங்கள் விருப்பப்படியே தன்னிச்சையாகச் செயல்பட்டனர். உதாரணமாக, அந்நிய பாஷை பேசும் வரம் பெற்ற ஒருவன் பேசும்போது, அதை விளக்குவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையிலும் அவன் பேசிக்கொண்டிருப்பான். அதே நேரத்தில், தீர்க்கதரிசன வரமுள்ள மற்றொருவன் தேவனின் வெளிப்பாட்டை உரத்த குரலில் அறிவிப்பான்.

சபை கூடுகையின்போது இத்தகைய சூழ்நிலை எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்! யார் பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே புரியாமல் எல்லாம் குழப்பமாக இருக்கும். அத்தகைய கூடுகையில் கலந்துகொள்பவர்களுக்கு எந்தவித ஆவிக்குரிய பயனும் உண்டாவதில்லை. இந்த அலங்கோலமான நிலையைச் சரிசெய்யவே, பவுல் இந்த அதிகாரத்தை எழுதினார். அதனால்தான், “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” (1 கொரிந்தியர் 14:40) என்று கூறி இந்த அதிகாரத்தை முடிக்கிறார்.

குறிப்பாக, சபை ஆராதனையில் ஒழுங்கை நிலைநாட்ட மூன்று சாராரை அமைதியாக இருக்குமாறு பவுல் பணிக்கிறார்:

  1. அந்நிய பாஷை பேசுபவர்: அர்த்தம் சொல்லும் நபர் இல்லையென்றால், அந்நிய பாஷையில் பேசுபவர் சபையில் அமைதியாக இருக்க வேண்டும். “ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.” (1 கொரிந்தியர் 14:27-28).

  2. தீர்க்கதரிசி: ஒரு தீர்க்கதரிசி பேசும்போது, சபையிலுள்ள மற்றவர்கள் நிதானிக்க வேண்டும். அப்போது அமர்ந்திருக்கிற மற்றொருவனுக்கு தேவனிடமிருந்து வெளிப்பாடு கிடைத்தால், முன்பு பேசிக்கொண்டிருந்தவர் அமைதியாக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 14:29-30).

  3. பெண்கள்: மூன்றாவதாக, “உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

இனி, பெண்கள் சபையில் மௌனமாயிருப்பதைப் பற்றிச் சிந்திப்போம். கொரிந்து சபையில் நிலைமை மோசமாக இருந்ததால், பவுல் இந்த வார்த்தைகளை அங்கே உள்ள கலாச்சார சூழலுக்கு மட்டுமே எழுதினார் என்று நினைக்க முடியாது. ஏனெனில், 33-வது வசனத்தில், “பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். எல்லா திருச்சபைகளையும் மனதில் வைத்துத்தான் பவுல் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, 1 கொரிந்தியர் 4:17-ல், “நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம்...” என்று கூறுகிறார். அதாவது, பவுல் ஒவ்வொரு சபைக்கும் வெவ்வேறு விதிமுறைகளைச் சொல்லாமல், எல்லா சபைகளிலும் ஒரே உபதேசத்தையே போதிக்கிறார். ‘மற்ற எல்லா சபைகளும் கண்ணியமாகவும், ஒழுங்காகவும் நடக்கும்போது, நீங்கள் (கொரிந்தியர்கள்) மட்டும் தேவனின் கட்டளைக்கு எதிராகப் பெண்களைப் போதிக்கும் ஊழியத்திற்கு அனுமதிக்கிறீர்கள்’ என்று பவுல் கடிந்து கொள்கிறார். எனவே, இந்த விதிமுறை அனைத்து உள்ளூர் திருச்சபைகளுக்கும் பொருந்தும்.

சபையாகக் கூடிவரும்போது, பெண்கள் தீர்க்கதரிசனம் சொல்வதையோ அல்லது அந்நிய பாஷைகளில் பேசுவதையோ தவிர்க்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். இந்த விதியைச் சுட்டிக்காட்டிய பிறகு, அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்: “வேதமும் அப்படியே சொல்லுகிறது” (வசனம் 34). இந்த ஒழுங்குமுறை பழைய ஏற்பாட்டிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. யூதர்கள் தங்கள் ஜெப ஆலயங்களில் இந்த விதியைக் கண்டிப்பாகப் பின்பற்றினார்கள்; பெண்கள் அங்கே வேதத்தை வாசிக்கவோ போதிக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஆதியாகமம் 3:16-ல் தேவன் ஏவாளிடம், “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். இது ஏவாளின் மீதான தேவனின் தீர்ப்பு. இதன் பொருள், பெண் ஆணின் அதிகாரத்திற்குக்கீழ் இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால், இன்று சில பெண்கள் இதை மீறி ஆண்களை ஆளுகை செய்ய முயல்கிறார்கள். இதற்கு மாறாக, பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. சபை கூடுகையில் பிரசங்கிப்பதும் அல்லது போதிப்பதும் அதிகாரத்தோடு கூடிய பணியாகும்; எனவே அத்தகைய ஊழியத்தைப் பெண்கள் செய்யக்கூடாது, ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார்.

வேதத்தில் தெபோராள், உல்தாள், அன்னாள் போன்ற பெண்களைத் தேவன் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால், இவர்கள் யாரும் சபையில் அல்லது ஆராதனை முறைமைகளில் தலைமை தாங்கிப் பிரசங்கிக்கவில்லை. எனவே, பெண்கள் திருச்சபையில் பிரசங்கிக்கலாம் என்பதற்கு இவர்களை உதாரணமாகக் கொள்ள முடியாது.

1 தீமோத்தேயு 2:11-14 பகுதியில், ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பின் வரிசையை நினைவுபடுத்துவதன் மூலம் பவுல் இந்த விதியை உறுதிப்படுத்துகிறார். இன்று பெரும்பாலான திருச்சபைகள் கொரிந்து சபையைப் போலவே பெண்களைப் பிரசங்கிக்க அனுமதிக்கின்றன. இது மனிதனுக்குத் தேவன் வழங்கியத் தலைமைத்துவப் பொறுப்பை மீறும் செயலாகும். இது வேதத்திற்கு முரணான அணுகுமுறை. சில பெண்களுக்குச் சிறந்த போதிக்கும் திறமை, தலைமைத்துவப் பண்புகள் இருந்தாலும், சபையில் ஆண்களுக்குத் தலைமை தாங்கும் விதத்தில் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

மேலும், “அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்” (வசனம் 35) என்று பார்க்கிறோம். சபை கூடுகையின்போது கேள்விகள் கேட்டுத் தடை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டிற்குச் சென்ற பிறகு கணவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம், கணவர்கள் வேத சத்தியங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, தங்கள் மனைவிகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற கடமையையும் பவுல் மறைமுகமாக உணர்த்துகிறார். ஒருவேளை கணவனுக்குப் போதிய அறிவு இல்லையென்றால், சபை மூப்பர்களிடமோ அல்லது முதிர்ச்சியுள்ள விசுவாசிகளிடமோ பெண்கள் கேட்டுத் தெரிந்துகொள்வதில் தவறில்லை.

வசனம் 36-ல், “தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது?” என்று பவுல் கேட்கிறார். சுவிசேஷம் முதலில் யூதேயாவில் தொடங்கி, அப்போஸ்தலர்கள் மூலமாகப் பரவியது. முதலில் நிறுவப்பட்ட சபைகள் எதைப் பின்பற்றினவோ, அதையே கொரிந்து சபையும் பின்பற்ற வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார். “மற்ற சபைகள் செய்யாத, அனுமதிக்காத புதிய நடைமுறைகளை நீங்கள் ஏன் புகுத்தத் துணிகிறீர்கள்?” என்பதே பவுலின் கேள்வி.

சிலர் அப்போஸ்தலர் 2:17-ஐ மேற்கோள்காட்டி, “கடைசி நாட்களில்... உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்” என்று வாதிடுகின்றனர். பிலிப்புவின் குமாரத்திகள் தீர்க்கதரிசனம் சொன்னது உண்மைதான் (அப்போஸ்தலர் 21:9). ஆனால், அவர்கள் சபையாகக் கூடிவரும்போது, ஆண்கள் முன்னிலையில் ஆதிக்கம் செலுத்தும் விதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

இன்று அந்நிய பாஷை மற்றும் புதிய வெளிப்பாடுகளைக் கூறும் தீர்க்கதரிசன வரங்கள் அப்போஸ்தலர்களின் காலத்துடனேயே நிறைவடைந்துவிட்டன. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள 66 புத்தகங்களைக் கொண்ட வேதமே தேவனின் முழுமையான வெளிப்பாடு. இது நமக்கு போதுமானது. எனவே, இன்று புதிய வெளிப்பாடுகளுக்கோ அல்லது தீர்க்கதரிசனங்களுக்கோ அவசியமில்லை. எந்த அர்த்தத்தில் பார்த்தாலும், சபையில் பெண்கள் போதிக்க வேத வசனம் அனுமதிப்பதில்லை.

1 தீமோத்தேயு 2:11-12-ல், “ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாய் இருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை” என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார். இதன் பொருள் பெண்கள் சபை கூடுகையில் ஜெபம் செய்யவோ, பாடவோ கூடாது என்பதல்ல; அவர்கள் அதிகாரத்தோடு போதிக்கும் பணியைச் செய்யக்கூடாது என்பதேயாகும். பெண்கள் மற்ற பெண்களுக்கு (தீத்து 2:3-4) மற்றும் குழந்தைகளுக்குப் போதிக்கலாம்.

பெண்கள் ஏன் சபையில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் பவுல் விளக்குகிறார்: “முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்” (1 தீமோத்தேயு 2:13-14). இது கலாச்சாரக் கட்டளை அல்ல; இது படைப்பின் வரிசையை அடிப்படையாகக் கொண்ட மாறாத நியமம்.

இறுதியாக, 1 தீமோத்தேயு 2:15-ல், “தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்” என்று கூறுகிறார். இது நித்திய ஜீவனைப் பெறுவதற்கான வழி அல்ல; மாறாக, ஏவாள் மூலம் வந்த களங்கத்திலிருந்து பெண்கள் மீட்கப்படுவதற்கான வழியாகும். பெண்கள் தங்கள் பிள்ளைகளைத் தேவபக்தியில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்குப் பயனுள்ள, தேவனுக்குப் பிரியமான சந்ததியை உருவாக்கும் மகத்தான பணியைச் செய்கிறார்கள். ஆண்களுக்குப் போதிக்கும் பணியை விட, அடுத்த தலைமுறையை உருவாக்கும் இந்தப் பணி மிகவும் உயரியது.

தேவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளார். ஆண்கள் சபைக்கும் குடும்பத்திற்கும்த் தலைமை தாங்க வேண்டும்; பெண்கள் அடக்கத்தோடும், தேவபக்தியோடும் இருந்து, தங்கள் பிள்ளைகளை விசுவாசத்தில் வளர்க்க வேண்டும். இந்த வேதாகம ஒழுங்குமுறையைத் திருச்சபைகள் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.

வேதத்தின் தேவன் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டுகிறாரா?