உபத்திரவத்தில் ஆறுதல்
படிப்புகள்: 430
Print
ஆசிரியர்: தாமஸ் வாட்சன்
தமிழாக்கம்: தாமஸ் எடிசன்

“கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” (சங்கீதம் 119:65)

சங்கீதங்கள் பரிசுத்த வேதாகமத்தின் மிக முக்கிய பகுதியாய் இருக்கின்றன. அவை நம்முடைய மகிழ்ச்சிக்காகவும், ஆவிக்குரிய பிரயோஜனத்திற்காகவும் அருளப்பட்டுள்ளன. ஆம், இவை நம்மைத் திருப்தியாக்க மாத்திரமல்ல, நம்மைப் பெலப்படுத்தவும் உதவுகின்றன. இந்தச் சங்கீதம் தெய்வீக மற்றும் ஆவிக்குரிய விஷயங்களால் நிறைந்திருப்பதை நாம் பார்க்கலாம். இவ்வசனத்தை நாம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

  1. தேவன் தாவீதுக்குக் காண்பித்த இரக்கம்: அவர் அவனை நன்றாய் நடத்தினார்.

  2. தாவீதின் நன்றியுள்ள அறிக்கை: “கர்த்தாவே, உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.”

தாவீதினிடத்தில் தேவன் காண்பித்த இரக்கத்தைக் கொண்டு, நாம் இங்கே கவனிக்க வேண்டியது:

உபதேசம் – 1: தேவன் தம்முடைய மக்களை எப்போதும் நன்மையாகவே நடத்துகிறார். “தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்” (ஆதியாகமம் 33:11). அநேக வேளைகளில், தேவனுடைய பிள்ளைகள் அவருடைய அன்பக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ளுகிறதில்லை. அவர்கள் அவ்வாறு செயல்பட்டாலும், தேவன் அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். தேவன் தம் மக்களுடன் நன்றாக நடந்துகொள்வது, அவரது சுபாவத்தின் உள்ளார்ந்த நன்மையிலிருந்து வருவதாய் இருக்கிறது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4:16).

கேள்வி: தேவன் எந்த வழியில் தம்முடைய மக்களை நன்றாக நடத்துகிறார்?

பதில்: பல்வேறு இரக்கங்களைக் கொண்டு தேவன் அவர்களை வளப்படுத்துகிறார். “உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது” (சங்கீதம் 65:11). ஆம், அவர் போஷிக்கிறார், வளர்க்கிறார், பராமரிக்கிறார்! இதைவிட வேறு என்ன வேண்டும்? இது அவர்களை நன்றாக நடத்துவது அல்லவா?

கேள்வி (மறுப்பு): ஆனால், தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பாடுகளை அனுமதிக்கும்போதும், அவர் ‘நன்றாக நடத்துகிறார்’ என்று எப்படிச் சொல்ல முடியும்? “நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்” (சங்கீதம் 73:14) என்று வேதம் சொல்கிறதே. இவ்விதமாக இவர்கள் வாதிக்கப்படும்போது, தேவன் நன்றாக நடத்துகிறார் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

பதில்: உண்மைதான், தேவன் தம்முடைய பிள்ளைகளைக் கடுமையாகச் சிட்சிக்கும் பொழுதும், அவர் அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். ஆம், அநேக நேரங்களில் நாம் மரியாளைப் போல், “இது எப்படியாகும்?” என்று கேட்கிறவர்களாய் இருக்கிறோம். இதைத்தான் நான் இங்கு விளக்கப்படுத்திக் கூறுகிறேன்.

  1. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைப் பாடுகளுக்கு உட்படுத்தினாலும், அவர்களை நன்றாகவே நடத்துகிறார். ஏனென்றால், அவர் அவர்களுடைய தேவனாய் இருக்கிறார். துன்பத்தின் நடுவில் நடந்தாலும் தாவீதால், “கர்த்தர் என் சுதந்திரம்” (சங்கீதம் 16:5) என்று சொல்ல முடிந்தது. கர்த்தர், “மகா பெரிய பலனாய் இருக்கிறார்” (ஆதியாகமம் 15:1). அவரே ஒட்டுமொத்த மகிழ்ச்சியின் பரலோகமாய் இருக்கிறார். அவரே அனைத்து நன்மைகளும் அடங்கிய நன்மையானவர். எவன் தேவனைத் தம்முடையவராகக் கொண்டிருக்கிறானோ, அவன் தேவன் என்கிற பொக்கிஷத்தையே கொண்டிருக்கிறான். ஆக, இப்படிப்பட்ட உன்னதமான பரிசை ஒருவன் பெற்றிருக்கும்போது, அவனுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் அவர் போதுமானவராய் இருக்கிறார். தம்மைத் தருவதைக் காட்டிலும் மேலான ஒன்றை அவரால் வேறு என்ன கொடுக்க முடியும்?

  2. கடுமையான உபத்திரவத்தைத் தேவப்பிள்ளைகள் சந்திக்கும்போது, கர்த்தர் அவர்களை நன்றாகவே நடத்துகிறார். ஏனென்றால், அது அவர்களுக்கு நன்மைக்கேதுவாகவே இருக்கிறது. வசனமும் இவ்விதமாகத்தான் சொல்லுகிறது பாருங்கள்: “உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” தாவீது, “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது” (சங்கீதம் 119:71) என்கிறார். நான் செழிப்பாய் இருந்தது எனக்கு நல்லது என்று அவர் சொல்லவில்லை; மாறாக, நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது என்றே சொல்லுகிறார். கர்த்தர் உபத்திரவத்தின் மூலம் இரண்டு விதமான நன்மைகளைச் செய்கிறார்:

    • (அ) உபத்திரவம் தேவப்பிள்ளைகளை ஞானமுள்ளவர்களாக்குகிறது: ஆம், உபத்திரவம் ஒரு ஞானப் பள்ளியாய் இருக்கிறது. உபத்திரவமானது, நம்பவே முடியாதபடி அவர்களுடைய இருதயத்தில் குடிகொண்டிருக்கிற உலகம், பெருமை மற்றும் அழிந்துபோகும் இச்சைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது. உபத்திரவம் நம்முடைய ஆவிக்குரிய பார்வையைத் தெளிவாக்குகிறது.

    • (ஆ) உபத்திரவம் பரிசுத்தத்தை வளர்க்கிறது: இரத்தினக்கல் எவ்வளவுக்கு அதிகமாகச் செதுக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு அதிகமாகப் பிரகாசிக்கும். “தம்முடைய பரிசுத்தத்திற்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு” (எபி 12:10) தேவன் நம்மைச் சிட்சிக்கிறார். செழிப்பு கிருபையைத் துருப்பிடிக்கச் செய்யும்; ஆனால் கர்த்தர் நம்மைத் துன்பத்தால் புடம் போடுகிறார். தேவப்பிள்ளைகள் தங்களுடைய பாடுகளுக்காகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர். கர்த்தர் சிலுவையின் ஆரோக்கியமான ஒழுக்கத்தின் மூலம், அவர்களை மிகவும் தாழ்மையானவர்களாகவும், கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாகவும் மாற்றுகிறார்.

  3. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் உபத்திரவங்கள் கடந்துவர அனுமதித்தாலும், அவர் அவர்களை நன்றாகவே நடத்துகிறார். ஏனென்றால், அவர்களுக்கென்று விசேஷித்த வாக்குத்தத்தத்தை அளிக்கிறார். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரி 10:13). நாம் எவ்வளவு பலமற்றவர்கள், அற்பமானவர்கள் என்பதை அறிந்து கர்த்தர் நம்மை நடத்துகிறார். நம்முடைய மாம்சம் வெண்கலத்தினால் உண்டானது அல்ல. “என் மாம்சம் வெண்கலமோ?” (யோபு 6:12). ஒரு குழந்தையின் முதுகில் பலவானின் பாரத்தை வைப்பது போல, கர்த்தர் நம்முடைய திராணிக்கு மேலாக நம்மைச் சோதிக்கிறவர் அல்ல. வீணையின் கம்பிகள் அறுந்துபோகிற அளவிற்கு அவர் அதை மீட்டுகிறவர் அல்ல. அவர் ஒரு கையைக் கொண்டு அடித்தாலும், மறுகையைக் கொண்டு அணைக்கிறவராய் இருக்கிறார். ஒன்று, நம்முடைய நுகத்தை இலகுவாக்குவார்; அல்லது நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவார்.

  4. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் பாடுகளை அனுமதிக்கும்போது, அவர் அவர்களை நன்றாகவே நடத்துகிறார். ஏனென்றால், உபத்திரவங்கள் தடுக்கும் காரணியாய் (Preventive) செயல்படுகின்றன.

    • (அ) உபத்திரவம் பாவத்தைத் தடுக்கிறது: “அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது” (2 கொரி 12:7). செழிப்பு ஒரு போதை வஸ்து போன்றது; அது மனிதர்களைப் பாவத்தில் தூங்க வைக்கக்கூடியது. கர்த்தர் தம்முடைய சிட்சை என்ற குரலால் அவர்களை எழுப்புகிறார்; அதினால் அவர்களுடைய ஆவிக்குரிய சோம்பலைத் தடுக்கிறார்.

    • (ஆ) உபத்திரவம் நரகத்தைத் தடுக்கிறது: “நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்” (1 கொரி 11:32). ஒரு நீதிபதி, ஒரு கைதியின் மீது லேசான தண்டனையை விதித்து அவனது உயிரைக் காப்பாற்றும்போது, அவனுடன் நன்றாக நடந்துகொள்வதில்லையா? அவ்வாறே தேவன் நம்மீது லேசான உபத்திரவத்தை வரவழைத்து, வரவிருக்கும் கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்போது, அது தேவனில் காணப்படும் நன்மையல்லவா? (2 கொரி 4:17). துன்மார்க்கன் அருந்த வேண்டிய ஆழமான கோபக்கடலுடன் ஒப்பிடுகையில், தேவப்பிள்ளைகள் ருசிக்கும் தெய்வீகச் சிட்சையின் ஒரு துளி துயரம் ஒன்றுமேயில்லை!

  5. கர்த்தர் சிட்சிக்கும்போது அவர் தமது மக்களுடன் நன்றாக நடந்துகொள்கிறார். ஏனென்றால், அவர் செய்வது அனைத்தும் அன்பினிமித்தமாகவே இருக்கிறது. உபத்திரவங்கள் கூர்மையான அம்புகள் போன்றவை; ஆனால் அவை அன்பான தகப்பனின் கரங்களிலிருந்தே எய்யப்படுகின்றன. தனக்கு வாரிசாக வராத ஒருவனைத் தகப்பன் தண்டிப்பதில்லை. தேவபக்தியுள்ளவர்களைக் கடவுள் தண்டிப்பது அன்பினால்தான். “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்” (வெளி 3:19). ஆண்டவருக்கு எதிரியின் தோற்றம் இருக்கும்போதும், அவருக்குள் ஒரு தகப்பனின் இருதயமே இருக்கிறது! ஈசாக்கைப் பலியிட ஆபிரகாம் தன் கையை உயர்த்தியபோது, அவன் அவனை நேசித்தான். அப்படியே, தேவன் தன் பிள்ளைகளின் வசதிகளைத் தியாகம் செய்யும்போது, அவர் அவர்களை நேசிக்கிறார். பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்கு எதிராகக் கடுமையாக இருக்கவில்லையா? “அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (மத்தேயு 3:17). அப்படியானால், தேவன் நமக்கு அன்பின் அடையாளங்களை மட்டுமே அனுப்பினால், அவர் நம்மை நன்றாக நடத்திச் செல்கிறவராய் இருக்கிறார்.

  6. உபத்திரவங்கள் மத்தியில் தேவன் தம்முடைய பிள்ளைகளை நன்றாகவே நடத்துகிறார். ஏனென்றால், அவர் அவர்களைச் சிட்சித்தாலும் கைவிடுகிறதில்லை. “சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்” (ஏசாயா 49:14). ஆனால், “ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்” (புலம்பல் 3:31). தேவன் தமது பராமரிப்பின் செயல்களை மாற்றலாம்; ஆனால், அவருடைய நோக்கத்தை அல்ல! அவர் தமது செயல்பாடுகளை மாற்றலாம்; ஆனால் தமது இருதயத்தை மாற்ற முடியாது. “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?” (ஓசியா 11:8). இது தன் மகனுக்குரிய சுதந்திரத்தைப் பறிக்கப்போகும் ஒரு தந்தையைக் குறிக்கிறது; ஆனால் அவர் இச்செயலில் இறங்கும்போது, அவரது இதயம் பாதிக்கத் தொடங்குகிறது: “நான் அவனுடைய தந்தை, அவன் ஒரு கலகக்கார மகனாக இருந்தாலும், இன்னும் என்னுடைய மகனே; நான் எப்படி அவனை விட்டுவிடுவேன்?” தேவனுடைய இதயம் தம் பிள்ளைகள் மீது இப்படித்தான் செயல்படுகிறது. அவர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தாலும், அவர் தம்முடைய இரக்கத்தினால் அவர்களைக் கைவிடமாட்டார்!

  7. தேவன் தம்முடைய பிள்ளைகளை உபத்திரவப்படுத்தினாலும், அவர்களை நன்றாகவே நடத்துகிறார். ஏனென்றால், அவர் அவர்களுக்குத் தம் தெய்வீகப் பிரசன்னத்தை அளிக்கிறவராய் இருக்கிறார். “ஆபத்தில் நானே அவனோடிருந்து…” (சங்கீதம் 91:15). பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான உத்தரவாதத்தை தேவன் ஒருபோதும் நமக்கு வாக்களிக்கவில்லை; ஆனால் பிரச்சனையில் நம்முடன் இருப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். தேவனுடைய பிரசன்னம் இல்லாத சிம்மாசனத்தில் உட்காருவதைக் காட்டிலும், அவருடைய பிரசன்னத்தோடு கூடச் சிறையில் இருப்பது மேலானது. ஆம், தேவனுடைய பிரசன்னம் தைரியத்தைக் கொடுக்கிறது (அப் 23:11). கிறிஸ்துவானவர் மூன்று எபிரெய வாலிபர்களுடன் இல்லையா? அவர் அவர்களுடன் நெருப்புக்குள் செல்லவில்லையா? “இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்” (தானியேல் 3:25). திரித்துவத்தில் இரண்டாவது நபராக இருப்பவர், நெருப்புச் சூளையில் நான்காவது நபராகக் காணப்பட்டார்.

  8. தேவன் தம்முடைய பிள்ளைகளைச் சிட்சிக்கும்போது அவர்களுடன் நன்றாக நடந்துகொள்கிறார். ஏனெனில் இந்தத் துன்பங்கள் அல்லது கடுமையான சோதனைகள் நீண்ட காலம் நீடிக்காது. மேகங்கள் கடந்த பிறகு சூரியன் உதயமாகிறது. “இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது” (1 ராஜா 11:39). தேவன் எப்போதும் அன்பு செலுத்துகிறவர்; அதேவேளையில், எப்போதும் உபத்திரவப்படுத்துகிறதில்லை. உபத்திரவம் “ஒரு பாத்திரம்” (cup) என்று அழைக்கப்படுகிறது (எசேக்கியல் 23:32). துன்மார்க்கன் கோபக்கடலைக் குடிக்கிறான்; ஆனால் தேவபக்தியுள்ளவன் உபத்திரவம் என்ற பானத்தில் ஒரு வாய் மட்டுமே பருகுகிறான். கர்த்தர்தாமே கூடிய விரைவில், “இந்த பாத்திரம் அவர்களை விட்டு நீங்கக்கடவது” என்று கூறுவார். “சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” (ஏசாயா 35:10). துன்பம் நம்மைக் கொட்டுவதற்கு கொடுக்குகளைக் கொண்டிருந்தாலும், அத்துன்பம் சீக்கிரம் பறந்துபோக அதற்குச் சிறகுகளும் உண்டு.

  9. தேவன் தம்முடைய பிள்ளைகளின் பாடுகளின் வேளையில், அவர்களை நன்றாகவே நடத்துகிறார். கர்த்தர் தேவபிள்ளைகளின் சிட்சைக்கும், துன்மார்க்கனுடைய தண்டனைக்கும் வித்தியாசத்தை வைத்திருக்கிறார். தேவபக்தியுள்ளவன் தன்னுடைய சுகவீனத்தில் வலியை மட்டுமே கொண்டிருக்கிறான். அதேவேளையில் துன்மார்க்கனோ, “அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்” (பிரசங்கி 5:17). தேவன் தன் பிள்ளைகளை நோக்கி ஒரு அம்பு மட்டுமே எய்கிறார்; ஆனால் துன்மார்க்கன் மீதோ அம்பு மழையைப் பெய்யப்பண்ணுகிறார். அவர் அவர்களை, அவர்களின் உடல், சொத்து, மனசாட்சி என அனைத்திலும் தண்டிக்கிறவராய் இருக்கிறார். தேவபக்தியுள்ளவன் தன்னுடைய துன்பத்தில் கடவுளுடைய பரிதாபத்தைக் கொண்டிருக்கிறான் (ஏசாயா 63:9). அதேவேளையில் துன்மார்க்கன் அவனுடைய ஆபத்து வேளையில், தேவனுடைய பரிகாசத்தைக் கொண்டவனாய் இருக்கிறான் (நீதி 1:26). தேவபக்தியுள்ளவன் அவனுடைய பாடுகளின் வேளையில், கிறிஸ்துவானவர் அவனுக்காக ஜெபிப்பதைக் கொண்டிருக்கிறான். அதேவேளையில் துன்மார்க்கன் கிறிஸ்துவின் ஜெபத்திற்குத் தூரமாய் இருக்கிறான்: “உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல்…” (யோவான் 17:9).

  10. தேவன் தம் பிள்ளைகளைச் சிலுவைப் பள்ளியில் சேர்க்கும்போது அவர்களுடன் நன்றாக நடந்துகொள்கிறார். ஏனென்றால், இந்தத் துன்பங்கள் அவர்களைப் பரலோகத்திற்குத் தமது கையால் அழைத்துச் செல்கின்றன. ஆம், உபத்திரவங்களின் வழியாய் நாம் பரலோகத்திற்குச் செல்கிறவர்களாய் இருக்கிறோம். “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2 கொரி 4:17). துன்பத்தின் இருண்ட நிறத்தின் மீது, கர்த்தர் மகிமையின் தங்க நிறத்தை இடுகிறார்! ஓ அழுதுகொண்டிருக்கிற பரிசுத்தவானே! என்ன ஒரு ஆசீர்வாதமான மாற்றத்தை விரைவில் நீ பெறப்போகிறாய்! நீ உன் புனிதப் பயணத்தைப் பரலோகமாக மாற்றுவாய். உன் விருப்பம் உனக்குக் கிடைக்கும். செல்வங்கள் விரும்பத்தக்கதா? உனக்கு முத்துக்களால் ஆன வாசல்கள் இருக்கும். கெளரவம் விரும்பத்தக்கதா? நீ வெண்வஸ்திரம் தரித்துக்கொண்டிருப்பாய். இன்பம் விரும்பத்தக்கதா? நீ கர்த்தருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசிப்பாய்.

ஓ, ஜீவ நதியில் இனிமையாக மூழ்கி, தேவனுடைய அன்பின் தேன் நீரோடைகளில் என்றென்றும் நீராடுவது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பார்! ஆகா! அது என்னவிதமான அழகான காட்சியாய் இருக்கும் என்று சிந்தித்துப்பார்! பரலோகத்தின் பூக்களால் ஆன மாலையை அணிந்தால் எப்படி இருக்கும்! ஓ, ஒரு கிறிஸ்தவனின் எல்லா சோதனைகளுக்கும் இது என்ன ஒரு ஈடுசெய்தலாய் இருக்கும்! இந்தப் பேரின்பத்தைப் பார்த்தாலே அவனது துன்பங்களை மறக்கச் செய்யும்! மகிமையின் ஒரு சூரியக் கதிர், அவனது கண்ணீரின் வெள்ளத்தை வறண்டுவிடச் செய்யும்!

நடைமுறைச் சிந்தனை: தேவன் நம்முடன் நன்றாக நடந்துகொண்டால் - முக்கியமாக அவர் நம்மைத் தண்டிக்கும்போது - தேவனைப் பற்றிய நல்ல எண்ணங்களைப் போற்றுவது பொருத்தமானது. நாம் துன்பத்தில் இருக்கையில் கர்த்தரைப் பற்றிக் கடுமையாகச் சிந்திக்க ஏதுவுண்டு; இது நமது பெருமையின் வெளிப்பாடாகும். அத்தகையவர்கள் மற்றவர்களை விடத் தங்களைச் சிறந்தவர்கள் என்றும், தேவனுடைய கைகளில் தாங்கள் இன்னும் சிறந்ததைப்பெறத் தகுதியானவர்கள் என்றும் நினைக்கிறார்கள். இந்த முணுமுணுப்பு பெருமையை வெளிப்படுத்துகிறது! ஓ, நாம் தேவனைப் பற்றிய கடுமையான எண்ணங்களைக் கொண்டிருப்பதில் எச்சரிக்கையாய் இருப்போம்! ஒரு மருத்துவர் தன் நோயாளிக்கு ஒரு கசப்பான மருந்தை பரிந்துரைக்கும்போது, அந்த மருத்துவரைப் பற்றித் தவறாக நினைக்க எந்தக் காரணமும் இல்லை; அவர் குணமாக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கிறார் என்று நம்புவது அவசியமாயிருக்கிறது. அதேபோல, தேவனுடைய பராமரிப்பின் கீழ் வரும் அனைத்துத் துயரங்களும் அவருடைய கரத்திலிருந்து வருகிறதே ஒழிய, எதிரியின் காயங்கள் அல்ல! தேவன் அடிக்கிறார் என்றால், அவர் நம்மைக் காப்பாற்றுவதற்கே அடிக்கிறார். கடுமையான துன்பத்திலிருந்து தேவன் தம்முடைய மகிமையையும் நம் மகிழ்ச்சியையும் வடிகட்டுகிறவராய் இருக்கிறார்!