கிறிஸ்தவரின் தொடக்க நிலை
படிப்புகள்: 792
Print
ஆசிரியர்: கருண்குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 11 நிமிடங்கள்

இன்று பலர் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். திருச்சபைக்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும், பண்டிகைகளிலும், சிறப்பான கூட்டத்திற்குச் செல்லும் அனைவரையும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கபடுவது சரியா? தொடர்ந்து வாசிக்க...

சில மாதங்களுக்கு முன்பு, நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, என் அருகில் அமர்ந்திருந்தவரிடம் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கில் உரையாடத் தொடங்கினேன். "உங்கள் பெயர் என்ன? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "என் பெயர் எலியா, நான் பால் வியாபாரி," என்றார். “எலியா என்பது வேதாகமப் பெயர் ஆயிற்றே!” என்று எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது. தொடர்ந்து நான் அவரிடம், "நீங்கள் ஆலய ஆராதனைக்குச் செல்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நான் எப்போதாவது செல்வதுண்டு. ஆனால் என் வீட்டில் அனைவரும் செல்வார்கள்; நாங்களும் கிறிஸ்தவர்கள் தான். எங்கள் தாத்தா காலத்திலிருந்தே எங்கள் குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்தவர்கள் தான்," என்றார்.

அந்த வார்த்தை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. கிறிஸ்தவம் என்றால் என்ன? உண்மையான கிறிஸ்தவர்கள் யார்? என்பதை அவருக்குத் தெளிவாகவும், நிதானமாகவும் விளக்க முயற்சித்தேன். அப்போது அவர் என்னைப் பார்த்து, "நீங்கள் சொல்வது போலானால், எனக்குத் தெரிந்தவரை பூமியில் யாருமே கிறிஸ்தவர்களாக இருக்க மாட்டார்கள்," என்றார். அதற்கு நான், "அப்படியெல்லாம் இல்லை சகோதரரே! பலர் இருக்கிறார்கள்; நீங்களும் கூட உண்மையான கிறிஸ்தவராக மாறலாம்," என்று பதிலளித்தேன்.

இன்று பலர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் ஆலயத்திற்குச் செல்பவர்கள் அனைவரையும் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பது சரியா? கிறிஸ்தவக் குடும்பங்களில் பிறந்தவர்கள் அல்லது கிறிஸ்தவப் பெயர் கொண்டவர்கள் தானாகவே கிறிஸ்தவர்களாக மாறிவிட முடியுமா? குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களா? என்று பார்த்தால், நிச்சயம் இல்லை. அப்படியானால், உண்மையான கிறிஸ்தவர்கள் யார்? தேவனுடைய வார்த்தையிலிருந்து கவனமாகக் கற்றுக்கொள்வோம்.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களும், அவருடைய சீஷர்களுமே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். "முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று" (அப்போஸ்தலர் 11:26) என்று பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம். வேத வார்த்தையின்படி, ஒரு நபர் கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுவதற்கு சில முக்கிய குணாதிசயங்கள் அவசியம். அத்தகையவர்களின் கிறிஸ்தவப் பயணம் எவ்வாறு தொடங்குகிறது என்பதை வேத வசனங்களின் அடிப்படையில் பார்ப்போம்.

1. மறுபடியும் பிறந்தவர்கள் (Regeneration)

ஒரு மனிதனின் இரட்சிப்பு அவன் மறுபடியும் பிறப்பதிலிருந்தே தொடங்குகிறது. "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 3:3) என்று இயேசு கூறினார். இது தேவனுடைய செயல். "கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்" என்று எசேக்கியேல் 36:26-ல் பார்க்கிறோம். ஒரு நபரில் இரட்சிப்பின் செயலைத் துவங்குகிறவரும், அதை கிறிஸ்துவின் நாள்வரைக்கும் நடத்துகிறவரும் தேவனே என்பதை பிலிப்பியர் 1:6 மற்றும் எபேசியர் 1:3-12, 2:1-10 ஆகிய வசனங்களில் மிகத் தெளிவாகக் காண முடியும்.

மனிதர்கள் தங்கள் சுய முயற்சியினால் தேவனிடத்தில் சேர முடியாது; ஏனெனில், அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் மரித்த நிலையில் இருக்கிறார்கள். தேவனே தம்முடைய கிருபையினால் நம்மை உயிர்ப்பிக்கிறார் (எபேசியர் 2:4-5). இந்த மரித்த நிலையிலிருந்து உயிர்ப்பிக்கப்படுவதே மறுபிறப்பு ஆகும். வீழ்ச்சியடைந்த இவ்வுலகத்தில், பாவத்திலும் சாபத்திலும் இருளடைந்த வாழ்க்கையை வாழும் மனிதர்கள் மீது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளி பிரகாசிக்கும்போது, அவர்கள் தங்கள் நிலையை உணர்வடைவார்கள். ஆதித் திருச்சபையில் மக்கள் அவ்வாறு இருந்தார்கள் என்பதை அப்போஸ்தலர் 2:37-42 வரையுள்ள வசனங்களில் காண்கிறோம். இன்றைய காலகட்டத்தில், சபை அங்கத்தினர்கள் உண்மையிலேயே மறுபடியும் பிறந்திருக்கிறார்களா? அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த சுவிசேஷம் அறிவிக்கப்பட்டதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

2. பாவத்திற்காக மனவருத்தம் அடைந்தவர்கள் (Repentance)

ஆதித் திருச்சபையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டபோது, மக்கள் தங்கள் பாவ நிலையைக் கண்டு இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கதறியதை அப்போஸ்தலர் 2:37-ல் பார்க்கிறோம். மறுபிறப்படைந்த எவரும், சுவிசேஷத்தைக் கேட்கும்போது தங்கள் பாவங்களின் தீவிரத்தை உணர்ந்து வெட்கப்படுவார்கள்; தேவனுக்கு முன்பாக மனந்திரும்புவார்கள். சுவிசேஷத்தின் வெளிச்சத்தில் தேவனின் மகா பரிசுத்தத்தையும், தங்கள் கொடிய பாவத்தையும் உணர்ந்தவர்களால் கண்ணீருடன் பாவங்களை அறிக்கை செய்யாமல் இருக்க முடியாது.

"பரிசுத்தமான தேவனே, என்னுடைய பாவங்களை மன்னியும்" என்று உடைந்த உள்ளத்தோடும், வேதனையோடும் தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடுவார்கள். இத்தகைய உண்மையான தெய்வீக மனந்திரும்புதலே இரட்சிப்புக்கு வழிநடத்துகிறது. "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9). இத்தகைய தெய்வீக மனந்திரும்புதலையும், இரட்சிப்பையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? இல்லையெனில், நீங்கள் இன்னும் உண்மையான இரட்சிப்பைப் பெறவில்லை என்பதை உணருங்கள்.

3. மனமாற்றம் அடைந்தவர்கள் (Conversion)

பரிசுத்த ஆவியானவரால் மறுபிறப்பு அடைந்தவர்கள், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, தங்கள் சிருஷ்டிகரான தேவனிடம் பாவமன்னிப்பைப் பெறுவார்கள். அதன்பிறகு, அவர்களுடைய வாழ்க்கை முறை உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் முற்றிலும் மாற வேண்டும். "மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்" (அப்போஸ்தலர் 2:40).

முன்பு பாவம் செய்ய ஓடியவர்கள், மனமாற்றத்திற்குப் பிறகு பாவத்தை வெறுத்து ஒதுக்குவார்கள். முன்பு பேசிய தகாத வார்த்தைகளை இனி பேசமாட்டார்கள். முன்பு இருந்த தீய எண்ணங்கள் மறைந்துபோகும். மாம்சத்தின் இச்சையின்படி வாழ்ந்தவர்கள், இனி தேவனுடைய சித்தத்தின்படி புதிய வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். அவர்கள் பரிசுத்தத்தை நேசிப்பவர்களாகவும், வேத வசனத்தின்படி புதிதாக்கப்பட்ட மனதை உடையவர்களாகவும் இருப்பார்கள். இதுவே உண்மையான மனமாற்றம் (நெகேமியா 9:35). இந்த மனமாற்றம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்க வேண்டிய உறுதியான அடையாளம் என்பதை மத்தேயு 3:2, லூக்கா 13:3, அப்போஸ்தலர் 2:38, 20:21 போன்ற பல வசனங்களில் தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடியும். இத்தகைய உண்மையான மனமாற்றத்தின் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்.

4. இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்கள் (Faith in Christ)

'சுவிசேஷம்' என்ற வார்த்தையைச் சுருக்கமாகச் சொன்னால் அது "இயேசு கிறிஸ்துவே" ஆகும். "கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்" என்பதே சுவிசேஷம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 15:1-5 வசனங்களில் கூறுகிறார்.

தேவன் மனிதனைத் தம் சாயலில் படைத்தாலும், மனிதன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து பாவம் செய்ததினால் சபிக்கப்பட்டான். தாயின் கர்ப்பத்தில் உருவாகும்போதே பாவ சுபாவத்துடன் இருப்பதால், மனிதன் தேவனுடைய கோபத்திற்கு ஆளானான். தேவனுடைய நீதியான தண்டனையிலிருந்து மனிதனை மீட்கவோ, தேவனுடன் மீண்டும் இணைக்கவோ வேறு எந்த வழியும் இல்லை. இத்தகைய நம்பிக்கையற்ற சூழலில், தேவனே தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்காக அனுப்பினார். இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, சிலுவை மரணத்தின் மூலம் தேவனுடைய நீதியை நிறைவேற்றி, தம்முடைய உயிர்த்தெழுதலினால் மரணத்தை ஜெயித்தார். தன்னை விசுவாசிக்கும் அனைவரையும் மீண்டும் தேவனுடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்கிறார். இதை முழுமையாக நம்பி, இயேசு கிறிஸ்துவை மட்டுமே இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு வாழ்வதே விசுவாசம் ஆகும். கிறிஸ்துவின் மீது இத்தகைய உறுதியான விசுவாசம் உங்கள் இருதயத்தில் உள்ளதா?

5. வசனத்திற்குக் கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெற்றவர்கள் (Baptism)

பரிசுத்த ஆவியானவரால் மறுபிறப்பு அடைந்து, பாவ மன்னிப்பைப் பெற்று, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்கள், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒரு உள்ளூர் திருச்சபையில் முறைப்படி ஞானஸ்நானம் பெற வேண்டும். "நான் இனி கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன்" என்று திருச்சபைக்கும் சமுதாயத்திற்கும் முன்பாக சாட்சி கொடுப்பதே ஞானஸ்நானம் ஆகும். உள்ளத்தில் நடந்த மாற்றத்திற்கு வெளிப்புற அடையாளம் ஞானஸ்நானம்.

நாம் கிறிஸ்துவுடனேகூட மரித்து, அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாக நித்திய ஜீவனைப் பெறுகிறோம் என்பதன் அடையாளமே முழுக்கு ஞானஸ்நானம். கிறிஸ்துவின் சீஷராகும் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பது இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் போதனையாகும் (மாற்கு 16:16, அப்போஸ்தலர் 2:38, 22:16). மனந்திரும்புதலும், விசுவாசமும் இல்லாமல் தண்ணீரில் மூழ்குவது உண்மையான ஞானஸ்நானம் அல்ல; அது நம்மை இரட்சிக்காது. உண்மையாக மறுபிறப்பு அடைந்தவன் மனந்திரும்புவான், விசுவாசிப்பான், ஞானஸ்நானம் பெறுவான்.

முடிவுரை

திருச்சபையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்போது, இரட்சிப்புக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக அந்த சுவிசேஷத்தினால் தொடப்பட்டு, கிறிஸ்துவின் சீஷர்களாக மாற்றப்படுவார்கள். இவ்வாறு தொடங்கப்பட்ட கிறிஸ்தவப் பயணம், தேவனுடைய சித்தத்தின்படியும், அவருடைய மகிமைக்காகவும் நித்தியத்தை நோக்கித் திருச்சபையால் வழிநடத்தப்பட வேண்டும். நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சாயலாகவும், அவருடைய சீஷர்களாகவும் மாறுவதே திருச்சபையின் குறிக்கோளாக இருக்க வேண்டும் (மத்தேயு 28:18-20). இத்தகைய குணாதிசயங்களைக் கொண்டவர்களை மட்டுமே 'கிறிஸ்தவர்கள்' என்றும், அத்தகைய கூட்டத்தையே 'திருச்சபை' என்றும் அழைக்க வேண்டும். பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருப்பது பயன் தராது.

தேவன் நம்மை உண்மையான கிறிஸ்தவர்களாகவும், உண்மையான திருச்சபையாகவும் மாற்றுவாராக! ஆமென்.