எல்லோரும் செய்ய வேண்டிய ஊழியம்
படிப்புகள்: 19
Print
ஆசிரியர்: யஸ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 7 நிமிடங்கள்

தலைப்பை வாசித்தவுடனே, இந்தக் கட்டுரை சுவிசேஷ ஊழியம் குறித்தோ அல்லது மற்றவர்களை சீஷர்களாக்கும் ஊழியம் குறித்தோ அல்லது இதுபோன்ற வேறு ஏதோ ஒன்றைக் குறித்தோ எழுதப்பட்டது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், விசுவாசிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய ஊழியங்களில் மிக முக்கியமான ஒன்று - 'ஒருவருக்கொருவர் புத்திசொல்லுதல்'. இந்த ஊழியத்தை யாரெல்லாம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்வோம். 

இந்த ஊழியத்தை யாரெல்லாம் செய்ய வேண்டும்?

"இது போதகர்கள் அல்லது சபை மேய்ப்பர்கள் மட்டுமே செய்யும் ஊழியம் அல்லவா? நாங்கள் இதைக் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?" என்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மைதான், அநேகருக்கு அதே எண்ணம் இருக்கிறது. போதிப்பதும், புத்திசொல்லுவதும் போதகர்கள் அல்லது சபை மூப்பர்கள் மட்டுமே செய்ய வேண்டிய ஊழியம் என்று நினைக்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அத்தகைய வசனங்கள் வேதாகமத்தில் உள்ளன. உதாரணமாக:

தீத்து 1:9 - "ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்துப் பேசுகிறவர்களுடைய வாயை அடக்கவும் வல்லவனாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனாயிருக்கவேண்டும்."

இத்தகைய வசனங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஊழியம் போதகர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த ஊழியத்தை விசுவாசிகள் அனைவரும் செய்ய வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. சில வேதப்பகுதிகளைப் ஆராய்ந்து பார்ப்போம்:

ரோமர் 15:14 - "என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினால் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நான் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்."

கொலோசெயர் 3:16 - "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடுங்கள்."

எபிரெயர் 3:13 - "உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப்போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்."

அதுமட்டுமல்லாமல், புத்திசொல்லுதல், எச்சரித்தல் மற்றும் உபதேசித்தல் ஆகிய கட்டளைகள் சில குழுவினருக்குப் குறிப்பாகக் கொடுக்கப்பட்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

தீத்து 2:1-6 - "1. நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கு ஏற்றவைகளைப் பேசவேண்டும். 2. முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கவும்; 3. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே, அவதூறு பண்ணுகிறவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்பட்டவர்களுமாயிராமல், வணக்கத்துக்குரிய நடக்கையுள்ளவர்களும், நற்போதனையைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும்; 4. தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு, பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5. தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி அவர்களுக்குப் படிப்பிக்கவும் வேண்டும். 6. அப்படியே வாலிபரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க அவர்களுக்குப் புத்திசொல்லு."

இவ்வசனங்களில் புத்திசொல்லுதல் மற்றும் போதித்தல் எனும் ஊழியத்தைப் பவுல் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்கும், ஆண்களுக்கும் ஒப்புவிக்கிறார். இதுமட்டுமல்லாமல், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும் என்றும் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார். எபேசியர் 6:4 - "பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்க்கக்கடவீர்கள்."

சரி, இவையெல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொருவரும் சபை மூப்பர்களாகவோ, உதவிக்காரர்களாகவோ (Deacons) மாறிவிட வேண்டும் என்பது இந்த வேதப்பகுதிகளின் அர்த்தம் அல்ல. அந்த ஊழியத்தைச் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய சில தகுதிகளை தேவன் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார். அந்தத் தகுதிகள் அல்லது நற்குணங்களைக் கொண்ட ஆண்கள் மட்டுமே ஒரு சபையை நடத்தும் தலைவர்களாக இருக்கத் தகுதியுள்ளவர்கள். எனவே, இவ்விஷயத்தை மிகவும் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். போதகர்கள் அல்லது சபை மூப்பர்கள் செய்ய வேண்டிய பல பணிகளில், இந்தப் புத்திசொல்லுதல் அல்லது எச்சரித்தல் என்பதும் ஒன்று. அது அவர்களின் ஊழியத்தில் ஒரு பகுதி. ஆனால், அப்பணியை அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லாமல், அது விசுவாசிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொறுப்பு என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பு: மேலே நாம் வாசித்த வேதப்பகுதிகளில் ஆங்கிலத்தில் 'admonish', 'instruct' என்று உள்ளன. ஆனால், தமிழிலும் கிரேக்கத்திலும் இச்சொற்களுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. போதித்தல், புத்திசொல்லுதல், எச்சரித்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.

சரி, விசுவாசிகள் அனைவரும் இந்த ஊழியத்தைச் செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், எந்தெந்த விஷயங்களில் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வேண்டும்? இந்த ஊழியத்தைச் செய்வதற்கு நாம் நம்மை எப்படி ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்?

எந்தெந்த விஷயங்களில் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வேண்டும் என்பதற்குச் சில உதாரணங்களைச் சொல்கிறேன். அநேக விஷயங்களில் ஒருவருக்கொருவர் புத்திசொல்லவும், எச்சரிக்கவும் வேண்டிய அவசியம் இருந்தாலும், மூன்று முக்கியமான விஷயங்களை மட்டும் நான் ஞாபகப்படுத்துகிறேன்.

முதலாவதாக, உங்கள் சகோதரன் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துப்போடும்படிச் சொல்வது. மிகுந்த மனத்தாழ்மையுடனும், தீன மனதுடனும், மற்றவர்கள் கிறிஸ்துவின் வழியிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தில் விலகிப் போவதை உணரும்போது, அப்படிச் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பதைப் புரியும்படி அன்போடு சொல்லித் திருத்த வேண்டும். நிச்சயமாக, அதற்கு முன்னதாக, உங்கள் கண்ணில் இருக்கும் உத்திரத்தை நீங்கள் எடுத்துப்போட வேண்டும். இல்லையெனில் இயேசு கிறிஸ்து கொடுத்த எச்சரிப்பு உங்களுக்கும் பொருந்தும் (மத்தேயு 7:3-5). தன் சொந்தக் கீழ்ப்படியாமையின் விஷயத்தில் மனஸ்தாபப்படாமலும், தன் கெட்ட நடத்தையை மாற்றிக்கொள்ளாமலும், மற்றவர்களைத் திருத்தப் புறப்படுபவர்களைக் குறித்தே ஆண்டவர் இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்.

எனினும், நாம் முழுமையாகப் பரிசுத்தவான்கள் ஆன பிறகுதான் மற்றவர்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல. ஏனெனில், நாம் மரிக்கும்போது மட்டுமே கிறிஸ்துவைப் போன்ற பரிபூரண நிலையை அடைவோம். அப்படியானால் யார் இந்தப் பணியைச் செய்யலாம்? தேவவசனத்தின் நியமங்களுக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அனுதினமும் பாவத்தோடு போராடும் அனுபவத்தைக் கொண்டு, நீதிமானைப் போல எத்தனை முறை விழுந்தாலும் திரும்ப எழுந்து, மெய்யான மனஸ்தாபத்தோடும் மனந்திரும்புதலோடும் ஜீவித்து, பாவத்திற்கு எந்தச் சூழ்நிலையிலும் இடங்கொடாமல், அதை வெறுத்து, அதைவிட்டு விலகி ஓடுகிறார்களோ, அவர்களே உண்மையான விசுவாசிகள். பரிசுத்த ஆவியானவர் ஏதேனும் பாவத்தைக் குறித்து உங்களை உணர்த்தும்போது, அதற்காக வருந்தி, மனந்திரும்ப வேண்டும். இத்தகைய பரிசுத்தமான அல்லது தூய்மையான வாழ்க்கையை வாழ்பவர்கள், பொறுப்புடன் மற்றவர்களின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்து, அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு உபதேசிக்கவும், சரிசெய்யவும், புத்திசொல்லவும் வேண்டும்.

இரண்டாவதாக, ஆரோக்கியமான உபதேசத்தை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளவும், நேசிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும். இந்நாட்களில் வேதம் 'என்ன சொல்கிறது' என்று சிந்திப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். தங்கள் விசுவாசத்தையும் பக்தியையும் அனுபவங்களின் மேல் கட்டுகிறவர்களும், ஏதேனும் ஆதாயங்களை எதிர்பார்த்து பக்தி செய்கிறவர்களும் பெருகிவிட்டார்கள். ஆனால், நமது விசுவாசத்தை எதன் மேல் கட்ட வேண்டும் என்றால் - தேவனுடைய வார்த்தையின் மேல்தான்.

1 தீமோத்தேயு 4:6 - "இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்தால், விசுவாச வார்த்தைகளிலும் நீ இதுவரைக்கும் அநுசரித்த நற்போதனையிலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்."

எந்நேரமும் மேலோட்டமான விஷயங்களை மட்டுமல்ல, கோட்பாட்டு ரீதியாகவும் (Theologically) வார்த்தையின் போதனையை ஆராயவும், தியானிக்கவும், கற்றுக்கொள்ளவும் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். 'தேறினவனாகி' (Nourished/Trained) என்று தமிழில் உள்ள வார்த்தைக்கு, ஆங்கிலத்தில் 'being trained' என்று உள்ளது. நீங்களே முதலில் இந்தப் பணியைச் செய்யாமல் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்? மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்த முடியும்? எனவே, முதலில் நீங்கள் பயிற்சி பெறத் துவங்கி, நீங்கள் வளர்ந்து, மற்றவர்களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருங்கள். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கும் முன்னதாக, நீங்கள் நல்ல மாதிரியைக் காண்பித்து, அதன் பிறகு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் பணியைச் செய்யுங்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதேனும் ஒரு தலைப்பைக் குறித்துக் கற்றுக்கொள்ள விரும்பும்போது, அந்தத் தலைப்புச் சார்ந்த புத்தகங்கள் எவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்விதமாக நீங்கள் முதலில் வசனத்தைப் பற்றிக்கொண்டு, மற்றவர்களும் அவ்வாறு செய்யும்படி உபதேசித்து, போதித்து, எச்சரித்து, புத்திசொல்லுங்கள்.

மூன்றாவதாக, ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கை சார்ந்த அழைப்பு இருக்கும். நீங்கள் குடும்பத்தில் ஒரு மனைவியாகவோ, கணவனாகவோ, மகனாகவோ, மகளாகவோ, தாயாகவோ, தகப்பனாகவோ இருப்பதற்கும், அப்படியே சபையிலும் வெவ்வேறு பொறுப்புகளை வகிப்பதற்கும் அழைக்கப் பட்டிருக்கலாம். அவற்றை நிறைவேற்றும் விஷயத்தில் அநேக விதங்களில் ஒருவருக்கொருவர் புத்திசொல்லவும், எச்சரிக்கவும் வேண்டும். முதிர்வயதுள்ள ஸ்திரீ-புருஷர்கள் வாலிபர்களுக்கு எத்தகைய ஊழியம் செய்ய வேண்டும் என்று சற்றுமுன் வாசித்தோம் அல்லவா? அப்படியே தகப்பன்மார்களுக்குப் பிள்ளைகளின் விஷயத்தில் எத்தகைய பொறுப்புகள் உள்ளன என்பதையும் வாசித்தோம் (தீத்து 2:3-5; எபேசியர் 6:4).

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளின் வழியே கடந்து செல்லும்போது, விசுவாச வாழ்க்கையிலும் பக்தி வாழ்க்கையிலும் நமக்கு முன்னே நடந்தவர்களின் மற்றும் நம்மைவிட அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதல் அனைவருக்கும் அவசியம். அத்தகைய வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் இருந்து, மற்றவர்களை நீங்கள் வழிநடத்த வேண்டும். தேவன் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த காரியங்களை உங்கள் சக சபை அங்கத்தினர்களுடனும், உங்கள் பிள்ளைகளுடனும் பகிர்ந்துகொள்ளப் பழக வேண்டும். அவ்விதமாகவும் இந்தப் புத்திசொல்லுதல், எச்சரித்தல் எனும் ஊழியத்தைச் செய்யலாம்.

இந்த ஊழியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியுமா?

எபேசியர் 4:15 - "அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படி இப்படிச் செய்யுங்கள்."

சத்தியத்தைச் சொல்லும் விசுவாசிக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பண்பைக் குறித்து இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; அதுவே அன்பு. எல்லாச் சூழ்நிலைகளிலும் மென்மையாக, சாந்தமாகப் பேசுவது மட்டுமே அன்பு என்று நான் சொல்லவில்லை. ஏனெனில், சாந்தமாகவும் பாசத்துடனும் பேச வேண்டிய சூழ்நிலைகளும் உண்டு; கடிந்து எச்சரிக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டு. இயேசு கிறிஸ்துவும் சாந்தமாகப் பேசிய தருணங்களும் உண்டு, சவுக்கை எடுத்து விரட்டியடித்துக் கடிந்துகொண்ட தருணங்களும் உண்டு. அன்பிற்கு நாம் புதிய விளக்கங்களைக் கொடுக்காமல், வேதம் அங்கீகரிக்கும் வரம்பிற்குள், சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்துகொள்ளும் ஞானத்தை நமக்குத் தந்தருளும்படி ஆண்டவரை மன்றாட வேண்டும்.

ஆனால், இந்தப் புத்திசொல்லுதல், எச்சரித்தல் எனும் ஊழியத்தைச் செய்யும் நபரின் இருதய நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தில் வாசிக்கிறோம். உங்கள் சகோதரன் அல்லது சகோதரியின் மேல் உங்களுக்குள்ள அன்பே, அவர்களுக்கு இந்த ஊழியத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். கேவலம் மற்றவர்களின் தவறுகளை எண்ணிக் காண்பித்து, அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்றோ அல்லது ஏதோ கெட்ட நோக்கங்களைக் கொண்டு, வெளிப்பார்வைக்கு அன்பாக நடித்து, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்றோ, மற்றவர்களை வெறுத்து, அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்துவது போன்ற பாவங்களைச் செய்யவோ இந்த ஊழியத்தைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. இது ஒரு விசுவாசிக்கு இருக்க வேண்டிய குணம் அல்ல. அன்பு என்பது ஒரு விசுவாசியிடம் தெளிவாகத் தெரியும் அடையாளம். மிக முக்கியமாக, இந்தப் புத்திசொல்லுதல் மற்றும் எச்சரித்தல் ஊழியத்தைச் செய்யும் விசுவாசி, அன்புடன் சத்தியத்தைப் போதிக்கிறவனாய் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 கொரிந்தியர் 13:4-6 - "...அன்பு பொறாமைப்படாது... 5. அயோக்கியமாய் நடக்காது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, 6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்."

முடிவுரை

இவ்விதமாக ஒருவருக்கொருவர் புத்திசொல்லி, சரிசெய்வதன் மூலம், தேவன் எதிர்பார்த்த வண்ணமாகச் சபை வளருவதற்கு வாய்ப்பு உண்டாகும். மனத்தாழ்மையுடனும், மரியாதையுடனும், அன்போடும் மற்றவர்களை எச்சரித்து, புத்திசொல்லி, மற்ற விசுவாசிகளுக்கு நீங்கள் பிரயோஜனமுள்ளவர்களாய் இருக்கும்படி தேவன் உங்கள்மேல் கிருபை பாராட்டுவாராக. ஆமென்.