“நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” (மாற்கு 11:24).
“அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்” என்ற வார்த்தைகளின் மூலம், தேவன் அவைகளை நமக்கு அளிப்பார் என்று நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், அநேக தேவபிள்ளைகள் இந்த இடத்தில்தான் தங்களுடைய ஜெப வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள். ஜெபத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று காரியங்கள் உண்டு:
முதலாவது, நீங்கள் கேட்பது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதாய் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” என்று 1 யோவான் 5:14-ல் வாசிக்கிறோம். இவ்விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், சாத்தான் நம்மைப் பாழாக்கிவிடுவான். அவன் “ஒளியின் தூதனைப்போல” வந்து, தேவனுடைய பரிசுத்தமான சித்தத்துக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி உங்களுக்கு ஒரு பிரசங்கமே செய்வான். ஆம், சாத்தானால் அதையும் செய்ய முடியும்! தேவனுடைய சித்தம் என்ன என்பதை அறிவது நமது பாக்கியமும் கடமையுமாகும். “ஆகையால் நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:17).
இந்த வசனம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தைப் பற்றியே பேசுகிறது. ஏனெனில், அவருடைய “மறைவானவைகளைப்” பற்றி நாம் ஒன்றும் செய்யமுடியாது; அது நம்முடைய வேலையும் அல்ல. ஆனால், தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தம் அவருடைய வார்த்தையில் நமக்குத் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கடைப்பிடிக்கும்படி தேவன் உங்களுக்குக் கொடுத்துள்ள ஒவ்வொரு கட்டளையும், நியமமும், உபதேசமும் உங்களுக்கான “தேவ சித்தம்” ஆகும். அந்தச் சித்தத்தை நிறைவேற்றுவதற்கான வல்லமையையும் கிருபையையும் வேண்டி, அவையனைத்தும் நமது ஜெபமாக மாற வேண்டும். இதை நீங்கள் உங்கள் மனதில் உறுதியாகப் பதியவைத்துக்கொள்ளுங்கள்; இதைப்பற்றிச் சந்தேகத்தை எழுப்பக்கூடிய எந்த எண்ணத்தையும் சாத்தான் உங்களுக்குள் புகுத்த இடங்கொடாதீர்கள் (எபேசியர் 4:27).
நீங்கள் “பரிசுத்தமுள்ளவர்களாகவும்” (1 தெசலோனிக்கேயர் 4:3), “சந்தோஷமாய் இருக்கிறவர்களாகவும்” (பிலிப்பியர் 4:4), “உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்துகிறவர்களாகவும்” (2 பேதுரு 1:10), “இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருகிறவர்களாகவும்” இருக்கவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (2 பேதுரு 3:18).
இரண்டாவதாக, வாக்குறுதிகளைப் பற்றிக்கொண்டு மன்றாடுங்கள். நீங்கள் கேட்பது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதாய் இருக்கிறதா என்பதை உறுதிசெய்த பிறகு, மத்தேயு 7:7, பிலிப்பியர் 4:19 போன்ற அவருடைய வாக்குறுதிகளை முன்னிறுத்தி நீங்கள் உருக்கமாய்க் கெஞ்சி மன்றாடுங்கள். கிறிஸ்துவின் நாமத்தினால் அவற்றைக் கேளுங்கள். உங்களுடைய “இருதயத்தின் வேண்டுதல்களை” (சங்கீதம் 37:4) தேவன் நிறைவேற்றி, கிறிஸ்துவினிமித்தம், உங்களுடைய தேவபக்தியுள்ள நடத்தையின் மூலம் தேவன் மகிமைப்பட வேண்டுமென்றும், உங்களுடைய நற்சாட்சியின் மூலம் அவருடைய ஜனங்கள் உதவியும் ஊக்கமும் பெறவேண்டுமென்றும் அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அத்தகைய “வேண்டுதல்களை” தேவன் ஒருபோதும் நிராகரிக்கமாட்டார்.
மூன்றாவது, நீங்கள் கேட்டுக்கொண்டபடியே தேவன் செய்வார் என்று எதிர்பாருங்கள். இதையே நாங்கள் ஆவலுடனும், அன்புடனும் கிறிஸ்தவ வாசகரின் மனதில் வலியுறுத்த விரும்புகிறோம். இந்த எதிர்பார்ப்பு இல்லையென்றால், விசுவாசம் முழுவதுமாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். விசுவாசியில் உள்ள இந்த எதிர்பார்ப்பே தேவனை கனம்பண்ணி, அவரைப் பிரியப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தேவனிடமிருந்து சமாதானமுள்ள பதில்களை எப்போதும் பெற்றுத்தருகிறது. மலைபோன்ற சில பிரச்சனைகளும், சோதனைகளும் உங்கள் முன் வரலாம். ஆனால், அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவை உங்களைச் சோர்வடையச் செய்யவோ, ஊக்கமிழக்கச் செய்யவோ அல்லது பயமுறுத்தவோ விட்டுவிடாதீர்கள்.
“நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால்... இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 21:21) என்று நித்தியமான சத்திய வார்த்தையில் எழுதப்பட்டிருப்பதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்!
இதை நன்றாகக் கவனியுங்கள்! “நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால்” என்பது, “நீங்கள் விசுவாசமுடையவர்களாய்,” பிறகு (தேவனுடைய பதிலுக்குக் காத்திருக்கும்போது) “சந்தேகப்படாமல்” தேவனுடைய வாக்குறுதியின் நிறைவேறுதலைத் தொடர்ந்து எதிர்பாருங்கள் என்றே அர்த்தப்படுகிறது. நீங்கள் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிடும்போது, அவரிடமிருந்து “இல்லை” என்கிற பதிலை ஏற்காமல், “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (ஆதியாகமம் 32:26) என்று மரியாதையுடன்கூடிய நிச்சயத்துடன் பேசும் விசுவாசத்தின் எதிர்பார்ப்பை, தேவன் தம்முடைய ஆவியின் மூலம், அவருடைய சொந்த மகிமையின் பொருட்டு உங்களுக்குள் செயல்படுத்தும்படிக்குக் கிறிஸ்துவின் நாமத்தினால் கெஞ்சி மன்றாடுங்கள். அதுவே தேவனுக்குக் கனமளித்து அவரைப் பிரியப்படுத்தும்; மேலும், அவரிடமிருந்து பதிலையும் பெற்றுத் தரும்.
“அதிகார வட்டத்தில் உள்ள ஒரு நண்பன்” (A friend at court) என்ற சொற்றொடர் பழைய வாசகர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆனால், இந்தத் தலைமுறையில் அந்தச் சொற்றொடர் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டது. உயர்ந்த பதவியில் அல்லது அதிகாரத்திலுள்ள ஒருவர் நமக்கு நண்பராக இருந்து உதவுவது என்பதே இதன் பொருள். ஒரு கிறிஸ்தவனுக்குப் பரலோக நீதிமன்றத்தில், அவன் சார்பாக நின்று உதவும்படிக்கு ஒரு நண்பர் இருக்கிறார் என்பது எவ்வளவு விவரிக்க முடியாத ஒரு ஆசீர்வாதம்! அவர் “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவர்.” அவருக்குத் தேவன் எப்போதும் செவிகொடுக்கிறார். ஏனெனில் அவர் உலகத்திலிருக்கும்போது, “நீர் எனக்குச் செவிகொடுக்கிறபடியினால்” என்று கூறினார் (யோவான் 11:42).
அப்படியென்றால், எனக்கு அன்பான பரிசுத்தவான்களே, கிறிஸ்துவின் உதவியை நாடிக்கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதல்களை அவரிடம் கொண்டுவாருங்கள். அவற்றை அவர் தமது பிதாவிடமும், உங்களது பிதாவிடமும் தம்முடைய சகலத்தையும் ஜெயிக்கும் சொந்தத் தகுதியோடு சேர்த்துச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் கேட்பது தேவனுடைய மகிமைக்கும், உங்களுடைய (உண்மையான) நலனுக்கும் ஏற்றதாக இருந்தால், அது உங்களுக்கு நிச்சயம் அளிக்கப்படும் என்பதில் முழு உறுதியுடன் இருங்கள். இவ்வாறு கிறிஸ்து மகிமைப்படுவார்; உங்கள் விசுவாசமும் பலப்படுத்தப்படும்.