என்னைப் பலப்படுத்தும் கிறிஸ்துவால் எல்லாவற்றையும் செய்ய என்னால் முடியுமா?
படிப்புகள்: 17
Print
ஆசிரியர்: யஸ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 5 நிமிடங்கள்

 

என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய என்னால் இயலுமா? (பிலிப்பியர் 4:13)

செழிப்பு உபதேசத்தை போதிக்கும் ஒரு தவறான போதகர் (Prosperity Preacher) ஒருமுறை இப்படிக் கூறினார்: 'உன் கனவுகள் மெய்ப்படுவது சாத்தியமே. ஒவ்வொரு தடையையும் தாண்டி வெற்றிக்கொடியை நீ ஏற்றுவது உறுதி. உயர்ந்த சிகரங்களை அடைவது சாத்தியமே. உன் இலக்கை நீ அடைவது நிச்சயம். அது எப்படி நடக்கும் என்று உனக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் உன்னால் முடியும் என்றும், நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் என்றும் தேவன் சொன்னால்... நீ அதை நிச்சயம் சாதிப்பாய். 'என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு' என்ற முழக்கத்துடன் முன்னேறிச் செல்!' என்றார்.

இந்தக் கட்டுரையின் மூலம் வாசகர்கள் அடிப்படை உண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் - பிலிப்பியர் 4:13-க்கும், அந்தத் தவறான போதகர் சொல்லும் கருத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே.

அவர் சொன்னதைக் கேட்பவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான கேள்வி எழாமல் இருக்காது. 'என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு' என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளில் வரும் 'எல்லாவற்றையும்' என்ற வார்த்தை எப்படிப் புரிந்துகொள்வது? நாம் வாழ்க்கையில் லட்சியமாக வைத்துள்ள ஒவ்வொரு காரியத்திலும் தேவன் வெற்றியைத் தருவார் என்று அவர் வாக்குத்தத்தம் கொடுப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? அது உண்மையானால், ஒரு கிறிஸ்தவன் வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடையக்கூடாதே! ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லையே! பலமுறை வீழ்ச்சிக்கு வாய்ப்புள்ளது. எல்லோரும் எப்போதாவது, ஏதோ ஒன்றில் தோல்வியைத் தழுவும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படியிருக்க, இந்த வார்த்தைகளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இந்த வேத வசனத்திற்கு முன்னால் உள்ள வசனங்கள், பவுல் எழுதிய வார்த்தைகளின் சரியான நோக்கத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

பிலிப்பியர் 4:11-13: "11. எனக்குக் குறைச்சலுண்டானபடியினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில், நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். 12. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். 13. என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு."

இங்கே 'எல்லாவற்றையும்' என்பதை 'மேலே சொல்லப்பட்ட அத்தனை சூழ்நிலைகளிலும்' என்று புரிந்துகொள்ள வேண்டும். மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் மனரம்மியமாக (திருப்தியாக) வாழும்படி கிறிஸ்துவின் சக்தி தன்னை பலப்படுத்தியதாக பவுல் கூறுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் பவுல் உலகப்பிரகாரமான வாழ்க்கை லட்சியங்களைப் பற்றிப் பேசவில்லை. தன் மனதிற்குப் பிடித்ததைச் சாதிப்பதற்காகவோ, இஷ்டப்பட்டதைச் சம்பாதிப்பதற்காகவோ கிறிஸ்துவின் சக்தி தன்னை பலப்படுத்தியது என்று அவர் சொல்லவில்லை. ஊழியத்தின் நிமித்தம் தான் அனுதினமும் சந்திக்கும் துன்பங்களைப் பற்றியே பேசுகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் சிறைச்சாலையில் இருந்தபோது பிலிப்பிய சபை விசுவாசிகளுக்கு இந்த நிருபத்தை எழுதினார். அந்தக் காரியங்களை இந்த நிருபத்தின் ஆரம்பத்திலேயே அவர் குறிப்பிடுகிறார்.

பிலிப்பியர் 1:12-14: "12. சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பரவுவதற்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய விரும்புகிறேன். 13. அரமனை முழுவதிலும் மற்றெல்லா இடங்களிலும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி; 14. சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு, பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்."

ரோம சிறைச்சாலையில் கைதியாக இருந்தபோதுகூட, எல்லாவற்றையும் செய்யும்படி கிறிஸ்துவின் சக்தி தன்னை பலப்படுத்தியதாக பவுல் எழுதுகிறார். தேவனுடைய வல்லமையால் அவர் பெற்றுக்கொண்ட அந்த பலத்தைக் கொண்டு, தன் கட்டுகளையோ, உபத்திரவங்களையோ ஒரு பொருட்டாக எண்ணாமல், அவற்றின் மூலமாக சுவிசேஷம் பரவியதைக் குறித்து அவர் சந்தோஷப்படுகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் ஒருபோதும் தன்னை ஒரு 'வெற்றியாளராக' பார்த்துக்கொண்டதில்லை. தன் தனிப்பட்ட ஆசைகளைத் திருப்திப்படுத்திக்கொள்ளவோ, தன் கனவுகளை நனவாக்கிக்கொள்ளவோ அவர் தவிக்கவில்லை. சுவிசேஷம் (அறிவிப்பதிலும்) பரவுவதிலும், அது மகிமைப்படுவதிலுமே அவருடைய சந்தோஷம் அடங்கியிருந்தது. அதற்காக எப்படிப்பட்ட துன்பத்திற்கும் அவர் எப்போதும் ஆயத்தமாக இருந்தார். சிறையில் கைதியாக இருந்தாலும் சரி, வெளியே சுதந்திரமாக இருந்தாலும் சரி, அவருக்கு ஒரே பணி - அது தேவனுடைய பணி. சுவிசேஷத்தின் நிமித்தம் பாடுகளை அனுபவிக்கும் விஷயத்தில் பவுல் நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார் என்றே சொல்லலாம் (2 கொரிந்தியர் 11:22-33). அந்தப் பாடுகள் அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்படி கிறிஸ்துவின் சக்தி தன்னை பலப்படுத்தியது என்று சொல்லி பவுல் சந்தோஷப்படுகிறார்.

ஆகவே, பிலிப்பியர் 4:13 எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது என்பதை நாம் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஏதாவது பரீட்சை எழுதச் செல்லும்போது, இந்த வசனத்தை ஒரு வாக்குத்தத்தமாகப் பிடித்துக்கொண்டு ஜெபம் செய்வதாலேயே, நீங்கள் நினைத்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள் என்று நினைக்கக்கூடாது. அதேபோல, நீங்கள் ஒருவேளை கபடி போட்டியில் கலந்துகொள்வதானால், இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு கிறிஸ்துவின் வல்லமை உங்களைப் பலப்படுத்தி, உங்களுக்கு வெற்றியைத் தரும் என்று எண்ணக்கூடாது. அத்தகைய வெற்றிகள் எதையும் இந்த வசனம் வாக்குத்தத்தம் செய்யவில்லை. அதற்காக அப்படிப்பட்ட காரியங்களுக்கு ஜெபிப்பது தவறு என்றோ, தேவன் உதவமாட்டார் என்றோ, பலப்படுத்தமாட்டார் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், அத்தகைய காரியங்களுக்கு இந்த குறிப்பிட்ட வேத வசனம் பொருந்தாது என்று மட்டுமே சொல்கிறேன்.

சந்தர்ப்பத்திற்கு ஏற்றார்போல அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம் என்பது வாசகர்களுக்கு இந்நேரம் தெளிவாகியிருக்கும். தன்னை பலப்படுத்தும் கிறிஸ்து தனக்குத் துணையாக இருந்தால், மரணமடையும் அளவுக்குத் துன்பம் ஏற்பட்டாலும், எல்லா பாடுகளையும், நெருக்கடிகளையும் தாங்கிக்கொண்டு நிற்கக்கூடிய வல்லமையும், பலமும் எனக்கு உண்டு என்று பவுல் கூறுகிறார்.

மேலும், கிறிஸ்துவின் நிமித்தமும், சுவிசேஷத்தின் நிமித்தமும் பாடுபடும் விஷயத்தில் பவுல் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார். 'அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்' (2 தீமோத்தேயு 3:12). எனவே துன்பம் வரும்போது கிறிஸ்தவன் ஆச்சரியப்படக்கூடாது. 'கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்' (பிலிப்பியர் 1:21) என்று பவுல் கூறுகிறார்.

தன்னுடைய வாழ்வே கிறிஸ்து தான் என்று பவுல் பறைசாற்றுகிறார். இத்தகைய வாழ்க்கையை வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவனும், வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், துன்பங்களையும், அவமானங்களையும் சந்திப்பான். அவையாவையும் 'பாடுகள்' என்று அழைக்கலாம். அவை அவனது விசுவாசத்தைச் சோதிக்கும். அவை அவனை ஆவிக்குரிய ரீதியில் பலப்படுத்தும், ஸ்திரப்படுத்தும். நாமும் அப்போஸ்தலனாகிய பவுலைப் போல கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடும் ஒவ்வொரு முறையும், பிலிப்பியர் 4:13-ஐப் பற்றிக்கொண்டு, கிறிஸ்துவின் வல்லமையை வாக்குத்தத்தம் செய்யும் இந்த வசனத்தை உயர்த்திப் பிடித்து ஜெபித்து, கிருபையுள்ள தேவன் அருளும் சக்தியினாலும், பலத்தினாலும் நிரப்பப்பட முடியும்.