இரட்சிப்பு கர்த்தருடையது
படிப்புகள்: 27
Print
ஆசிரியர்: C.H. ஸ்பர்ஜன் (1834-1892)
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 2 நிமிடங்கள்

 

பாவத்தில் மரித்திருக்கும் ஒரு பாவி, இரட்சிப்பிற்கான முதல் அடியை தானே எடுத்துவைக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்த்தால், நியாயப்பிரமாணத்தின் கீழ் இரட்சிப்பு என்பது எப்படிக்கூடாத காரியமாய் இருந்ததோ, அப்படியே சுவிசேஷத்தின் கீழும் அது கூடாத காரியமாகிவிடும். ஏனெனில், மனிதனால் எப்படிக் கீழ்ப்படிய இயலாதோ, அப்படியே விசுவாசிக்கவும் இயலாது; கிறிஸ்து இல்லாமல் பரலோகம் செல்ல அவனுக்கு எப்படிச் சக்தியில்லையோ, அப்படியே கிறிஸ்துவிடம் வருவதற்கும் அவனுக்குச் சக்தியில்லை. அந்த வல்லமை ஆவியானவரால் அவனுக்கு அருளப்பட வேண்டும். அவன் பாவத்தில் (ஆவிக்குரிய மரணம்) மரித்துக் கிடக்கிறான்; ஆவியானவரே அவனை உயிர்ப்பிக்க வேண்டும். அவன் அக்கிரமங்களினால் விலங்கிடப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்டிருக்கிறான்; ஆவியானவர் அந்தக் கட்டுகளை அறுக்க வேண்டும், அப்பொழுதுதான் அவன் விடுதலையோடு துள்ளிக்குதிப்பான். தேவனே இறங்கி வந்து இரும்புத் தாழ்ப்பாள்களை அவற்றின் இடங்களிலிருந்து பெயர்த்தெறிய வேண்டும், அதன் பின்னரே அவன் தப்பியோட முடியும். ஆனால், அந்த முதல் செயல் அவனுக்காகச் செய்யப்படாவிட்டால், நியாயப்பிரமாணத்தின் கீழ் அவன் எப்படி அழிந்து போவானோ, நிச்சயமாக சுவிசேஷத்தின் கீழும் அவன் அழிந்து போவான்.

இரட்சிப்பின் விஷயத்தில், தேவன் மனிதனிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறாரோ, அதை அவரே அவனுக்குக் கொடுக்க முன்வராவிட்டால், நான் பிரசங்கம் பண்ணுவதையே நிறுத்திவிடுவேன். நான் ஒரு செய்தியாளன் மட்டுமே, எஜமானுடைய செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்; இந்தச் செய்தி உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், வேதாகமத்தோடு சண்டையிடுங்கள், என்னோடு அல்ல; வேதம் என் பக்கம் இருக்கும் வரை, எனக்கு விரோதமாக உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நான் சவால் விடுகிறேன்.

"இரட்சிப்பு கர்த்தருடையது" (யோனா 2:9). கர்த்தரே அதைச் செயல்படுத்த வேண்டும்; விருப்பமில்லாதவனை விருப்பமுள்ளவனாகவும், பக்தியற்றவனைப் பயபக்தியுள்ளவனாகவும் மாற்றி, கேவலமான கலகக்காரனை இயேசுவின் பாதங்களில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்; இல்லாவிட்டால் இரட்சிப்பு ஒருபோதும் நிறைவேறாது. அந்தக் காரியத்தை மட்டும் செய்யாமல் விட்டுவிடுங்கள், சங்கிலியின் இணைப்பையே துண்டித்தவர்களாவீர்கள்; அதுதான் அந்தச் சங்கிலியின் முழுமைக்கு மிக அவசியமான இணைப்பாகும். தேவனே நற்கிரியையைத் தொடங்குகிறார் என்பதையும், பழைய இறையியலாளர்கள் "முந்துகிற கிருபை" (preventing grace) என்று அழைப்பதையும் அவர் நமக்கு அனுப்புகிறார் என்பதை எடுத்துப்போட்டு விடுங்கள்; இரட்சிப்பு முழுவதையும் பாழாக்கிவிடுவீர்கள்; வளைவின் மையக்கல்லை (key-stone) எடுத்துவிடுவது போலாகும், அது இடிந்து விழுந்துவிடும். அதன்பின் அங்கே எதுவும் மிஞ்சாது!