தொடர்வண்டி தனது பயணத்தை ஆரம்பித்து, இரயில் நிலையத்தை விட்டு மெல்ல நகரத் தொடங்கியது. நான் என் உடைமைகளை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று எனக்கு அருகில் இருந்த பெட்டியில் பெரிய கூச்சலும் சத்தமும் எழுந்தது. அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். இரண்டு பயணிகள் ஒரு இருக்கைக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இருவரும் தாங்கள் முன்பதிவு செய்த பயணச்சீட்டை எடுத்துக் காட்டினர். "இது எனக்கு ஒதுக்கப்பட்ட இடம்" என்று இருவரும் அந்த இடத்திற்காக உரிமை பாராட்டினார்கள். அதற்குக் காரணம், இருவருடைய பயணச்சீட்டிலும் ஒரே இருக்கை எண் குறிப்பிடப்பட்டிருந்ததுதான். அவர்களோடு பயணம் செய்த மற்றவர்களாலும் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை.
கோபமடைந்த ஒருவர், மற்றவருடைய உடைமைகளையெல்லாம் எடுத்து நடைபாதையில் வீசினார். சிலர், "இது இரயில்வே துறையின் தவறு" என்றனர். வேறு சிலரோ, "கணினியில் இத்தகைய தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை" என்றனர். சிறிது நேரத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகர் (TTR) அங்கே வந்தார். அவரும் முதலில் குழப்பமடைந்தாலும், சற்று நேரத்தில் தவறு என்ன என்பதைக் கண்டுகொண்டார். சண்டையிட்ட பயணிகளில் ஒருவர் தவறான இரயிலில் ஏறியிருந்தார். அது யாரென்றால், அந்தச் சண்டையில் மிகவும் ஆக்ரோஷமாக வாதிட்டவரே அந்தப் பெரிய தவறைச் செய்திருந்தார்! பரிசோதகர் தவறைச் சுட்டிக்காட்டியபோது, அவர் முகம் வெட்கத்தால் தலைகுனிந்தது. அடுத்த நிலையத்தில் அவர் இறங்க வேண்டியதாயிற்று. எவ்வளவு பெரிய தவறு! எவ்வளவு அவமானம்! எத்தனை கொடிய விளைவு!
எல்லாத் தொடர்வண்டிகளும் ஒரே ஊருக்குச் செல்வதில்லை; எல்லாப் பெருவழிகளும் ரோம் நகரத்தை இணைப்பதில்லை; எல்லா நதிகளும் ஒரே கடலுக்குள் பாய்வதில்லை. பாற்பார்க்கத் தொடர்வண்டிகள், சாலைகள் மற்றும் நதிகள் எல்லாம் ஒரே மாதிரியாகத் தோன்றலாம். ஆயினும், அவை சென்றடையும் இடங்கள் வெவ்வேறானவை. எனவே, நாம் சரியான வண்டியில், சரியான பாதையில் பயணம் செய்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். இல்லையேல், நமது பயணம் ஆபத்தில் முடிந்துவிடும். முன்பு பார்த்த அந்தப் பயணியைப் போல, நமது வாழ்விலும் அது நஷ்டத்தையும், இழப்பையும், அவமானத்தையும் கொண்டுவந்துவிடும். வெறும் நம்பிக்கை மட்டும் போதாது; அந்த நம்பிக்கை சரியானதா? தவறானதா? என்பதையும் காலதாமதமின்றி உறுதி செய்வது அவசியம்.
வாழ்க்கையும் ஒரு பயணம் தான்.
“பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை.” எமது வாழ்க்கைப் பயணமும் இந்த இரயில் பயணத்திற்கு ஒத்ததாகவே உள்ளது. அப்படியானால் நாம் செல்லும் இலக்கு என்ன என்பதைத் தீர்மானித்து, சந்தேகத்திற்கு இடமின்றிச் சரியான பாதையையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? பரிசுத்த வேதம் இரண்டு வழிகளைக் காட்டுகிறது:
-
இடுக்கமான வாசல் வழி (நித்திய ஜீவபாதை).
-
விசாலமான வாசல் வழி (நித்திய அழிவுப் பாதை).
இந்த இரண்டு பாதைகளும் வெவ்வேறான இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. குறுகிய பாதை கவர்ச்சியின்றி, இடுக்கமும் துன்பமும் நிறைந்ததாக இருப்பினும், அதன் முடிவோ நித்திய மகிழ்ச்சியுள்ள பரலோக வாழ்வாகும். இவ்வழியில் பயணம் செய்வோர் சிலரே! மாறாக, கவர்ச்சியுள்ள விசாலமான பாதையில் பயணிப்போர் பலர். அது பாவமும், சுயநலமும், களியாட்டும், சிற்றின்பமும் நிறைந்த பாதையாக உள்ளது. அதன் முடிவோ நித்திய அழிவு.
நித்திய ஜீவ பாதை எது?
அப்படியானால், ஆசீர்வாதமுள்ள ஜீவ பாதை எது? “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார் (யோவான் 14:6). ஆம், அவரே நித்திய வாழ்வுள்ள தேசத்திற்கு வழியாக உள்ளார். மனிதர்களாகிய நாம் வழிதப்பி, பாவம் செய்து அலைகிறவர்களாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எம்மைத் தேடி வந்த மேய்ப்பராகிய ஆண்டவரின் அங்கலாய்ப்பைக் கேளுங்கள்: “என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள்; அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்” (எரேமியா 50:6).
ஆம்! தவறான வழியில் சென்று கொண்டிருக்கிற நாம், தாமாகவே நல்வழிக்குத் திரும்ப முடியாத நிலையில் இருக்கிறோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்தபடியால், ஜீவனுள்ளோர் தேசமாகிய பரலோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்படியாக, அவரே ஏழை மானிடராக, பாவமின்றிப் பரிசுத்தராகப் பிறந்து, போதனை செய்தார். மனிதகுலத்தின் பாவ நோயை நீக்கிப் பரிசுத்தப்படுத்தும்படியாக, நம் அனைவரின் பாவங்களையும் தாமே ஏற்றுச் சிலுவையில் பலியாகி, மனித இனம் பரலோகம் செல்வதற்குத் தகுதிப்படுத்தினார்.
பரிசுத்த தேவனுடன் சேர முடியாதிருந்த மனிதகுலத்தின் பாவத்தையும் அக்கிரமத்தையும், பாவமறியாத பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து தமது மரணத்தின் மூலமாகப் போக்கி, நம்மைப் பிதாவாகிய தேவனோடு ஒப்புரவாக்கி, பரலோகத்திற்குச் செல்லும் பாதையை ஏற்படுத்தினார். உலகத்திலுள்ள எந்த மனிதனாவது, எந்த இனத்தவனாவது, எந்த மொழி பேசுபவனாவது பரலோகம் செல்வதற்கு இயேசு கிறிஸ்து ஒருவரே வழியாக இருக்கிறார்.
இந்த உலகத்திலே வேறு எந்த மார்க்கமோ, கடவுளோ, அவதாரமோ பரலோகத்திற்கு வழியை அமைக்க முடியாது. சர்வலோகப் பாவங்களுக்காகப் பலியான தெய்வம் இயேசு ஒருவரே!
அன்பானவர்களே! இயேசு உங்கள் பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசித்துப் பின்பற்றுவீர்களானால், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சரியான பாதையைத் தெரிந்துகொள்ளத் தேவன் உதவி செய்வார். நீங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுப் போவதில்லை. அவர் உங்களை நித்திய அக்கினியிலிருந்து பாதுகாத்து மீட்டுக்கொள்வார். நீங்கள் செய்யப்போவது மத மாற்றமல்ல, மனமாற்றமே. இதுவே நம்மைப் படைத்த தேவன் நமக்குத் தரும் மாபெரும் நற்செய்தி.
“அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12). அவரே நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் (1 யோவான் 2:2).
தங்களின் சரியான பயணத்தை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுடன் தொடரத் தேவன் தாமே உதவி செய்வாராக. ஆமென்.