தேவன் தம்முடைய சுவிசேஷத்தின் மூலமாக மனிதர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்க விரும்புகிறார். ஆனால் மனிதனோ அந்த சுவிசேஷத்தின் மீது விசுவாசம் வைப்பதில்லை. ஏனெனில், "நாங்கள் செய்த பெரும் பாவங்கள் இவ்வளவு எளிதில் நீங்கிவிடுமா?" என்ற அவநம்பிக்கையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். பின்வரும் கதை அவர்களுக்குச் சுவிசேஷத்தின் சத்தியத்தைத் தெளிவாக விளக்குகிறது.
ஒர் ஊரில் மாபெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சொந்தமான பல வீடுகளில் ஏராளமான ஏழைகள் வாடகைக்குக் குடியிருந்தனர். பலர் அந்தச் செல்வந்தரின் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய வறுமையின் காரணமாக வீட்டு வாடகையையும், நிலத்தின் குத்தகைத் தொகையையும் சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போனது. சில ஆண்டுகளில் அது பெரும் கடனாக மாறியது. அந்தக் கடனாளிகள் அனைவரும் அந்தச் செல்வந்தருக்குக் கடன் உறுதிமொழிப் பத்திரங்களை எழுதிக் கொடுத்திருந்தனர்.
இதற்கிடையில், அந்தச் செல்வந்தர் இயேசு கிறிஸ்துவைத் தம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தேவனின் அன்பை அவர் ருசித்தபடியால், இயேசுகிறிஸ்து தன்னை நேசிப்பது போலத் தானும் மற்றவர்களை நேசிக்கவும், அவர்களிடம் கருணை காட்டவும் விரும்பினார். உடனே தன்னிடம் கடன்பட்ட அந்த ஏழை விவசாயிகள் அவருக்கு நினைவுக்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு அவர் ஒரு திட்டத்தை வகுத்தார்.
அந்தத் திட்டம் என்னவெனில்: "ஒரு குறிப்பிட்ட நாளில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில், என்னிடம் கடன்பட்டவர்களும், உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டவர்களும், என்னுடைய அலுவலகத்திற்கு நேரில் வந்து, தங்கள் இயலாமையைச் சொல்லி, தங்கள் கடன்களை ரத்து செய்துகொள்ளலாம். அவர்களுடைய கடன் உறுதிமொழிப் பத்திரங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்" என்று அந்தச் செல்வந்தர் அறிவித்தார். இந்த அறிவிப்பு பலகையைத் தன் கையொப்பத்தோடு ஊரின் பல இடங்களிலும் வைத்தார்.
இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட அந்தப் பட்டணத்தார் மத்தியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் இதைக் குறித்த பேச்சாகவே இருந்தது. கடனாளிகள், "இது உண்மையா? உண்மையில் நம்முடைய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? அந்தச் செல்வந்தர் வார்த்தை தவறாதவர்தான். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை எப்படி விட்டுவிடுவார்? இது சாத்தியமா? ஒருவேளை இது வெறும் புரளியாக இருக்குமோ?" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு உண்டானது.
செல்வந்தர் அறிவித்திருந்த அந்த நாளும் வந்தது. சரியாகக் காலை 10:00 மணிக்குச் செல்வந்தரும், அவருடைய கணக்காளரும் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான கடனாளிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. "நாம் இந்த காரியமாக உள்ளே சென்றால் என்ன ஆகுமோ?" என்று சிலர் பயந்தனர். "யாராவது ஒருவர் உள்ளே சென்று கடன் நிவாரணம் பெற்றுக்கொண்டு வந்தால், பிறகு நாமும் போகலாம்" என்று நினைத்தார்கள். அவ்வாறு நினைத்தவர்களில் யாருக்கும் உள்ளே செல்வதற்குத் தைரியம் வரவில்லை. 11:00 மணி ஆகியும் யாரும் உள்ளே சென்று தங்கள் கடனை ரத்து செய்துகொள்ள முன்வரவில்லை.
சிறிது நேரம் கழித்து ஒருவன் தன் அருகில் இருப்பவனைப் பார்த்து, "நீ சென்று உன் கடனைத் தீர்த்துக்கொள்ளக் கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அவன், "என்னுடைய கடன் தொகை சிறியதுதான், பெரிய கடனாளிகள் முதலில் போகட்டும், பிறகு என்னைப் போன்ற சிறிய கடனாளிகள் போகலாம்" என்று அலட்சியத்தோடு பதில் சொன்னான். விலைமதிப்பற்ற நேரம் கடந்து கொண்டிருந்தது, ஆனால் யாரும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
11:45 மணியளவில் ஒரு முதிய தம்பதியினர் சோர்வுடன் அங்கு வந்தனர். அங்கே நின்றவர்களிடம் அந்த முதியவர், "தம்பி! இன்றைக்கு முதலாளி நம்முடைய கடன்களை எல்லாம் ரத்து செய்கிறார் என்று சொன்னது உண்மையா?" என்று கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்களில் ஒருவன், "இதுவரை ஒரு கடனைக்கூட ரத்து செய்யவில்லை" என்றான். மற்றொருவன், "இவையெல்லாம் ஏமாற்று வேலை" என்றான். அதைக் கேட்ட அந்த வயதான தம்பதியினர் மிகுந்த வருத்தமடைந்தனர். அவர்கள் கண்கள் கலங்கின. "இவை அனைத்தும் பொய்தானா? நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்தோம். நாங்கள் இறப்பதற்கு முன், கடனையெல்லாம் தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இப்படி ஆகிவிட்டதே!" என்று சோர்வுடன் அவர்கள் திரும்பிச் செல்லத் தயாரானார்கள்.
இதற்கிடையில், கூட்டத்திலிருந்த ஒருவன், "இதுவரை யாரும் உள்ளே செல்லாததால் அங்கு என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் உள்ளே சென்று பாருங்கள்; உங்கள் கடன் ரத்து செய்யப்படலாம். அப்படி நடந்தால் உடனடியாக வந்து எங்களிடம் சொல்லுங்கள், நாங்களும் உள்ளே செல்வோம்" என்று சொன்னான். அவர்கள் அந்த வார்த்தையை நம்பி, ஒருவித தயக்கத்துடன் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும், "வாருங்கள், உட்காருங்கள்... உங்கள் பெயர் என்ன? உங்கள் ஊர் எது?" என்று செல்வந்தர் அவர்களைக் கனிவுடன் விசாரித்தார். அந்த முதியவர் செல்வந்தரைப் பார்த்து, "ஐயா! எங்கள் கடனை ரத்து செய்வோம் என்று தாங்கள் சொன்னது உண்மையா?" என்று தயக்கத்தோடு கேட்டார். அதற்கு அந்தக் கணக்காளர், "ஐயா உங்களை ஏமாற்றி விடுவோம் என்று நினைக்கிறீர்களா?" என்று பதிலளித்தார்.
அந்த முதியவர் அதுவரை வெளியில் நடந்த நிகழ்வைச் செல்வந்தரிடம் விவரித்தார். அதற்கு அந்தச் செல்வந்தர், "நான் சொன்ன அறிவிப்பை விசுவாசித்து நீங்கள் வந்தபடியால், இன்று முதல் உங்கள் கடன் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதோ, ரத்து செய்யப்பட்ட பத்திரத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுச் செல்லுங்கள்" என்று கூறினார். அந்த வயதான கணவனும் மனைவியும் மகிழ்ச்சியுடன் செல்வந்தருக்கு நன்றி கூறிவிட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டனர்.
ஆனால், அந்தக் கணக்காளர் அவர்களைத் தடுத்து, 12:00 மணி ஆகும் வரை உள்ளேயே காத்திருக்கும்படி சொன்னார். அதற்கு அந்த முதியவர் கணக்காளரைப் பார்த்து, "ஐயா! வெளியே எங்களுடைய வார்த்தைக்காகப் பலர் காத்திருக்கிறார்கள். எங்கள் கடன் ரத்து செய்யப்பட்டதைப் பற்றி அவர்களிடம் போய்ச் சொன்னால், அவர்கள் உள்ளே வரத் தயாராக இருக்கிறார்கள்" என்றார். அதற்கு அந்தச் செல்வந்தர், "நீங்கள் என் வார்த்தையை விசுவாசித்து எனக்கு மதிப்பளித்தீர்கள்; அதுபோல அவர்களும் என் வார்த்தையை மட்டுமே நம்பி வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சொல்லி அவர்களைத் தடுத்து உட்கார வைத்தார்.
நேரம் 12:00 மணியை நெருங்கியது. வெளியில் உள்ளவர்கள் அந்த வயதான தம்பதியினருக்காக ஆவலுடன் காத்திருந்தனர். கூடியிருந்த அனைவரும் ஒருவித படபடப்புடன் சுற்றி முற்றிப் பார்த்தார்களே தவிர, உள்ளே யாரும் செல்ல விரும்பவில்லை. "உள்ளே சென்ற முதியவர்களின் நிலை என்ன ஆனதோ?" என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
சரியாக 12:00 மணியடித்தது. அந்த வயதானவர்கள் வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த உடனே, "என்ன ஆச்சு? முதலாளி சொன்னதைச் சொன்னபடி செய்தாரா?" என்று மக்கள் சூழ்ந்து கேட்டார்கள். அந்த முதியவர் மகிழ்ச்சி பொங்கும் வார்த்தைகளுடன், "அவர் மிகவும் நல்லவர்; அவர் சொன்னபடியே கடனைத் தள்ளுபடி செய்துவிட்டார். இதோ, எங்கள் கடனுக்கான ஆவணத்தைப் பாருங்கள்" என்று அவர்களுக்குக் காட்டினார்.
இதற்கிடையில் செல்வந்தரும் கணக்காளரும் வெளியே வந்தனர். உடனே அங்கிருந்த அனைவரும் அந்தச் செல்வந்தரை நோக்கி, "ஐயா! எங்கள் கடனையும் ரத்து செய்து எங்களையும் காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சினார்கள். அதற்கு அந்தச் செல்வந்தர், "நேரம் கடந்து விட்டது; நீங்கள் வாய்ப்பைத் தவறவிட்டீர்கள். இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். அந்தச் செல்வந்தரின் வார்த்தையை விசுவாசியாதவர்கள் எவ்வளவு பரிதாபமானவர்கள்!
அன்பான வாசகரே! இந்தக் கதையைப் போலவே, மனுக்குலத்தின் பாவக்கடனைத் தீர்ப்பதற்காகத் தேவன் தம்முடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். மனித இனத்தின் பாவத்திற்காகவும், மீறுதலுக்காகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தண்டிக்கப்பட்டார் மற்றும் நொறுக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதின் மூலம் நம்முடைய பாவக்கடனைத் தீர்ப்பேன் என்று தேவன் வாக்களித்துள்ளார்.
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5).
"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்" (ஏசாயா 55:6).
ஆமென்.