அன்பானவர்களே!
இந்த உலகத்தில் சாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்த வேறுபாடும் பார்க்காமல், உலகமெங்கும் மக்கள் ஒருமித்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவது போல் வேறு யாரையும் இந்த உலகம் கொண்டாடுவதில்லை. ஏன் என்று எப்போதாவது நாம் சிந்தித்ததுண்டா? இல்லை என்றால், பரிசுத்த வேதத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் அது புரியும்.
அந்த வானத்தையும், இந்த பூமியையும், அதில் உள்ள எல்லாவற்றையும் படைத்து, மனிதர்களாகிய நம்மையும் இப்படைப்பில் உருவாக்கி ஆளுகை செய்பவர் அவர். எதற்கும் நிகர் இல்லாதவரும், மனிதனுடைய கற்பனைக்கு எட்டாதவரும், காலங்கள் கடந்து நித்தியத்திலும் நிலைத்திருக்கக் கூடியவரும் அவரே. ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் மூல காரணரான அந்த தேவாதி தேவன், இரத்தமும் சதையும் கொண்டு நம்மைப் போன்ற மனிதனாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் பிறக்கக் காரணம் என்ன? என்று பார்த்தால், அது “அன்பு”.
ஆம், மனுக்குலத்தை தேவன் அதிகமாக நேசித்தபடியால்தான், அவர் மனித உருவம் கொண்டு பூமியில் பிறக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால், ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மிகப்பெரிய பிரச்சினை “பாவம்”. இந்தப் பாவம் நம்மைப் படைத்த தேவனை மறக்கச் செய்கிறது. மனிதர்களிடையே சமாதானமின்மை, ஏற்றத்தாழ்வுகள், மனிதர்கள் படைத்தவரை விட்டுப் படைப்பை வழிபடுதல் மற்றும் சுயநல சிந்தனைகள் இறுதியில் நித்திய காலமாக மனித இனத்தை நரகத்தில் தள்ளிவிடுகின்றன. இவைகளே பாவத்தினால் மனித இனம் அனுபவிக்கும் கோரங்கள்.
இந்தப் பாவம் எங்கு துவங்கியது என்று பார்த்தால், ஆதிப் பெற்றோராகிய ஆதாம் – ஏவாள் என்பவர்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், தங்கள் சுய விருப்பத்தின்படி நடந்ததால்தான் இந்தப் பூமிக்கு பாவம் அறிமுகமானது. அன்று தொடங்கி இன்று வரை, பாவம் என்னும் சிறையிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் ஒட்டுமொத்த மனித இனமும் இருக்கிறது. மனிதன் பாவ சுபாவத்தோடு பிறந்து, பாவ சுபாவத்தோடு வாழ்ந்து, பாவ சுபாவத்தோடு மரிக்கும் அவலநிலை ஏற்பட்டது. பாவம் என்பது தலைமுறை தலைமுறையாக மனிதனை ஆண்டுகொண்டது.
நரகம் என்ற துர்ச்செய்தியோடு வாழும் மனித இனம், தன்னால் போக்கிக்கொள்ள முடியாத பாவச் சுமையைச் சுமந்து கொண்டிருந்தது. ஆனால், தேவன் மனித இனத்தை அதிகமாக நேசித்தபடியால், முதல் மனிதன் மூலமாக வந்த பாவத்தைச் சுமப்பதற்கு, தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மனிதனாக இந்த பூமிக்கு அனுப்பினார்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்றால், அவர் பாவமே இல்லாமல் வாழ்ந்து, பாவமே செய்யாமல், பாவத்தை நேசிக்காமல் முழுப் பரிசுத்தராக வாழ்ந்தார். பாவிகளாகிய நமக்காக அவர் சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனிதர்களாகிய நாம் பாவத்தினால் அடைய வேண்டிய நரகத் தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் பலியானார். பாவம் என்ற துர்ச்செய்தியைச் சுமந்திருக்கும் மனித இனத்திற்கு உண்மையாகவே இது நற்செய்திதான். நம்மை நேசித்த தேவன், நாமிருக்கும் பாவச் சிறையிலிருந்து நம்மை விடுவிக்க மாபெரும் தியாகத்தைச் செய்தார்.
இதை வாசிக்கும்/கேட்கும் நீங்கள், இந்த மாபெரும் உண்மையை இவ்விதமாக இதுவரை கேள்விப்படவில்லை என்றால், ஒரு உண்மையைத்த் தெரிந்து கொள்ளுங்கள்: உங்களுடைய இயலாமையை அறிந்த இயேசு கிறிஸ்து உங்களையும் நேசிக்கிறார்; அவர் உங்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க விரும்புகிறார்.
நாம் பாவிகளாய் இருக்கையில், நமக்காக வந்த இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தினால் நம்முடைய பாவ மன்னிப்பு உறுதியானது என்பதை முழு மனதோடு விசுவாசித்தால், முடிவில்லாத பாவ மன்னிப்பும், மரணத்திற்குப் பிறகு நித்திய வாழ்வும் உங்களுக்குச் சொந்தமாகும். இதற்காகவே தேவாதி தேவன் மனிதர்கள் வாழும் இந்த பூமியில் பிறந்தார். "இயேசுகிறிஸ்து பிறந்தார்" என்று கொண்டாடும் நாம், அவருடைய பிறப்பின் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். வெறும் கொண்டாட்டம் மட்டும் நமக்கு நன்மை தராது. கிறிஸ்து பிறந்தார் என்ற செய்தி, தேவன் நம்மீது வைத்த அன்பைக் காட்டுகிறது. இதுவே மெய்யான கிறிஸ்துமஸ்.
அன்பானவர்களே!
காலங்கள் கடந்து செல்கின்றன; இனியும் தாமதம் வேண்டாம். இதைக் கேட்கும் நீங்கள், தேவனுடைய மாபெரும் பரிசாகிய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள, "இயேசு கிறிஸ்துவின் சிலுவை பலி எனக்காகவே" என்பதை விசுவாசியுங்கள்.
-
"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." (அப்போஸ்தலர் 4:12)
-
"நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்." (1 யோவான் 2:2)
-
"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9)
-
“இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” (2 கொரிந்தியர் 6:2)
-
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்." (அப்போஸ்தலர் 16:31)
-
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." (ஏசாயா 53:5)
-
"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." (ஏசாயா 55:6)
தேவனுடைய சமாதானம் நம் அனைவருடனும் இருப்பதாக. ஆமென்.