அன்பின் பாதையா? அன்பற்ற அதிகார பாதையா?
படிப்புகள்: 334
Print
ஆசிரியர்: A. அருள்நேசன்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

பிள்ளைகள் வளர்ப்பில் கையாள வேண்டியது எது?

வேதம் காண்பிக்கும் அன்பின் வழியா? அல்லது உலகம் காண்பிக்கும் அதிகார வழியா?

இது என்னுடைய சிந்தனையில் உருவான ஒரு கற்பனைக் கதை. ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு, சிறு வயதிலேயே நம்பிக்கையற்ற இருண்ட சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனது தாய் கூலி வேலை செய்து அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார்கள். காலப்போக்கில் அந்தச் சிறுவனுக்கு ஓட்டப்பந்தயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. வேகமாக ஓடினால் பல சாதனைகளைப் படைத்து வாழ்க்கையில் உயரலாம் என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்தது.

பள்ளியில் அவனுக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர் மிகவும் கண்டிப்பானவர். அச்சிறுவனைச் சிறிதும் மதிக்காதவர். பயிற்சியின் போதெல்லாம் மற்றவர்கள் முன்பாக அவனை ஏளனம் செய்து அவமானப்படுத்துவார். "ஓடுவதற்கு ஒரு நல்ல காலணி (Shoe) கூட உன்னிடம் இல்லை, உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?" என்று வருடக்கணக்காக அவனது மனதை நோகடித்தார். இருப்பினும், வாழ்க்கையில் முன்னேற அவனுக்குத் தெரிந்த ஒரே வழி ஓடுவது மட்டுமே. அவன் தினமும் பல மைல்கள் ஓடுவான். அவன் ஓடும் சாலையோரத்தில் ஒரு வயதான ஏழைப் பாட்டி அமர்ந்திருப்பார். அவர் தினமும் அந்தச் சிறுவனுக்கு அன்போடு குடிக்கத் தண்ணீரும், காலையில் உணவும் கொடுத்து வருவார்.

வருடங்கள் உருண்டோடின. அந்தச் சிறுவன் தான் எதிர்பார்த்திருந்த மாபெரும் வெற்றியைப் பெற்றான். அவனது ஓட்டத்தைக் கண்டு பலரும் வியந்தார்கள். ஒரு பெரிய நிறுவனம் அவனுக்கு 'ஸ்பான்சர்' (Sponsorship) செய்ய முன்வந்தது. குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்குச் சென்றான். ஒருநாள் செய்தி ஊடகங்கள் அவனைப் பேட்டி காண வந்தன. அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், அந்தச் சாலையோரப் பாட்டியைத் தனக்கு அருகில் அமர வைத்தான். உண்மையில் அந்தப் பாட்டி அவனுக்குப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை; கொஞ்சம் உணவும் தண்ணீரும் கொடுத்ததைத் தவிர. ஆனால், அது அன்போடு கொடுக்கப்பட்டது.

அப்போது ஒரு பிரபல நிருபர், "ஏன் உங்கள் வெற்றிக்குக் காரணமான பயிற்சியாளரை இங்கே அழைக்கவில்லை?" என்று கேட்டார். அதற்கு அவன், விலையுயர்ந்த தனது ஓட்டப்பந்தய காலணியை (Shoe) மேஜையில் எடுத்து வைத்து, "என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திய அந்தப் பயிற்சியாளரை விட, உயிரற்ற இந்த காலணிதான் எனக்கு அதிகம் உதவியது," என்று கூறினான். அவனது பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ஆம், அன்பற்ற அதிகாரமும் ஆளுகையும் ஒருபோதும் மதிப்பைப்பெறாது; மாறாக வெறுப்பை மட்டுமே சம்பாதிக்கும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். "அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருப்பார்" (ஏசாயா 42:3) என்று வேதம் கூறுகிறது. இதன் பொருள், பெலவீனமான, கைவிடப்பட்ட, அழிந்து போகும் நிலையில் இருப்பவர்களை அவர் அழித்துவிடாமல், அவர்களுக்கு இரக்கத்துடனும் கிருபையுடனும் உதவி செய்வார் என்பதாகும். அவரைக் குறித்துச் சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனம், அவர் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அப்படியே நிறைவேறியது. எந்தவொரு ஏழை மனிதனிடமும் அவர் கடினமாக நடந்துகொண்டதாக நாம் பார்க்க முடியாது. உதாரணமாக, பேதுரு மறுதலித்த போதும் அவரிடம் ஆண்டவர் காட்டிய அணுகுமுறை நம்மை வியக்க வைக்கிறது. பிள்ளை வளர்ப்பிலும் நாம் இந்த அணுகுமுறையையே கையாள வேண்டும்.

முதலில் நம்முடைய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்:

நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், இயந்திரத்தனமான ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் தேவன் உலகத்தை ஆளுகிறார் என்ற உணர்வே இல்லாமல் நடந்துகொள்கிறோம். நம் வாயின் வார்த்தைகள் அதை வெளிப்படுத்திவிடுகின்றன. "பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், பேரும் புகழும் பெற வேண்டும்" என்ற எண்ணமே நம்மில் மேலோங்கி இருக்கிறது. இந்த நோக்கத்திற்காக, தேவன் நமக்கு ஈவாகக் கொடுத்திருக்கும் குழந்தைகளை நியாயமற்ற முறையில் அழுத்தம் கொடுக்கிறோம்.

இன்றைய சமுதாயத்தில் குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது. தங்கள் நியாயத்தை யாரிடமும் முறையிட முடியாத சூழலில் அவர்கள் உள்ளனர். பெற்றோராகிய நாம் என்ன செய்தாலும் அதைச் சகித்துக்கொள்கிறார்கள். நாமும் கேள்வி கேட்பாரற்று, நம்முடைய அதிகாரத்தை அவர்களின் திறமைக்கும் மீறிச் செயல்படுத்த முயற்சிக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகம் இப்படித்தான் இருக்கிறது; நீங்களும் நானும் இத்தகைய சமுதாயத்தில்தான் வாழ்கிறோம். குறை அடுத்தவரிடம் இல்லை, நம்மிடமே உள்ளது. முதலில் இத்தவறை நாம் ஒப்புக்கொண்டால் மட்டுமே, அதைச் சரிசெய்வதற்கான வழியைக் கண்டறிய முடியும்.

உலகம் காண்பிக்கும் 'அன்பற்ற அதிகார வழிமுறை' பிள்ளைகளின் வாழ்க்கையில் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயத்தை ஏற்படுத்தும். அது நிலையான, எக்காலத்திற்கும் ஏற்ற சிறந்த மனிதர்களை உருவாக்காது. உங்கள் மீதுள்ள பயம் நீங்கும்போது, உங்கள் அதிகாரத்திற்கு மதிப்பு இருக்காது. பிள்ளைகள் தண்டனைக்குப் பயந்து மட்டுமே கீழ்ப்படிவார்கள்; பெற்றோர் இல்லாத இடத்தில் தவறுகளைச் செய்யத் தயங்கமாட்டார்கள். அதிகாரம் மட்டுமே இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கும்.

ஆனால், வேதம் காண்பிக்கும் 'அன்பின் பாதை' சிறந்த, தேவ பயமுள்ள பிள்ளைகளை உருவாக்கும். அவர்கள் பெற்றோருக்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் உதவக்கூடிய நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். அன்பின் வழி பிள்ளைகளின் இதயத்தைத் தொடுகிறது. அவர்கள் தண்டனைக்குப் பயந்து அல்ல, "நாம் செய்யும் தவறு நம்மை நேசிப்பவர்களைக் காயப்படுத்தும்" என்று உணர்ந்து திருந்துவார்கள். வேதம் "பிரம்பை" கையாளச் சொன்னாலும், அது பிள்ளையைத் திருத்துவதற்கே தவிர, நம் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள அல்ல. "பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்" என்றும் வேதம் போதிக்கிறது. அன்பின் பாதை என்பது பிள்ளைகள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பதோ, தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதோ அல்ல. உண்மையான அன்பு என்பது, "பிள்ளைகளின் ஆத்மீக நலனுக்காக, திருத்தும் நோக்கத்துடன் கூடிய கண்டிப்பு கலந்த அன்பைச் செலுத்துவதாகும்".

ஒரு கிறிஸ்தவனாக நான் எப்படி இந்தச் சரியான அன்பை வெளிப்படுத்துவது?

  1. முன்மாதிரியான வாழ்க்கை: பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கு முன்பாக, வாழ்ந்து காட்டுங்கள். பிள்ளை வளர்ப்பின் மையக்கரு இதில்தான் உள்ளது. பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளை அல்ல, உங்கள் வாழ்க்கையையே உற்று நோக்குகிறார்கள். நீங்கள் மறைவான இடங்களில் எப்படி வாழ்கிறீர்களோ, அப்படியே உங்கள் பிள்ளைகளும் வாழ்வார்கள். நீங்கள் எந்த நோக்கத்திற்காக வாழ்கிறீர்களோ, அதன் பிரதிபலிப்பை உங்கள் பிள்ளைகளிடம் காணலாம். நீங்கள் சபை ஐக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தால், சொல்லாமலே அவர்களும் அதில் ஆர்வமாவார்கள். நீங்கள் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டு, உலகப்பிரியராயும் சிற்றின்பப்பிரியராயும் வாழ்ந்தால், பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள். எனவே, பிள்ளைகளை வேத வாசிப்பிற்கும் ஜெபத்திற்கும் வற்புறுத்துவதற்கு முன், நீங்கள் அவற்றைச் செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  2. விசுவாசிகளாக நடத்துங்கள்: தேவனுடைய இறைையாண்மையுள்ள பராமரிப்பில், நமக்குக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் விசுவாசத்தைக் கண்டுகொள்ளும்படி எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் பிள்ளைகளை ஒரு 'சக விசுவாசியைப்' போல நடத்துங்கள். அப்படிச் செய்யும்போது நாம் அவர்களை மதிக்க ஆரம்பிக்கிறோம்; அவர்களும் நம்மை மதிக்கிறார்கள். இந்தக் கபடற்ற உறவு நித்தியத்திற்கும் நிலைக்கும்.

  3. சபை ஐக்கியம்: திருச்சபை ஆராதனைக்கும், வேத பாட வகுப்புகளுக்கும், ஜெபக் கூட்டங்களுக்கும் தவறாமல் அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைகள் தேவனைப் பிரியப்படுத்தக் கற்றுக்கொள்ளும்போது, அவர்களின் வாழ்க்கையில் தேவனுடைய உறுதியான பாதுகாப்பு இருக்கும். இந்தப் பாதுகாப்பு உலகத்தில் வேறெங்கும் கிடைக்காது.

  4. ஊழியத்தில் ஈடுபடுத்துதல்: சபையைச் சுத்தம் செய்வதாகவோ, கூட்டுவதாகவோ அல்லது பாடல் புத்தகங்களை எடுத்து வைப்பதாகவோ இருக்கலாம்; இப்படிச் சிறுவயது முதலே சபைப் பணிகளைச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

  5. ஆவியானவரின் துணை: இம்முயற்சிகளைச் செய்யும்போது பிள்ளைகள் நமக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். மனிதனின் பாவ சுபாவத்தினால், பிள்ளைகள் நன்மைக்கு ஒத்துழைக்கத் தயங்குவார்கள். எனவே, நமக்குத் தேற்றரவாளராகிய பரிசுத்த ஆவியானவரின் உதவியும் கிருபையும் அவசியம். பொறுமை, விடாமுயற்சி மற்றும் மன்னிக்கும் குணத்தை நாம் அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிள்ளை வளர்ப்பில் நாம் விழிப்புடன் ஈடுபடும்போது, நாமே அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம். தேவன் நம்மை அநேக காரியங்களில் திருத்துவதற்கும், நமக்கு பொறுமையைக் கற்றுக்கொடுப்பதற்கும், நாம் குடும்பமாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கும் இது வழிவகுக்கிறது.

முடிவாக, நீங்கள் எந்தக் காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான இரட்சிப்பைக் குறித்து ஒருநாளும் கவனமற்று இருந்துவிடாதீர்கள். பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவன் கொடுத்த உன்னதக் கடமையாகும். ஒருநாளும் அன்பில்லாத ஆதிக்கத்தை, உங்கள் சுய விருப்பத்தைப் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். இன்றே உங்கள் பிள்ளைகளிடம், "இத்தனை நாள் நான் இப்படி நடந்துகொள்ளாததற்காக என்னை மன்னித்துவிடு" என்று கேட்பதே மாற்றத்திற்கான ஆரம்பம். இது குடும்பத்தில் சமாதானத்தையும், சரியான பாதையில் செல்வதற்கான வழியையும் திறக்கும். விசுவாசத்தோடு முயற்சி செய்யுங்கள். இந்தக் காரியங்களில் தேவனே நமக்குச் சரியான ஞானத்தைத் தருவாராக. ஆமென்.