உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதீர்கள்
படிப்புகள்: 313
Print
ஆசிரியர்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 5 நிமிடங்கள்

 

"பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக." – எபேசியர் 6:4

இது ஒரு கற்பனைக் கதை. ஒரு நாள் கிறிஸ்தவத் தகப்பன் ஒருவர் தன் பிள்ளையைக் கோபத்துடன் கடிந்துகொண்டார். தகப்பன் தன்னை அடித்துவிடுாரோ என்ற பயத்தில் அந்தப் பிள்ளை வீட்டை விட்டு வெகு வேகமாக ஓடியது. அப்படி ஓடும்போது, எதிரில் வந்த வாகனத்தைக் கவனிக்காததால், அந்தப் பிள்ளை வாகனத்தில் அடிபட்டு இறந்துபோனது. இது எவ்வளவு துக்ககரமான சம்பவம் என்று சற்று நிதானித்துப் பாருங்கள். அந்தத் தகப்பனின் சாதாரண கோபம் ஒரு சிறு குழந்தையின் உயிரைப் பறித்துவிட்டது.

நம்முடைய சமுதாயத்தில் கோபம் என்பது எளிதில் வெளிப்படுத்தக்கூடிய உணர்ச்சிகளில் ஒன்று. பாரபட்சமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை யாவரிடமும் இது எளிதாக வெளிப்படுகிறது. ஆனால், வேதாகமம் கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டிய உணர்ச்சி என்று போதிக்கிறது. அதேவேளையில், நியாயமான மற்றும் சரியான கோபத்தை வேதம் அங்கீகரிக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேத வசனம், குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. தேவனுடைய வார்த்தையானது பிள்ளை வளர்ப்பில் தகப்பனை முதன்மைப்படுத்துகிறது. பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், சரியான பயிற்சியில் வளர்க்க வேண்டியது ஒரு தகப்பனுடைய கடமை என்று நீதிமொழிகளும் நமக்கு எச்சரிக்கிறது.

முதலாவதாக, பிள்ளைகளைக் கோபப்படுத்துவது எது?

“பிதாக்களே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்” என்று வேதம் வெளிப்படையாக அறிவுறுத்துகிறது. பிள்ளை வளர்ப்பின் அடிப்படை அம்சம் யாதெனில், பிள்ளைகள் தங்கள் தகப்பனின் வார்த்தைகளாலும் செய்கைகளாலும் விரக்தியோ, வெறுப்போ அல்லது கோபமோ அடையாத ஒரு சுமூகமான சூழலை உருவாக்குவதே ஆகும். நாம் பிள்ளைகளுக்கு முன்பாகத் தவறைச் செய்துவிட்டு, அவர்கள் அதைச் செய்யக்கூடாது என்று சொல்வது முரணானது. உதாரணமாக, நாம் அலைபேசியில் (Mobile Phone) மூழ்கி நேரத்தை வீணடித்துவிட்டு, பிள்ளைகள் அவ்வாறு செய்யும்போது அவர்களைக் கண்டிப்பதோ அல்லது அடிப்பதோ ஞானமற்ற செயல்.

அதேபோன்று, குழந்தைகளை அந்நியப்படுத்தும் மற்றும் மனக்காயப்படுத்தும் வார்த்தைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நமது வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளைக் குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் ஏற்ற ஒரு நேர்மறையான உறவை வளர்ப்பதற்கு, இந்த மென்மையான மற்றும் கரிசனையான அணுகுமுறை மிக முக்கியமானது. நாம் பாவ சுபாவம் உள்ளவர்களாய் இருப்பதால் இது கடினமான பணியாகத் தோன்றலாம். ஆனால், அதிகப் பிரயாசத்தோடு செய்யும் வேலையே மிகுந்த மதிப்புமிக்கது. "இனி என் பிள்ளைகளை கோபப்படுத்தும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டேன்" என்று இன்றே உறுதி கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக.

இரண்டாவது மிக முக்கியமானது: “உங்கள் பிள்ளைகளைக் கர்த்தருடைய பயிற்சியிலும் போதனையிலும் வளர்ப்பது”

சில போதகர்கள் எப்பொழுதும் தங்கள் பிள்ளைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அவர்களைத் தாங்கள் எவ்வளவு ஒழுக்கமாக வளர்த்தோம் என்பதைப் பற்றி அடிக்கடி கூறுவார்கள். அவர்கள் இன்று பல லட்சங்களில் சம்பாதிக்கலாம்; ஆனால், கிறிஸ்துவுக்கு அடுத்த ஆவிக்குரிய காரியங்களில் அவர்களின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இருப்பதில்லை. வேதம் இதைத் தவறு என்கிறது. உங்கள் பிள்ளைகளைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகப் பேசுவதை தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்.

தேவனுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பு நாளில் நிற்கும்போது, நம்முடைய பிள்ளைகள் நம்மைக் குறித்து என்ன சொல்வார்கள் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். அந்த வேளையில் நாம் வெட்கப்படாமல் நம்முடைய பிள்ளைகளின் முகத்தைப் பார்க்க முடியுமா? நாம் இரட்சிப்பை எப்படிக் கருதுகிறோமோ, அப்படித்தான் நம் பிள்ளைகளும் கருதுவார்கள். பியூரிட்டன் எழுத்தாளர் தாமஸ் வாட்சன் தன்னுடைய 'மனந்திரும்புதல்' புத்தகத்தில் இவ்விதமாகச் சொல்கிறார்: “வெளிப்படையான பாவங்களைச் செய்த குற்றவாளிகளான உங்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியாது. உன்னுடைய கெட்ட முன்மாதிரி மட்டும் இருந்திருக்காவிடில், தாங்கள் நரகத்திற்கு வந்திருக்க மாட்டார்கள் எனக் கதறும் அநேகர் இப்போது நரகத்தில் இருக்கலாம்.” நம்முடைய அனுதினப் பாவங்கள் நம்முடைய பிள்ளைகளால் பார்க்கக்கூடிய விதத்தில் இருக்கின்றன. உங்கள் பிள்ளைகளின் ஆத்துமாவுக்கு நீங்களே எதிரியாக இருந்துவிடாதீர்கள்.

'பயிற்றுவித்தல்' என்பது, அந்தப் பயிற்சியின் முடிவில் பிள்ளைகளுடைய நடத்தையும் பழக்கவழக்கங்களும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். இந்தப் பயிற்சியை நாம் தொடர்ச்சியாக விடாமுயற்சியோடும் ஜெபத்தோடும் செய்ய வேண்டும். இது காலப்போக்கில் அவர்களிடத்தில் நல்ஒழுக்கத்தையும் தேவபக்தியையும் உருவாக்கும்.

உலகப்பிரகாரமான அறிவைப் பெற்றுக்கொள்ளப் பள்ளிகளும், அநேக வசதிகளும் இன்று உலகத்தில் பெருகியுள்ளன. ஆனால், வேத அறிவை அறிந்துகொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் ஒரு சில வழிமுறைகளே உள்ளன. வேத சரித்திரம், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, சிறுவர்களுக்கான வேத உபதேசம், வினா விடை போதனைகள் (Catechism) போன்றவற்றை நீங்கள் சிறுகச் சிறுக உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழகத்தில் இன்று வேதபூர்வமான சத்தியத்தைப் போதிக்கக்கூடிய திருச்சபைகள் மிகவும் குறைவு. உங்களைத் தொடர்ந்து வேத அறிவில் வழிநடத்தக்கூடிய திருச்சபையை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது. உங்களைப் பரிசுத்தத்தின் பாதையில் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வளர்க்கக்கூடிய சபையைக் கண்டடையுங்கள். நீங்கள் வேதத்திற்கு அருகில் வளரும்போது மட்டுமே, உங்கள் பிள்ளைகளையும் வேதத்திற்கு அருகில் வளர்க்க முற்படுவீர்கள்.

திருச்சபையில் அரசியல், விசுவாசிகள் மத்தியில் பாரபட்சம், 'நீயா நானா' என்ற போட்டி மனப்பான்மை மற்றும் சுவிசேஷ வாஞ்சை இல்லாத இடத்தில் நீங்கள் இருந்தால், இன்றே அப்படிப்பட்ட திருச்சபையை விட்டு வெளியேறுங்கள். அது உங்கள் உறவினர்கள் நடத்தும் சபையாக இருந்தாலும் பரவாயில்லை; இந்த விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். ஏனெனில், இது உங்கள் ஆத்துமா சம்பந்தப்பட்ட விஷயம். புற்றுநோயைக் குணப்படுத்த வேண்டிய அவசரத்தில் இருப்பது போல, நாம் ஒரு ஆவிக்குரிய அவசரத்தில் இருக்கிறோம். பாவமானது நம்மையும் நமது பிள்ளைகளையும் விழுங்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

பிள்ளைகளைக் கர்த்தருடைய பயிற்சியிலும் போதனையிலும் வளர்ப்பதற்கான சில ஆலோசனைகள்:

முதலில் நீங்கள் குடும்பமாகத் திருச்சபை வாழ்க்கைக்கு உங்களை அர்ப்பணியுங்கள். உயிரே போனாலும் சபை கூடுதல் மற்றும் ஐக்கியத்தைத் தவிர்க்கக் கூடாது என்பதை வார்த்தையிலும் வாழ்க்கையிலும் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வேலைகளையும், படிப்புகளையும் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்.

முடிவுரை

ஒருவேளை பிள்ளைகளுடைய ஆத்துமா கெட்டுப்போனால், அதற்குக் காரணம் நாம்தான். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்துச் சொன்னது போல, “நீயே அந்த மனுஷன்.” இவையெல்லாம் நமக்குக் குழந்தைகளைக் கொடுத்த தேவனுக்கு, நாம் கொடுக்க வேண்டிய கனத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட விளைவுகளே. உங்கள் பிள்ளைகளின் ஆத்துமா விலையேறப்பெற்றது. நியாயத்தீர்ப்பின் நாளில் நீங்கள் ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டும். கெட்ட காரியங்களுக்கு நீங்கள் பொறுப்பாளியாக இருக்கிறீர்கள்.

பாவ மனிதர்களாகிய நம்மால் இந்தக் காரியங்களைச் செய்வதற்குரிய பெலமோ, ஞானமோ இல்லை. அநேக நேரங்களில் தவறான முன்மாதிரிகளையே பிள்ளைகளுக்குக் காண்பிக்கிறோம். சிந்தித்துப்பார்த்து மனந்திரும்புங்கள். ஜெபத்தில் கர்த்தரிடம் உதவியைக் கேளுங்கள். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக்கோபு 1:5). ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பெரிய தவறு நடந்திருந்தால், தயவுசெய்து தேவனிடம் வாருங்கள். எப்பேர்ப்பட்ட பிரச்சினையையும் அவரால் சரிசெய்ய முடியும். அவரால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்பதை மறவாதிருங்கள். கிருபை நிறைந்த தேவன் இந்தக் காரியத்தில் உங்களுக்குக் கிருபை செய்வாராக. ஆமென்.