கறையற்ற தனித்துவம் வாய்ந்த வேதாகமம்
படிப்புகள்: 10
Print
ஆசிரியர்: G. பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 18 நிமிடங்கள்

இந்தக் கட்டுரையில், ஸ்டீபன் நாப் எழுதிய 'கிறிஸ்தவமும் வேதத்தில் உள்ள அதன் தாக்கமும்' (Christianity and the Vedic Influence) என்கிற புத்தகத்தில் வரும் சில கருத்துக்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். தொடர்ந்து வாசிக்க...

ஸ்டீபன் நாப் அவர்கள் எழுதிய கிறிஸ்தவமும் அதில் உள்ள வேதகால தாக்கங்களும் என்ற புத்தகத்திற்கான மறுப்புரை

 

பாகம் 1

தவறான விளக்கங்கள் மற்றும் ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட உண்மைகளைத் திரித்துக்கூறும் கருத்துக்களின் அடிப்படையில் வாதம் செய்வது அறிவுசார்ந்த மனிதர்களுக்கு அழகல்ல. ஆனால், நாம் வாழும் இக்காலத்தில், போதிய தெளிவற்றவர்கள்கூட தங்களுடைய குழப்பமான சிந்தனைகளை ஆவிக்குரிய இலக்கியங்களில் எடுத்துரைக்கும் திறமை படைத்தவர்களாகத் தங்களை எண்ணிக்கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குச் சிறந்த வாதத்திறமை இருந்தால் மட்டுமே போதுமானது என்று கருதுகின்றனர். உலகத்தில் தனக்கு இருக்கும் நம்பிக்கைகளைப் பிரகடனம் செய்யும் பேச்சாளர்களாக அவர்கள் மாறிவிடுவதை நாம் காண்கிறோம். அவர்கள் வெளியிடும் கருத்துக்கள் எந்த அளவிற்குப் பொது அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், அதைக் குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை.

அவ்வாறாக, சமீப காலங்களில் இந்து மதத்திற்கு மாறி, அதன் பிரசாரகராகத் தன் கருத்துக்களை முன்வைப்பவர்தான் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் நாப் (Stephen Knapp) என்பவர். அவர் கிறிஸ்தவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலும், இந்து மதத்தில் ஒன்றுக்கொன்று முரணாக உள்ள இறையியல் அம்சங்களை நிதானிக்காமலும் இருக்கிறார். அப்படியிருந்தும், இவ்விரு மார்க்கங்களைக் குறித்தும் தவறான கருத்துக்களைப் பரப்பும் அவர், சில புனைவுகளின் வழியாகத் தான் மறுதலித்த கிறிஸ்தவ மார்க்கத்திற்குச் சிறுமை உண்டாக்கும் வகையில் முயற்சிக்கிறார்.

எனவே, அவருடைய அவதூறான வாதங்களுக்கு மறுப்புத் தெரிவிப்பதும், சுவிசேஷத்தின் தனித்துவமான பாதையை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது. அதன் வழியாகக் கிறிஸ்தவத்தைக் குறித்துப் பரப்பப்பட்டு வரும் தவறான அபிப்பிராயங்களை நாம் களைந்து, தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதும், சத்தியத்திற்காகவும் சபையின் நலனுக்காகவும் இவைகளைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

இதுவரை இதற்கு மறுப்பு எழுதப்படாததால், அவருடைய வார்த்தைகள் எந்த வகையிலும் கிறிஸ்தவர்களால் மறுக்க முடியாதவை என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது. அவருடைய வாதத்திறமையினாலும், புத்திக்கூர்மையான அறிவுத்திறமையினாலும்தான் இப்படிப்பட்ட அமைதி நிலவுகிறது என்று அவர் கற்பனை செய்யக்கூடாது. மாறாக, கிறிஸ்தவர்கள் அவ்வாதங்களைத் தவிர்த்து, அதன் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, அந்த மௌனத்தை நாம் கலைக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்வதுடன், அவருடைய மதியீனத்தை அடக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இல்லையெனில், மற்றவர்களும் இவ்வாதங்களால் வஞ்சிக்கப்படவும், அநேகர் இதனால் நரகத்தின் புத்திரராக மாறவும்கூடிய அபாயம் உள்ளது.

இந்தக் கட்டுரையில், ஸ்டீபன் நாப் எழுதிய 'கிறிஸ்தவமும் வேதத்தில் உள்ள அதன் தாக்கமும்' (Christianity and the Vedic Influence) என்கிற புத்தகத்தில் வரும் சில கருத்துக்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். நாப் அவர்கள், கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் உள்ள பல ஒப்புமைகளை எடுத்துக்கொண்டு வந்து, கிறிஸ்தவத்திற்கு முந்தியது இந்து மதம் என்கிற யூகத்தின் வழியாக, இந்து மத நம்பிக்கையின் தாக்கத்தினால் உருவானதுதான் கிறிஸ்தவம் என்று நிறுவ முயலுகிறார். வேதாகமத்தில் உள்ள அனைத்துமே இந்து வேத இலக்கியங்களின் மறு உருவாக்கமே என்றும், பெயர்கள் மட்டுமே மாறியிருக்கின்றன என்றும், மற்றபடி அனைத்தும் இந்து வேதங்களின் ஆதாரங்களில் இருந்து திருடப்பட்ட கருத்துக்களே வேதாகமம் என்றும் அவர் ஒரு முடிவுக்கு வருகிறார்.

ஆகவே, இந்தக் கட்டுரையில் அவருடைய அடிப்படை வாதத்தை மறுக்கும் ஆதாரங்களைத் தருவதால், அவர் உருவாக்கியுள்ள இக்கோட்பாடு அஸ்திபாரத்திலிருந்தே தகர்ந்துபோய்விடும். வேதாகமமும் இந்து வேத எழுத்துக்களும் அவர் சொல்வது போல ஒரே காரியத்தைப் பேசவில்லை என்பதை நாம் நிரூபிப்போம். அதன் மூலம் 'இந்து வேதங்களின் தாக்கம்' என்கிற கேள்வியே எழாமற்போய்விடும்.

கிறிஸ்தவத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒப்புமைகளைக் குறித்து நாம் சிந்திக்கும்போது, ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஆரம்பக் கல்வி பயின்று வந்த ஏழைப் பிராமணச் சிறுவன் ஒருவன், கன்றுக்குட்டி ஒன்றைச் சந்தையில் விற்கும்படி தன் தோளில் சுமந்துகொண்டு சென்றான். அவன் நடந்து செல்லும் வழியில் நான்கு திருடர்கள், "இன்று நமக்கு ஒரு வேட்டை சிக்கிவிட்டது" என்று தங்களுக்குள்ளே உற்சாகமடைந்தனர். அந்தச் சிறுவனிடம் வலுக்கட்டாயமாக அந்தக் கன்றைப் பறித்துச் செல்வதைவிட, அவனிடம் பேசியே அதை எவ்வாறு அபகரிப்பது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்களின் திட்டப்படி, அந்தப் பிராமணச் சிறுவன் தோளில் சுமந்து செல்வது கன்றுக்குட்டியை அல்ல, ஒரு நாய்க்குட்டியைத்தான் என்று அவனை நம்ப வைக்க வேண்டும் என்றும், அதன் விளைவாக அவன் தன் தோளில் இருப்பதை இறக்கி வைத்துவிட்டு, கன்றுக்குட்டியைத் தேடிச் செல்லச் செய்ய வேண்டும் என்றும் திட்டமிட்டனர்.

அவர்கள் ஒருவருக்கொருவர் சற்றுத் தொலைவில் நின்று கொண்டனர். ஒவ்வொரு திருடனும், "நீ சுமப்பது கன்றுக்குட்டி அல்ல, நாய்க்குட்டிதான்" என்று அவனை நம்ப வைக்க முயன்றனர். அவன் முதல் இரண்டு திருடர்களையும் கடந்து வந்துவிட்டான். ஆனால் மூன்றாவது திருடனிடம் வந்தபோது, இவன் அவனுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தான். தன் தோளில் இருந்த கன்றை இறக்கிவைத்து, அதைக் காண்பித்து, “இதைப் பாருங்கள். அதற்கு நான்கு கால்களும், ஒரு வாலும் இருக்கிறதே” என்றான். அதற்குத் திருடன், “நாய்க்குட்டிக்கும் இவைகள் இருக்கிறதே” என்றான். சிறுவன் அவனிடம், “இதன் ரோமத்தையும், சிறப்பம்சத்தையும், கண்களையும், மூக்கையும் பாருங்கள்” என்றான். ஆனால் அவனைக் கேலி செய்த திருடன், “நாய்க்குட்டிக்கு இதெல்லாம் இல்லையாக்கும்!” என்றான். அந்தப் பிராமணன் வேறு பல விளக்கங்களைத் தந்தாலும், இந்தத் திருடனின் தொடர்ச்சியான ஒப்புமை விளக்கங்கள் தொடர்ந்தன. அவனால் இவனை மேற்கொள்ள முடியவில்லை என்று உணர்ந்தவன், அது நாய்க்குட்டிதான் என்று நம்பி, கன்றுக்குட்டியை அங்கேயே விட்டுவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் 'உண்மையான' கன்றுக்குட்டியைத் தேடப் போனான். அதை அவன் கண்டுபிடிக்கவே இல்லை. வேறொருவன் ஒப்புமைகளைச் சொல்லிக்கொண்டே இருந்தபோது, இந்தப் பிராமணன் ஏழையாக இருந்தது மட்டுமல்லாமல், வித்தியாசங்களைப் பிரித்தறிய முடியாத பேதையாகவும் இருந்துவிட்டான் என்பதை விளக்குகிறது இந்தக் கதை.

இந்தக் கதை குழந்தைத்தனமாகத் தோன்றினாலும், இது தங்களையே பூரணராகக் காண்பிக்கும் அநேகருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். அவர்கள் தேவையற்ற ஒப்புமைகளால் கவரப்படுகிறார்கள். அதன் பயனால் வேற்றுமைகளைப் பிரித்து உணரும் சிந்தனைத் திறனை இழந்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்தக் கதையின் மற்றுமொரு படிப்பினை என்னவென்றால், ஒற்றுமையல்ல, வேற்றுமையே இரண்டு காரியங்களின் அடையாளங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான். அந்தப் பிராமணச் பையன் தன் கன்றின் கொம்புகள் மீது கவனம் செலுத்தியிருந்தால், அவன் திருடனிடம் ஞானமான பதிலைத் தந்திருப்பான். அதன் பயனாகத் தன் கன்றை இழந்திருக்கமாட்டான். ஒரே ஒரு வித்தியாசம் இந்த இரண்டையும் பிரித்துக் காண்பிக்கிறது; அநேக ஒற்றுமைகளால் இரு வேறு காரியங்களை ஒன்றாக்கிவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் கன்றுக்குட்டி மற்றும் நாய்க்குட்டி இரண்டிற்கும் இடையே ஒப்புமைகள் இருப்பினும், அந்த ஒப்புமைகளிலும் கவனிக்கத்தக்க வித்தியாசங்கள் உள்ளன.

எனவே, வேற்றுமைகளைச் சரியாக அடையாளப்படுத்தினால், இரண்டு காரியங்களுக்கு இடையே உள்ள பொதுவான அம்சங்கள் எப்போதும் ஒற்றுமைக்கு இடமாகிறதாக எண்ண முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மேலோட்டமாகச் சில ஒப்புமைகள் இருப்பினும், அடிப்படையான வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வித்தியாசங்களை ஒப்புமைகளால் மறைத்துவிட முடியாது. மேலும், இந்த அடிப்படை வித்தியாசங்களால் முழுமையாகத் தனித்து நிற்க முடியும். இந்தக் கட்டுரையில் இக்கருத்தையே நாம் வலியுறுத்த முயற்சிப்போம். அதாவது, நமது 'கன்றுக்குட்டியையும்', நாப் அவர்களின் 'நாய்க்குட்டியையும்' பக்கம் பக்கமாக நிறுத்தி, தெளிவான வித்தியாசங்கள் விளங்கக் காண்பிப்போம். அவைகளின் ஒப்புமைகள் மற்றும் சமமாகக் காணப்படும் சரீர அமைப்புகள் உண்மையில் ஒப்புமைதானா என்பதை நாம் விளங்கப்பண்ண முயற்சிப்போம்.

அநேகர் சபையின் விலையேறப்பெற்ற விசுவாசத்தைக் கொள்ளையிடும் முயற்சியில் இறங்கி, கிறிஸ்தவர்களிடம் உள்ள கன்று, நாய்க்குட்டிதான் என்று நம்பப்பண்ண வீணாகப் பாடுபட்டுள்ளனர். ஆனாலும், சபையோ தன் விசுவாசத்தை விட்டு விலகாமல் இதுவரை நின்றுகொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம், சபைக்கு வாக்குப்பண்ணிய தேவன், “உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக விண்ணப்பம் பண்ணினேன்” என்று உரைத்தவரின் உண்மையே. இதற்கு மாறாகச் செயல்பட்டுப் புதுமைகளை யோசிக்கும் எவரும் தன் சமயத்தையும், வாய்ப்பையும் வீணடிக்கிறார்களே தவிர, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை. ஏனெனில், அதற்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். நாம் முன்வைக்கும் உண்மைகளைக்கவனித்து, நாப் அவர்கள் எவ்விதமாக அவைகளைத் தன் வசதிக்கு ஏற்ப வளைக்கிறார் என்பதைக் காணும்படி, இதை வாசிக்கிறவர்களைத் தேவன் ஞானத்தால் நிரப்பி ஆசீர்வதிப்பாராக.

கிருஷ்ணர் – கிறிஸ்து: குழப்பத்திற்கான தீர்வு

இந்தக் கட்டுரையில் கிறிஸ்துவின் பிறப்பு, மரணம் மற்றும் போதனைகளிலிருந்து கிருஷ்ணரின் பிறப்பு, மரணம் மற்றும் போதனைகளுக்கு ஒப்புமைகளைக் கொணர முயற்சித்திருக்கும் நாப் அவர்களின் கருத்துக்களுக்கு நாம் பதிலளிக்க விரும்புகிறோம். அவருக்குள் முன்தீர்மானிக்கப்பட்ட முடிவான, 'கிறிஸ்தவ விசுவாசத்தில் இந்து வேதங்களின் தாக்கம் இருக்கிறது' என்று நிறுவ வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்புமைகளை அவர் எடுத்தியம்புகிறார். முதலில் நாப் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காண்பித்து, தொடர்ந்து நமது பதிலைத் தருவோம். இந்த வகையில் வாசகர் தனக்கு எந்த வாதம் சரியாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கட்டும். இந்த இடத்திலேதானே வாசகர் தன்னுடைய நிதானிப்புக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில், இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள் செல்லும் வாசகர், நாப்பின் ஆதாரங்கள் நிற்குமா அல்லது விழுந்துபோகுமா என்பதை இங்கிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு உண்மையான வாசகரும் சரியான முடிவுக்கு வரத் தேவையான ஞானத்தையும், தெளிவையும் பெற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

1. கிறிஸ்துவின் பிறப்புக்கும், கிருஷ்ணரின் பிறப்புக்கும் உள்ள ஒப்புமைகள் (நாப் அவர்களின் வாதம்):

  1. "குழந்தை இயேசு அன்னை மரியாளின் இருதயத்தில் பாவமில்லாமல் உற்பவமான சம்பவத்தை நாம் ஆய்வு செய்யும்போது, இரவில் பிரகாசமான நட்சத்திரம் வானில் தோன்றியது."

  2. "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில், பிருந்தாவனம் என்ற இடத்தில் கிருஷ்ணர் பிறந்த சம்பவத்துடன் நேரடி ஒப்புமைகளை வேத இலக்கியங்களில் காணலாம். பழங்கால வேத எழுத்துக்களில் கிருஷ்ணர், அவருடைய தந்தையாகிய வாசுதேவனுடைய மனதில் எவ்வாறு தோன்றினார், அதன் பின்னர் அவர் கிருஷ்ணருடைய தாயார் தேவகியின் இருதயத்திற்குள் எவ்வாறு மாற்றப்பட்டார் என்று காண்கிறோம். கிருஷ்ணாவின் பிறப்பின்போது, ரோகிணி என்கிற பிரகாசமான நட்சத்திரம் வானில் தோன்றியது. அப்போது இருந்த அரசன் கம்சன், ஏரோது மன்னன் சிறு பிள்ளைகளைக் கொலை செய்ய உத்தரவிட்டதுபோலவோ, கிருஷ்ணரைக் கொலை செய்ய வேண்டும் என்பதற்காக அந்தப் பகுதிகளில் இருந்த சிறு பிள்ளைகளைக் கொல்ல உத்தரவிட்டான்."

  3. "இயேசுவின் பிறப்பின்போது மேய்ப்பருக்கு மத்தியில் திரளான தூதர்கள் தோன்றியதுபோல, கிருஷ்ணர் உலகத்திற்குள் வருவதற்கு முன்னால் அநேகம் குட்டித் தேவர், தேவதைகள் ஆடிப்பாடி அவரின் மகத்துவத்தைப் புகழ்ந்தனர்."

  4. "கிருஷ்ணர் ஒரு குகை போன்ற அறையில் பிறந்தார்; இயேசுவும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்பட்டாலும், ஒரு குகை போன்ற அமைப்பில்தான் பிறந்தார். அவர்கள் பிறந்த பின்னர் அந்த இடங்களைச் சுற்றிலும் ஒளிவட்டங்கள் வீசின. அவர்கள் இருவரும் பிறந்த உடனே அவர்கள் உலகத்திற்கு வந்த காரணத்தைக் குறித்துப் பேசினர்."

  5. "சாஸ்திரிகள் வெள்ளைப்போளமும், தூபவர்க்கமும் கொண்டுவந்ததுபோல, பாலகன் கிருஷ்ணருக்கும் சந்தனம் மற்றும் நறுமணப் பொருள்கள் பரிசாகக் கொண்டுவரப்பட்டன."

பதில்:

வாசுதேவனின் மனதில் கிருஷ்ணரின் உற்பவம் ஆக்கம் பெற்றது; ஆனால் மரியாளில் உற்பவமானது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது (மத்தேயு 1:18–21). கிருஷ்ணரின் தந்தை வாசுதேவன் மனதில் உருவாக்கியதுபோல, யோசேப்பு இயேசுவைக் குறித்த எந்த ஒரு மனதின் உற்பவத்தையும் உடையவராக இருக்கவில்லை. இயேசு கருவில் உற்பவமானது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், அவர் கருவில் உருவான விதம் இயற்கையான பிறப்பைப் போன்றதாகவே இருந்தது. இயேசு அவருடைய தாயாரின் கர்ப்பத்தில் உற்பவமானதாக வேதத்தில் வாசிக்கிறோம் (லூக்கா 2:28–31). கிருஷ்ணரைப்போல, மரியாளுடைய இருதயத்தில் இயேசு உற்பவமானதாக நாம் வாசிக்க முடிவதில்லை. ஒரு தாயின் உள்ளத்தில் ஒருவர் வந்து, அதன் விளைவாகப் பிறந்தார் என்கிற கருத்து வேத இலக்கியத்திற்கு அந்நியமானது; அதுபோன்ற கற்பனைகளுக்கு வேதத்தில் ஒப்புமை என்பது இல்லை.

இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் அற்புதமாகப் பிறந்தார் (மத்தேயு 1:18–25). ஆனால் கிருஷ்ணர் தன் தாயாருக்குப் பிறந்த எட்டாவது மகன். இயேசுவின் அற்புதமான பிறப்பை வாசகர்களுக்குத் தெரிவிக்க நாப் மறந்துவிட்டார். இதற்கு இணையான ஒன்றாக வேத இலக்கியத்திலிருந்து ஒப்புமையைக் கொண்டுவந்திருந்தால், அவருடைய நோக்கத்திற்கு அதிக பயனுள்ளதாக இருந்திருக்கும். இதைக் குறித்து அவருடைய அடுத்த பதிப்பில் எழுதி நமக்கு உதவுவார் என்று நம்புவோம்.

கிருஷ்ணரின் பிறப்பின்போது ரோகிணி நட்சத்திரம் வானில் பிரகாசித்தது ஒருவேளை உண்மையாக இருப்பினும், இதைக் குறித்து எந்த ஒரு தனித்துவமும் இல்லை. ஏனெனில், ஒன்றோ அல்லது மற்றதோ என ஏதாவது ஒரு நட்சத்திரம் ஒவ்வொருவர் பிறப்பின்போதும் (அவர் இரவில் பிறந்திருந்தால், வானம் தெளிவாக இருந்தால்) பிரகாசிப்பதை நாம் காணமுடியும். இயேசுவின் பிறப்பின்போது தோன்றிய நட்சத்திரத்தின் தனித்துவம் என்னவெனில், அந்த நட்சத்திரம் சாஸ்திரிகளைப் புதிதாகப் பிறந்திருக்கும் அரசர் இருந்த இடம் வரைக்கும் வழிநடத்தி முன்சென்றது என்று பார்க்கிறோம் (மத்தேயு 2:7–10). இதுபோன்ற ஒரு சம்பவம் கிருஷ்ணரின் பிறப்பின்போதோ அல்லது வேறொருவரின் பிறப்பின்போதோ நடந்ததாக ஒப்புமையை நம்மால் காணமுடியாது.

கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்துவின் பிறப்பின்போது, தனக்கு அபாயமாய் முடிந்துவிடும் என்று கருதிச் சிறுபிள்ளைகளைக் கொலை செய்யும் அரசன் குறித்த சம்பவத்தில் எந்தவிதத் தனித்துவமும் இருக்கவில்லை. கிருஷ்ணரின் பிறப்பின்போது நடைபெற்ற சிசுக்கொலை, எந்தவிதத்திலும் இயேசுவின் பிறப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. மோசேயின் காலத்தில் நடந்த சிசுக்கொலை சம்பவம்தான் கிருஷ்ணர் காலத்தில் சிசுக்கொலை நடந்தது போன்ற சித்தரிப்பிற்குக் காரணம் என்று நாம் சொல்ல முடியாது என்பதுபோலத்தான் இதுவும் (யாத்திராகமம் 1:15–22). கிருஷ்ணரின் பிறப்பு மோசேயின் பிறப்பிற்கும் முந்தைய காலத்தைச் சார்ந்தது என்று நிரூபிக்க எந்த ஒரு அகழ்வாராய்ச்சிச் சான்றும் கிடையாது. ஆனால் மோசேயின் சரித்திரம் யூதர்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. கிருஷ்ணரைக் குறித்த அறிவிற்காக இந்தத் தூணில் வரும் சான்றுகளை நாப் சார்ந்திருக்கிறார் (கி.பி. 113-ல் கட்டப்பட்ட ஹீலியோடோரஸ் தூண்). ஆனால் மோசேயின் வரலாறு இதைவிடப் பல நூறு ஆண்டுகள் முந்தையது.

இயேசுவின் பிறப்பின்போது நடந்த பல்வேறு சம்பவங்களில் ஒன்றான சிசுக்களின் கொலை என்பது, கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாகவே நடந்தது (மத்தேயு 2:16–18). அவ்வாறான தீர்க்கதரிசன நிறைவேறுதலை, அதற்கு முன்னதாக நடந்த எந்த நிகழ்ச்சியுடனும் ஒப்பிடுவது தகுதியானது அல்ல. கிறிஸ்துவின் பிறப்பின்போது வழங்கப்பட்ட தெய்வீக வழிநடத்தல்கள் போல ஏனைய நிகழ்ச்சிகளில் காணமுடிகிறதில்லை. கம்சனும், ஏரோதும் தங்களுக்குக் கிடைத்த வெளிப்பாடு செய்தியின் காரணத்தினால் சிசுக்களைக் கொல்ல உத்தரவிட்டாலும், பிறக்கிறவர்கள் அவர்களை மேற்கொண்டு விடுவார்கள் என்கிற பயத்தினால் முந்தையவன் (கம்சன்) கொலை செய்ய முற்பட்டான். ஆனால் ஏரோதின் இந்தக் கொலைச் செயலை ஏற்கனவே தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கக் கண்டால், இவை இரண்டும் எப்படி ஒப்புமையுடையவையாகும்?

இயேசு கிறிஸ்துவின் மகிமையான வாழ்க்கை, அவருடைய பாவப்பரிகார மரணம், அவரின் வெற்றிகரமான உயிர்த்தெழுதல், அவருடைய பரமேறுதல் மற்றும் அவரின் வருகையைக் குறித்த வாக்குத்தத்தம் (1 தீமோத்தேயு 3:16) போன்ற காரணங்களால் இயேசுவின் பிறப்பின்போது தூதர்கள் அவருடைய மகிமையைப் போற்றிப் புகழ்ந்தனர். ஆனால் கிருஷ்ணரின் காமம் நிறைந்த தளர்வான வாழ்க்கையை நாம் பார்க்கிறபட்சத்தில், அவருடைய பிறப்பின்போது, ஒருவேளை உண்மையில் தேவர்கள் இருந்திருந்தால், அவர்கள் ஆடிப்பாடியது அவருக்குத் தகுதியானதாகத் தெரியவில்லை. இந்த ஒரு நிகழ்வு கிறிஸ்துவின் பிறப்புடன் ஒப்புமைப்படுத்தத் தகுதியற்றது. துதித்தலும் முகஸ்துதியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று சொல்வது எப்படி முடியாததோ, அதுபோலத்தான் இதுவும் முடியாது.

இயேசு பெத்லகேமில் ஒரு முன்னணையில் பிறந்தார் என்பது வேதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (லூக்கா 2:7). ஆனால் அவர் கிருஷ்ணரைப்போல ஒரு குகையில் பிறந்தார் என்று சொல்வது, இல்லாத ஒரு ஒப்புமையைப் பிணைக்க முயலும் விபரீத முயற்சியாகும். அதுபோல இயேசு தான் பிறந்த அதே நாளிலோ அல்லது அவருடைய குழந்தைப் பருவத்திலோ தன் ஊழியத்தைக் குறித்துப் பேசவில்லை. நாப் அவர்கள் சொல்வது போல, அவர் இருந்த இடத்தை எந்த ஒளிவட்டமும் வெளிச்சமாக்கவில்லை. கானாவூரில் நடந்தத் திருமண வீட்டில், இயேசு தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றிய அற்புதத்திற்கு முன்னர் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை (யோவான் 2:11). நாப் அவர்கள் வேதத்தை வாசிக்கும்போது தூங்கிவிடக்கூடாது.

பிறந்த பிள்ளைகள் அருகே நறுமணப் புகை போடுவது என்பது கிழக்கத்திய கலாச்சாரத்தில் இருக்கிற சாதாரண நடைமுறையே. இதன் நீட்சியை இன்றும் சில சமுதாயங்களில் செயல்படுவதை நாம் காணத்தான் செய்கிறோம். ஆகவே, ஒருவரின் பிறப்பின்போது கொடுக்கப்பட்ட வெள்ளைப்போளமும், தூபவர்க்கமும் அல்லது இன்னொருவரின் பிறப்பின்போது தரப்பட்ட சந்தனம் மற்றும் வாசனைப் பொருள்கள் என்பது ஏறத்தாழ எல்லாப் பிறந்த வீடுகளிலும் காணமுடியும். ஆகவே, இது போன்ற பொதுவான நிகழ்வுகளை ஒப்புமைகள் என அழைக்கலாகாது.

2. கிறிஸ்து மற்றும் கிருஷ்ணர் இருவருடைய மரணம் மற்றும் ஏனைய காரியங்களில் உள்ள ஒப்புமைகள் (நாப் அவர்களின் வாதம்):

  1. "கிருஷ்ணர் இந்தப் பூகோளத்தை விட்டுச் சென்றபோது, அவருடைய பாதம் அம்பால் துளைக்கப்பட்டது. அதேவேளையில் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டது."

  2. "இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அந்தகாரம் சூழ்ந்திருந்தது போலவே, கிருஷ்ணர் இந்த உலகை விட்டுச் சென்றபோது இருள் சூழ்ந்ததுடன், அநேக அழிவுகளும் உண்டாயின."

  3. "கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்கும் ஏராளமான முன் அடையாளங்கள் இருப்பதுபோல, நாம் இப்போது கடந்து போகிற கலியுகக் காலத்தைக் குறித்த இன்னும் அதிக அடையாளங்களும் இருக்கிறதால் கிருஷ்ணரின் அடுத்த அவதாரமான கல்கி அவதாரம் வருவதற்கான காலம் நெருங்கி வருகிறதைக் குறிக்கிறது."

  4. "இவைகளில் அநேகம் 'வேதிய தீர்க்கதரிசனங்கள்' என்கிற புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். இது போன்ற இன்னும் அநேகம் ஒப்புமைகள் இந்து வேதங்களில் வெளிப்படுத்தக் காணலாம். அவை வேதாகமம் எழுதுவதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னானவை."

பதில்:

சரித்திரக் குறிப்புகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சரீரப் பகுதிகளில் குத்தப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கையில் அடங்காதோர். எனவே நாப் அவர்களின் தரநிலைப்படி, சரித்திரத்தில் முதலில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு இது போன்ற சம்பவங்கள் வந்திருந்தால், அதை வரலாற்றுத் திருட்டாக எண்ணிப் புறக்கணிக்க வேண்டும். கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு பாய்ந்ததன் காரணம் காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவு. ஆனால் கிறிஸ்துவோ, பாவிகள் நித்திய சாபத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதற்காகக் குத்தப்பட்டார். இந்த இரண்டு மரணங்களுக்கும் இடையே உண்மையில் ஒப்புமை இருக்கிறதா என்பதை வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.

இந்த இரண்டு மரணங்களுக்குப் பின்னர் குறிக்கப்பட்டுள்ள ஒப்புமைகள் அல்லது அழிவுகள் எதுவாக இருந்தாலும், கிருஷ்ணரின் கல்கி அவதாரம் என்பது இரட்சகராகிய கிறிஸ்துவின் மகிமையான உயிர்த்தெழுதலுக்கு அருகில்கூட வரமுடியாது. அவரது காலியான கல்லறை, அவர் திரும்ப வருவார் என்பதை உரக்கச் சொல்கிறது. இதற்கும் கல்கியின் அவதாரத்திற்காக நிறைவேறுகிற தீர்க்கதரிசனம் என்று சொல்லப்படும் வெறுமையான கற்பனைகளை இத்துடன் ஒப்பிடுவது நியாயமாக இருக்காது.

நாப் இந்து வேதங்களுக்கும், வேதாகமத்திற்கும் இடையே நூற்றுக்கணக்கான ஒப்புமைகள் இருப்பதாக உரிமைகருதுவது அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய கூற்று அல்ல. அவர் இங்கே தந்திருக்கும் உதாரணங்கள் பரீட்சைக்கு நிற்கவில்லை என்பதால், அவர் சொல்லாமல் விட்டதும், தன் கிட்டங்கியில் சேர்த்து வைத்திருக்கும் மற்ற ஒப்புமைகளும் இவ்வாறுதான் இருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. அவைகளைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை.

3. உபதேச ஒப்புமைகள் (நாப் அவர்களின் வாதம்):

  1. "கிருஷ்ணரின் கருத்துக்களைப் போலவே, இயேசு கிறிஸ்துவும் பிரசங்கித்தார். உதாரணமாக, பகவத் கீதையில் (7:6-7) கிருஷ்ணர் உரைக்கிறார்: “அனைத்து உயிரினங்களையும் நான் உருவாக்குகிறேன். நான்தான் படைப்பிற்கும், அழிவிற்கும் ஆதாரமானவன். முத்துக்கள் நூலில் கோர்க்கப்பட்டிருப்பதுபோல, எல்லா உயிரினங்களும் என்னையே சார்ந்திருக்கின்றன”. இயேசு சொல்கிறார், “சகலமும் அவர் மூலமாயும் அவருக்குள்ளும் அவருக்கென்றும் இருக்கிறது. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலே அல்லாமல் உண்டாகவில்லை” (யோவான் 1:3)."

  2. "கிருஷ்ணர் சொன்னார்: “நீதியை நிலைநாட்டும்படியாக நான் ஒவ்வொரு காலத்திலும் பிறக்கிறேன்”. இந்த வாக்கு இயேசுவின் வார்த்தைகளுடன் இணைத்துப் பார்க்க உகந்தது. யோவான் 18:37-ல் இயேசு இவ்வாறு உரைக்கிறார்: “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான். சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன். இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன். சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்”."

  3. "இது போன்ற இன்னும் பல ஒற்றுமைகளை நாம் சொல்ல முடியும். அப்படியிருந்தும், கிருஷ்ணரின் வரலாறு, இயேசுவின் வரலாற்றைவிட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்பதே சத்தியம்”.

பதில்:

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து சிருஷ்டிகர் என்று சொல்லப்படுவது, நாப் சொல்வதுபோல கிருஷ்ணரிடமிருந்து கடன்பெறப்பட்ட ஒன்று அல்ல; அது ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் யெகோவா தேவன் முன்னறிவித்ததை மறுபடியும் எடுத்துச் சொல்கிறது. இந்தப் பழைய ஏற்பாடு, நாப் சொல்லக்கூடிய அனைத்து இந்து மத ஆதாரத் தகவல்களுக்கெல்லாம் மிகவும் பழமையானது. பழைய ஏற்பாட்டில் இதுபோல வரும் இரண்டு வசன உதாரணங்களைக் கவனியுங்கள்:

எனவே நாப் அவர்களால் இயேசுவுக்காக உபயோகப்படுத்தப்படும் உரிமைகோரல் எதுவும், இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் தேவன் என்பதையே உணர்த்துகின்றன (யோவான் 5:39). இதற்காக இயேசு, பகவத் கீதை போன்ற பழைய ஏற்பாட்டைவிடத் தாழ்வான ஆதாரங்களிலிருந்து வார்த்தைகளைக் கடன்பெற்றார் என்ற வாதம் நிறுவ முடியாத ஒன்று.

மதத்தில் உள்ள உபதேச ஒற்றுமைகள் என்பது வெறும் வார்த்தை ஜாலங்களே. வார்த்தை உச்சரிப்புகள் ஒரே மாதிரி இருக்கலாம். எனினும் அவற்றின் அர்த்தம், அவர்தம் இறையியல் அம்சம் தாங்கிய அடிப்படையிலிருந்து நிதானிக்கப்பட வேண்டியது. உதாரணமாக, 'மறுபடியும் பிறத்தல்' என்று வேதம் சொல்வது ஆவிக்குரிய புதுப்பிப்பை உணர்த்துகிறது. ஆனால் இந்து வேத இலக்கியத்தின் அடிப்படையில் அதன் அர்த்தம் 'மறுபிறவியை' (Reincarnation) குறிக்கிறது.

அதுபோலவே, கிறிஸ்துவும் கிருஷ்ணரும் நீதியை நிலைநாட்ட வந்ததாக உரைப்பதும், அவரவர் விடுக்கும் அந்த வாக்குறுதிகள் என்ன கண்ணோட்டத்தோடு வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இயேசு நீதியையும், சத்தியத்தையும் அதன் எதிர்மறையாக இருக்கிற உலகளாவிய பாவம், பொய் போன்றவற்றுடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார். அவரை விசுவாசிக்கிறவர்களை மீட்கும்படியாக, அவர்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். நீதிபரராகிய அவர் அக்கிரமக்காரருக்காக மரித்தார். அவர் பாவத்திற்கான பிராயச்சித்தம் செய்ததன் மூலமாக நீதியை நிலைநாட்ட வந்தார். அதன் வழியாகப் பாவிகளை அவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் (யோவான் 8:34–36, ரோமர் 3:24–26 ஐப் பாருங்கள்). இந்தச் சத்தியத்திற்குச் சாட்சி பகரவே அவர் இந்த உலகத்தில் பிறந்தார்.

ஆனால் கிருஷ்ணர் நீதியை நிலைநாட்டுவதைப் பற்றிப் பேசும்போது, பாவிகளுக்கு இரட்சிப்பைத் தரும் வகையில் அவர் அதை நிலைநாட்டப் போவதாக உரைக்கவில்லை. மாறாக அவர் நல்லோர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் தான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் எடுக்கிறதாக பகவத் கீதை உரைக்கிறது. இதற்கு நேர் எதிர்மறையாக இயேசு உரைத்தார்: “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (மத்தேயு 9:12–13).

முடிவுரை

நாப் அவர்கள் பரிசுத்த வேதாகமத்திலும் இந்து வேதத்திலும் உள்ள ஒப்புமைகளை ஆதாரப்படுத்தி, புதிய ஏற்பாட்டைவிட இந்து வேத இலக்கியங்கள் முந்தியவை என்கிற கருத்தை முன்வைக்கிறார். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு அதன் கருத்துக்களுக்கும் வளர்ச்சிக்கும் இந்து வேதங்களின் தாக்கம் முக்கிய பங்கு வகித்ததாக வாதிடுகிறார். ஆனால் இந்தக் கட்டுரையில் அவருடைய அஸ்திபாரங்களைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தகர்த்துவிட்டதாக நம்புகிறோம். நாப் அவர்கள் முன்மொழிந்த ஒவ்வொரு ஒப்புமைக்கும் தக்க பதிலை நாம் இங்கே தந்துள்ளோம். ஆகவே, கிருஷ்ணரின் சரித்திரம் இயேசுவின் சரித்திரத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள காரணத்தால், அவரின் தாக்கம் கிறிஸ்துவில் இருந்தது என்று திருஷ்டாந்தம் செய்ய முடியாது. மேலும், நிச்சயமாக நாப் அவர்களால் இந்து வேத இலக்கியங்கள் பழைய ஏற்பாட்டிற்கும் முந்தையது என்று நிரூபிக்க முடியாது. அந்தப் பழைய ஏற்பாட்டின் அடிப்படையில்தான் புதிய ஏற்பாடு வருகிறது.