பிரஜாபதி இயேசு கிறிஸ்துவா?
படிப்புகள்: 33
Print
ஆசிரியர்: D.யஷ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 19 நிமிடங்கள்

 இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான பிரஜாபதி என்பவர் வேறு யாருமல்ல, அவரே ‘இயேசு கிறிஸ்து’ என்று போதகளில் சிலர் போதித்து வருகின்றனர். பிரஜாபதியை எல்லா தெய்வங்களும் இணைந்து பலியாகச் செலுத்தியதாகவும், அவரே தேவகுமாரனாகிய இயேசு என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் பல அம்சங்கள் கிறிஸ்துவிடம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தத் தவறான போதனையை (கள்ள உபதேசத்தை) ஆழமாகப் பரிசீலிப்பதற்கு முன், ஆரியர்களின் புனித நூல்களைக் குறித்துச் சற்று அறிந்து கொள்வது அவசியம்.

ஆரியர்களின் புனித நூல்கள்

ரிக் வேதம்: இந்தியாவிற்குக் குடியேறிய ஆரியர்கள், இந்தியாவின் பூர்வகுடிகளான திராவிடர்களைத் தோற்கடிக்க விரும்பினர். அந்த விஷயத்தில் தங்களுக்கு உதவும்படி தங்கள் தெய்வங்களை வேண்டுவதற்காகச் சில சுலோகங்களை உருவாக்கினர். தற்போதுள்ள ரிக் வேதத்திலுள்ள ஏறக்குறைய அனைத்து சுலோகங்களும் இந்திரன், அக்னி, பூஷன் (புகன்), வருணன் போன்ற தெய்வங்களைப் போற்றும் பாடல்களே அதிகம் உள்ளது. பரிசுத்த வேதாகமத்தை கொண்டுள்ள கிறிஸ்தவர்களாகிய நமக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

யஜுர் வேதம்: இதில் முக்கியமாகத் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளன. தாங்கள் சமர்ப்பித்த பலியைத் தெய்வங்கள் புசிப்பதாகவும், அக்னி தேவன் அந்த உணவைச் சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் ஆரியர்கள் கருதினர்.

சாம வேதம்: இந்நூலில் பெரும்பாலும் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட சுலோகங்களே உள்ளன. மற்ற வேதங்களில் இல்லாத, சுலோகங்கள் இதில் மட்டுமே சிலதே உள்ளன.

அதர்வண வேதம்: மற்றப் பழங்கால மக்களைப் போலவே ஆரியர்கள் மந்திரம் ஓதுவதில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். அதர்வண வேதத்தில் அத்தகைய விஷயங்களே உள்ளன. மந்திரங்களுக்காகவும், சாபமிடுவதற்காகவும் இவ்வேதத்தை இன்றளவும் பயன்படுத்துகின்றனர்.

பிராமணங்கள்: ஒவ்வொரு வேதத்திற்கும் ஒரு விளக்கவுரை உண்டு. அந்த விளக்கவுரையையே 'பிராமணங்கள்' என்று அழைப்பர். 'பிரஜாபதி' என்ற இந்த துணைப்பிரிவு தொடர்பான சில முக்கிய போதனைகள் இந்தப் பிராமணங்களில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐதரேய பிராமணம் மற்றும் சதபத பிராமணம் முக்கியமானவை.

ஆரண்யகங்கள்: 'ஆரண்யம்' என்ற சமஸ்கிருத சொல்லிற்கு 'காடு' என்று பொருள். ஆரண்யகங்கள் என்பவை காட்டில் இருக்கும்போது மட்டுமே ஓதவேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள் ஆகும். மனிதர்கள் வாழும் பகுதிகளில் அவற்றை ஓதினால் ராட்சதர்கள் அழிவை ஏற்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

உபநிஷத்துகள்: கண்டெடுக்கப்பட்ட உபநிஷத்துகள் நூறிற்கும் குறைவாகவே உள்ளன; ஆனால் அவை ஆயிரக்கணக்கில் இருந்ததாக அவர்களில் நம்பப்படுகிறது. உபநிஷத்துகளில் தத்துவ ரீதியான உரையாடல்கள் இருக்கும்.

பிற நூல்கள்: இந்நூல்களுடன், இந்துக்கள் புனித நூல்களாகக் கருதும் வேறு பல நூல்களும் உள்ளன. இராமாயணம், மகாபாரதம், மகாபாரதத்தின் ஒரு பகுதியான கீதை, 18 புராணங்கள் மற்றும் 18 உபபுராணங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.

'பிரஜாபதியே கிறிஸ்து' என்ற தவறான போதனை பல தசாப்தங்களுக்கு (நுற்றாண்டுகளுக்கு) முன்னரே இருந்தாலும், அது சில ஆண்டுகளுக்கு முன்புதான் வேகம் பெற்றது. பண்டிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களில் சிலர், சமீபகாலமாகப் பழங்கால ஆரியர்களின் தெய்வமான பிரஜாபதியைத் தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டதால், இத்தவறான போதனை ஒரு தனிப்பிரிவாக உருவெடுத்துள்ளது. இந்தப் பண்டிதர்கள் கூறிய பொய்களால் பாமர மக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்து வேதங்களில் உள்ள பிரஜாபதியிடம் காணப்படும் சில பண்புகள் இயேசு கிறிஸ்துவிடமும் காணப்படுகின்றன என்பதே இப்பிரிவினரின் முக்கிய தவறான போதனையாகும். அகில உலகத்தையும் படைத்த தேவன், மனிதகுலத்தின் மீட்பு தொடர்பான எதிர்காலத் திட்டத்தை ஆரியர்களுக்கு வெளிப்படுத்தினார் என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் புறஜாதிகளில் எவருக்கும் அத்தகைய வெளிப்பாடு கொடுக்கப்படவில்லை என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தை யூதர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது (சங்கீதம் 147:19, 20; ரோமர் 3:1, 2). மேற்குறிய கருத்தை இந்த வேத வசனங்கள் தெளிவாக கூறுகிறது. வாதத்திற்காக, தேவனுடைய வார்த்தை ஆரியர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது என்று பிரஜாபதி பக்தர்களுடன் ஒப்புக்கொண்டாலும், அது இப்பிரச்சினைக்கு எவ்விதத் தீர்வையும் தராது. ஏனெனில், இயேசு கிறிஸ்துவிடம் உள்ள எந்தப் பண்புகள் பிரஜாபதியிடம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ, அவை அனைத்தும் பொய்களே.

பிரஜாபதி பாவம் இல்லாதவரா?

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து எந்தப் பாவமும் செய்யவில்லை. வேதங்களில் உள்ள பிரஜாபதியும் பாவம் இல்லாதவராக இருந்தால், அந்தப் பிரஜாபதியே கிறிஸ்து என்று சொல்வதற்கு அது ஒரு நல்ல சான்றாக அமையும். எனவே, பிரஜாபதியைப் பாவம் இல்லாதவராகக் காண்பிப்பதற்க்கு இப்பிரிவினர் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கின்றனர். அவர்களுடைய வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளிலிருந்து சில பகுதிகளை எடுத்துக்கொண்டு, பிரஜாபதி பாவம் இல்லாதவரே என்று முடிவு செய்துவிட்டனர். ஆனால், உண்மை இதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது. உதாரணமாக, ஐதரேய பிராமணம்: 3.2.9-ஐப் பாருங்கள்.

பிரஜாபதி தன் சொந்த மகளையே மனைவியாக்கிக்கொள்ள விரும்பினார்; இதை அறிந்த மற்ற தெய்வங்கள் மறுப்பு தெரிவித்தனர். அத்தகைய பாவத்தைச் செய்யாதபடி பிரஜாபதியைத் தடுக்க மற்ற தெய்வங்கள் முயன்றனர். ஆனால் அந்த பிரஜாபதி அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. இதனால் தெய்வங்கள் கோபமடைந்து பிரஜாபதியைக் கொல்லவதற்கு முயன்றனர், ஆனால் கொல்ல முடியவில்லை. எனவே அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ருத்ரனை உருவாக்கினர். அந்த ருத்ரன் பிரஜாபதியைக் கொல்வதில் வெற்றி பெற்றான்.

இப்போது எழும் கேள்வி என்னவென்றால்: தன் சொந்த மகளுடனே தகாத உறவு கொண்டதற்காகத் தெய்வங்களால் கொல்லப்பட்ட இந்தப் பிரஜாபதியை இயேசு கிறிஸ்துவாகக் கருத முடியுமா? அந்த பிரஜாபதி மரணத்திற்கும் நம் ஆண்டவருடைய தியாகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? அப்படிப்பட்டவனே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று பிரச்சாரம் செய்யும் நிலைக்கு இன்றைய நவீன போதகர்கள் எப்படித் தரம் தாழ முடியும்?

பொய்க்குப் பிதாவும் ஏமாற்றுக்காரனுமாகிய பிசாசு, வேதங்களில் அநேக பிரஜாபதிகள் உள்ளதாகவும், தன் மகளுடன் முறைதவறி நடந்தவன் உலகைப் படைத்த 'புருஷ பிரஜாபதி' அல்ல என்றும் தன் சீடர்களைக் கொண்டு சொல்ல வைப்பான். ஆனால் இதே பிராமணத்திலுள்ள அடுத்தடுத்த சுலோகங்களை ஆராய்ந்தால், மனிதனைப் படைத்த புருஷ பிரஜாபதி இவனே என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால் இந்த வாதத்தில் எந்தப் பொருளும் இல்லை. பிரஜாபதியின் விந்து அதிக அளவில் இருந்ததால் பெண்ணால் அதைத் தாங்க முடியவில்லை என்றும், அவ்வாறு கீழே விழுந்த விந்து ஒரு ஏரியாக மாறியதென்றும், அதிலிருந்தே மனிதன் தோன்றினான் என்றும் ஒரு பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்போது சொல்லுங்கள்! இவன் அல்லவா அந்த அசல் பிரஜாபதி?

கூடுதலாக, பிருஹதாரண்யக உபநிஷத் பிரஜாபதியின் பாவத்தைப் பற்றி மேலும் விவரங்களைத் தெரிவிக்கிறது. பார்க்கவும்: 1.4.2-4. பிரஜாபதி தனிமையில் இருந்தபோது பயந்தார். அவர் தன் உடலை இரண்டாகப் பிரித்தார். ஒரு பாதி ஆணாகவும், மறுபாதி பெண்ணாகவும் மாறியது. அவர்களின் இணைப்பிலிருந்து மனிதர்கள் உருவானார்கள். அந்தப் பெண் பிரஜாபதியை விரும்பாமல் ஓடிப் போய் பசுவின் உருவத்தை எடுத்தாள். அப்போது பிரஜாபதி காளையாக மாறி அவளுடன் இணைந்தான். பசுக்கள் இவ்விதமாகவே படைக்கப்பட்டன. அந்தப் பெண் பிறகு அனைத்து விதமான விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் உருவங்களை எடுத்தாள்; பிரஜாபதியும் அதற்கேற்ப மாறிப்போனான். ஜீவராசிகள் அனைத்தும் இவ்விதமாகவே தோன்றின. இப்போது கேள்வி என்னவென்றால்: இந்தப் பிரஜாபதியும் இயேசுவும் ஒருவரா? நிச்சயமாக இல்லை!

முள்முடி

இயேசுவுக்கு முள்முடியைச்சூட்டிப் பரியாசம் செய்தார்கள். பிரஜாபதிக்கும் அத்தகைய அனுபவம் உள்ளதென்று நிரூபிக்க முடிந்தால், பிரஜாபதியே கிறிஸ்து என்று நிரூபிப்பது எளிதாகும். எனவே பிரஜாபதியை போற்றும் பக்தர்கள் அத்தகையதைக் கண்டபிடிக்கத் தங்கள் அளவில் முயன்றனர்; ஆனால் தோல்வியடைந்தனர். இறுதியில் பலியிடும் குதிரையைத் தூணில் கட்டுவதற்குப் பயன்படும் வைக்கோல் கயிற்றைக் கொண்டு அவர்கள் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

சதபத பிராமணத்தின்படி, பலியிடும் குதிரையை வைக்கோல் மற்றும் சமைத்த சாதத்தால் செய்யப்பட்ட கயிற்றால் தூணில் கட்ட வேண்டும். உண்மையில் இயேசு அணிந்திருந்த முள் முடிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் பிசாசு அறிவீனர்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்தினான். குதிரைதான் பிரஜாபதி என்றால், அந்தப் பிரஜாபதி ஒருபோதும் இயேசுவாக இருக்க முடியாது; ஏனெனில் குதிரையின் மற்ற பண்புகள் இயேசுவிடம் காணப்படவில்லை. உதாரணமாக, பலியிடுவதற்கு முன் குதிரைக்குக் குளிப்பாட்டுவார்கள். அப்படிச் செய்யும்போது செத்த நாயை அதன் கால்களுக்கு இடையே கடந்து போகச் செய்வார்கள். அதுமட்டுமல்லாமல், குதிரையைக் கொல்லும் முறையும் மிகவும் வித்தியாசமானது. குதிரையை மூச்சுத் திணறடித்துக் கொன்றுவிடுவார்கள். இந்தப் பண்புகள் இயேசுவோடு ஒத்துப்போகவில்லை!

இது ஒருபுறமிருக்க, மிகவும் அருவருப்பான வேறு சில விஷயங்களும் உள்ளன. குதிரையைக் கொன்ற பிறகு அதன் உடலைத் துணியால் மூடுவார்கள். குதிரையைப் பலியாகச் செலுத்தும் நபரின் மனைவி, குதிரையுடன் புணருவதற்காகக் குதிரையின் சடலத்தோடு படுப்பாள். இது சூரிய உதயம் வரை தொடரும். இதற்கிடையில் கணவனும் மனைவியும் ஆபாசமாகப் பேசிக்கொண்டு ஒருவரையொருவர் திட்டிக்கொள்வார்கள். இப்போது மீண்டும் ஒருமுறை முக்கியமான கேள்வி: இந்தக் குதிரை நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழலாக இருக்கிறதா? இல்லவே இல்லை.

நிராகரிப்பு

உண்மையில் இதில் பெரிதாகக் கண்டுகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏதுமில்லை. ஒரு நபரையோ அல்லது விலங்கையோ நிராகரிக்காமல் பலியிட முடியாது. இயேசு எல்லாவற்றையும் வெறுத்து, தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். விலங்குகளின் விஷயத்தில், மக்கள் முதலில் அதை நிராகரித்து, பின்னரே அதைப் பலியாகச் செலுத்துவார்கள். யாராயினும் இதைத்தான் செய்ய வேண்டும்; ஏனெனில் இதைத் தவிர்த்து வேறு வழியில் யாரும் செய்ய முடியாது. ஆனால் பிரஜாபதி பக்தர்கள் இதை ஒரு விசித்திரமான விஷயமாக மாற்றியுள்ளனர். ஏனெனில் “ஐதரேய பிராமணத்தில்” அதன் உறவினர்களின் சம்மதத்துடன் ஒரு பசு பலியாகச் செலுத்தப்படுகிறது. இங்கே தென்படும் சிக்கல்கள் இவைதான்:

  1. அது பிரஜாபதி அல்ல, ஒரு பசு.
  2. பசு நிராகரிக்கப்படவில்லை, ஆனால் அதன் உறவினர்களின் அனுமதியுடனேயே பலியிடப்படுகிறது.
  3. ஐதரேய பிராமணத்தின்படி பசு மனதில் விருப்பமில்லாமலும், பயத்துடனும் இருக்கிறது. ஆனால் இயேசு விருப்பமில்லாமலும் இல்லை, பயப்படவும் இல்லை.
  4. பசுவை மூச்சுத் திணறடித்துக் கொன்றுவிடுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், பசு எந்த விதத்திலும் இயேசு கிறிஸ்து அல்ல.

மௌனமாக வேதனை அனுபவித்தார்

இயேசு தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார்; எல்லாவற்றையும் மனப்பூர்வமாகவே அனுபவித்தார். எனவே பிரஜாபதியும் அத்தகைய ஒன்றைச் செய்தார் என்று காட்ட வேண்டும். வெகுவாகத் தேடிய பிறகு, ரிக் வேதம் 5.46-ல் அத்தகைய ஒன்றைக் கண்டபிடித்தான். "ஒரு குதிரையைப் போல மனப்பூர்வமாகவே என்னை நான் கம்பத்தில் கட்டிக்கொண்டேன். நான் விடுதலை பெறுவதையோ அல்லது திரும்பிப் போவதையோ விரும்பவில்லை". பிரஜாபதி எப்போதாவது அப்படிப் பேசியிருந்தால் நல்லதுதான். ஆனால் அவன் ஒருபோதும் அப்படிப் பேசவில்லை. அந்தச் சூழலில் அந்த வார்த்தைகள் நமக்கு எதைத் தெரிவிக்கின்றன? ரிக் வேதம் 5.46-க்கும் பிரஜாபதிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்தச் சூக்தத்தை எழுதியவர் 'பிரதிகாத்ரா' என்ற நபர்; அந்த வார்த்தைகள் அவர் தன்னைக் குறித்துச் சொன்னவை. ஒரு குதிரையைப் போலக் கம்பத்தில் கட்டப்பட்டவன் பிரதிகாத்ராதானே ஒழிய, பிரஜாபதி அல்ல. ஆனால் வேதங்களைப் பார்த்திராத (&) படிக்காத மக்களைப் பிசாசு ஏமாற்றுகிறான். அநேக மக்களால் வேதங்களைப் படித்து உண்மையைச் சரிபார்க்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதுமட்டுமல்லாமல், பிரஜாபதி பக்தர்கள் மீதமுள்ள சூக்தங்களை விவரித்து அதை மேற்கோள் காட்டும் துணிவை ஒருபோதும் கொள்ள மாட்டார்கள். ஏன் தெரியுமா? சில பிரஜாபதி பக்தர்கள் வேதங்களில் ஒரே தேவன் உண்டென்றும், அது பிரஜாபதிதான் என்றும் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். நம்மை இரட்சிக்கக் கூடியவர் பிரஜாபதி ஒருவரே என்று வேதங்கள் கூறுவதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மீதமுள்ள சூக்தங்களை யாராவது படித்தால், இந்த வாதம் பொய்யென்று தெரிந்துவிடும். பிரஜாபதியை வேண்டியது போலவே, பாதுகாப்புக்காகவும், மோட்சத்திற்காகவும் மற்றத் தெய்வங்களான அக்னி, இந்திரன், வருணன், மித்ரா, விஷ்ணு, மருத்துக்கள், ருத்ரன், புகா மற்றும் அந்தத் தேவர்களின் மனைவிகள் ஆகியவர்களை தெய்வங்களாக எண்ணி மன்றாடும் சூக்தங்கள் வேதங்களில் நிறைய உள்ளன. மற்றத் தெய்வங்களை மகிமைப்படுத்துவதற்காகவே எழுதப்பட்ட இந்தச் சூக்தங்களுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சிலுவைக்குப் பொருந்தாத கம்பம்

வேதங்களில் சிலுவையைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. ஆனால் பிரஜாபதியைச் சிலுவையில் அறைய, வேதங்களுக்குள் ஏதோ ஒரு விதத்தில் சிலுவையைக் கொண்டு வருவது அவசியம். அதனால்தான் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது; இறுதியில் ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பலிபீர் ஜீவனை ஒரு கம்பத்தில் கட்டுவார்கள். உண்மையில் இதில் வழக்கத்திற்கு மாறாக ஒன்றும் இல்லை. விலங்கை அதாவது பலியிடும் மிருகத்தை எதிலாவது கட்டாவிட்டால் அது ஓடிப்போய்விடும் அல்லவா! இந்நாட்களிலும் கசாப்புக்காரர்கள் விலங்குகளைக் கொல்ல இந்த முறையையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில பிரஜாபதி பக்தர்கள் இவ்விஷயத்தை ஒரு விசேஷமான அம்சமாகச் சித்திரிக்கிறார்கள்; ஏனெனில் இவ்விதமாக அறிவீனர்களை எளிதாக ஏமாற்ற வாய்ப்புள்ளது. வேதங்களில் 'யூப' என்ற கம்பம் தெய்வமாகக் கருதப்பட்ட போதிலும் (ரிக் வேதம் 3:8), பிரஜாபதி பக்தர்கள் இதைக் குறித்து மட்டும் ஒருபோதும் பேசுவதில்லை.

இந்த விலங்கு கம்பத்தில் கட்டப்பட்டது; ஆனால் இயேசு ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டார். தெய்வமான அந்தக் கம்பத்திற்கும் சிலுவைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இரத்தம்

இரத்தம் சிந்தாமல் பலி செலுத்துவது சாத்தியமில்லை. பலி செலுத்தும்போது இரத்தம் சிந்துவது ஆச்சரியமான விஷயம் ஏதுமில்லை. தன் சொந்த மகளுடனே தகாத உறவு கொண்டதற்காகத் தேவர்களால் கொல்லப்பட்ட பிரஜாபதியின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கலாம்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேதங்களில் அது குறிப்பிடப்படவில்லை. எனவே எங்காவது ஓரிடத்தில் கொஞ்சம் இரத்தத்தைக் கண்டுபிடிப்பது அவசியம் என்று இந்தத் தவறான போதகர்கள் கருதினார்கள். இறுதியில் பிருஹதாரண்யக உபநிஷத்தில் இரத்தம் கிடைத்தது. இங்கே மனிதனை ஒரு மரத்தோடு ஒப்பிட்டுள்ளனர். மனிதன் தலையில் முடி உள்ளது, அதற்குப் பதிலாக மரத்திற்கு இலைகள் உள்ளன என்றும், மரத்திற்கும் மனிதனுக்கும் தோல் உண்டு என்றும், மரத்தின் சாறு மனிதனின் இரத்தம் போன்றது என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மரத்தை வெட்டினால், காயம்பட்ட நபரிடமிருந்து இரத்தம் வடிவது போல மரத்திலிருந்து சாறு வடியும். இங்கே பிரஜாபதி பற்றிய குறிப்பு இல்லை. பலி செலுத்துதல் பற்றிய குறிப்பும் இல்லை. ஆனால் சில வஞ்சகர்களின் இவ்வார்த்தைகளில் சிலவற்றை, எளிதில் ஏமாறக்கூடியவர்களை வஞ்சிக்கப் பயன்படுத்துகிறான்.

எலும்புகள்

இயேசுவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை. எனவே பிரஜாபதியின் எலும்புகளை எந்த விதத்திலும் முறிக்காமல் இருப்பது நல்லது. எனவே கோணல் புத்தியுள்ள பிசாசு ‘ஐதரேய பிராமணத்தில்’ ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தான். அதன் உறவினர்களின் சம்மதத்துடன் பலியிடப்பட்ட ஒரு பசு உள்ளது. இந்தப் பசுவின் உடலிலிருந்து 26 எலும்புகளை எடுத்து ஒரு வரிசையில் வைத்தார்கள். எலும்புகள் முறிந்தனவோ இல்லையோ நமக்குத் தெரியாது. அதுமட்டுமல்லாமல் மற்ற எலும்புகளுக்கு என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆனால் இவர்களை பொறுத்தவரை இவையெல்லாம் அனாவசியம். பிரஜாபதிக்கு எலும்புகள் முறியவில்லை என்ற வாதத்தைக் கிளப்பிவிட்டான்.

உயிர்த்தெழுதல்

இந்துக்களின் கூற்றுப்படி இந்த வாழ்க்கை மரணத்துடன் முடிந்துவிடுவதில்லை. ஆத்துமா ஒரு வகையான விலங்காகவோ அல்லது மனிதனாகவோ இவ்வுலகில் மறுபிறவி எடுக்கும். இந்துக்களின் இந்த நம்பிக்கையைச் சில பிரஜாபதி பக்தர்கள் சந்தர்ப்பத்திற்குப் பொருந்தாத வகையில் பிரஜாபதிக்குப் பொருத்தி, அவர் பலியாகச் செலுத்தப்பட்ட பிறகு மீண்டும் உயிர் பெற்றார் என்று கூறுகிறார்கள். ‘பிருஹதாரண்யக உபநிஷத்தின்’ ஒரு பகுதியைக்கூடச் சந்தர்ப்பத்திற்கு மாறாக வியாக்கியானம் செய்துள்ளனர் (பொருள் எண் 6-ஐப் பார்க்கவும்). மரத்தை வெட்டினால் மீண்டும் துளிர்க்கும், பிழைக்கும்.

ஆனால் ஒரு மனிதன் வெட்டப்படும்போது அவன் எப்படி மீண்டும் பிழைப்பான்? அவன் மீண்டும் பிழைப்பான், எப்படியென்றால் அவனது ஆத்துமா மற்றொரு பிறவி எடுத்து மீண்டும் அவதரிக்கும். இங்கே பிரஜாபதியைக் குறித்தோ அல்லது எந்தப் பலி செலுத்துதலைக் குறித்தோ சொல்லப்படவில்லை. மனிதன் வெறுமனே மரத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளான். அநேகருக்கு வேதங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது என்பதால், சாத்தானும் அவனது கூட்டாளிகளும் பொய்களைப் பரப்புவதும், வேதங்களில் உள்ள சில பகுதிகளைச் சந்தர்ப்பத்திற்கு மாறாகப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவதுமாக இருக்கிறார்கள்.

மனிதனின் மாம்சம்

இந்தப் பொய் கர்த்தருடைய பந்தியை (திருவிருந்து) திரித்துக் கூறுவதாக உள்ளது. ஆரியர்களின் கூற்றுப்படி, அவர்களின் தேவர்கள் தங்கள் உணவிற்காக ரிஷிகள் செலுத்தும் பலிப்பொருட்களைச் சார்ந்திருந்தனர். அதனால்தான் பிரஜாபதி பலியாகச் செலுத்தப்பட்ட பிறகு அவனையும்கூட அவர்கள் தின்றுவிட்டனர். இது கர்த்தருடைய பந்திக்கு மாறுபட்டது. வேதங்களில் பிரஜாபதியைத் தெய்வங்கள் கொன்று தின்றார்கள்; ஆனால் கிறிஸ்தவத்தில் இயேசுவின் மரணத்திற்கு அடையாளமான அப்பத்தையும் திராட்சரசத்தையும் புசிப்பது அவரைக் கொன்ற யூதர்கள் அல்ல, அவரை விசுவாசித்த கிறிஸ்தவர்களே.

அதுமட்டுமல்ல, பலியிட்ட விலங்குகளின் மாம்சத்தை உண்பதில் விசேஷம் ஏதுமில்லை; ஏனெனில் இந்நாட்களிலும் அத்தகைய வழக்கம் உலகெங்கும் பல இடங்களில் உள்ளது. எனவே பிரஜாபதியின் மாம்சத்தைத் தெய்வங்கள் உண்பது என்பது பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயமே அல்ல.

பிரஜாபதியின் வஸ்திரம்

பிரஜாபதி பக்தர்களில் சிலர், பிரஜாபதியின் வஸ்திரங்களை நான்கு பூசாரிகள் பகிர்ந்துகொண்டார்கள் என்று பொய் சொல்கிறார்கள். அத்தகைய சம்பவம் எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று மட்டும் யாரும் சொல்வதில்லை. சில பிரஜாபதி குழுக்களும் கூட இவ்விஷயத்தை மறுக்கின்றன. ஆயினும், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பெந்தெகோஸ்தே பிரிவினர் தங்கள் ஞாயிறு பள்ளி பாடப்புத்தகங்களில் பிரஜாபதியைக் குறித்தும், அவரிடம் உள்ள பல பண்புகளைக் குறித்தும் எழுதியுள்ளனர்! இது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்று.

கிழியாத வஸ்திரம்

பிரஜாபதியின் வஸ்திரம் கிழியவில்லை என்ற மற்றொரு பொய்யும் உள்ளது. இந்து நூல்களில் அப்படிப்பட்ட குறிப்பு எதுவும் இல்லை. பசுவின் தோல் (வகை எண் 3 & 7 பார்க்கவும்) கிழியாமல் உரித்தெடுக்கப்பட்டது, எனவே பிரஜாபதியின் வஸ்திரம் கிழியவில்லை என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் பசுவின் தோல் கிழிந்ததா இல்லையா என்பது எந்த நூல்களிலும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை பசுவின் தோல் கிழியாமல் இருந்திருந்தாலும், பிரஜாபதியின் வஸ்திரம் கிழியவில்லை என்பதற்கு அது சான்று ஆகாது. ஏனெனில் தோல் என்பது வஸ்திரம் அல்ல; மேலும் இங்கே பிரஜாபதி இல்லை, பசு மட்டுமே உள்ளது.

சிலுவையில் தொங்கவிடப்பட்டாரா?

பிரஜாபதியின் கைகளும் கால்களும் தூணில் ஆணிகளால் அடிக்கப்பட்டது போலப் பிரஜாபதி பக்தர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்தது போல் பேசுகிறார்கள்; ஆனால் வேதங்களில் அந்தச் சம்பவம் எங்கே உள்ளது என்று யாராலும் காட்ட முடியாது. ஆனால் அது அவர்களுக்குப் பெரிய விஷயம் ஏதுமில்லை. பிரஜாபதியின் கைகளும் கால்களும் சிலுவையில் அடிக்கப்பட்டன என்றும், இந்தக் காரணத்தினால் பிரஜாபதியே கிறிஸ்து என்றும் அவர்கள் இப்பொழுதும் அறிவிக்கிறார்கள் மற்றும் போதிக்கிறார்கள்.

சோமபானம்

ஆரியர்கள் ஒரு வகையான பழச்சாற்றை ஒருவித போதைப் பானமாகத் தயாரித்துக் குடித்து வந்தனர். தேவர்களின் அரசனுக்குப் படைக்கப்படும் சோமபானம் ‘சிறந்த சோமபானம்’ என்று புகழப்பட்டது. ஆனால் பிரஜாபதி சோமபானம் குடித்ததாகவோ, அத்தகைய பானம் வழங்கிய விலங்கு குறித்தோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பிரஜாபதி பலியாகச் செலுத்தப்பட்டபோது அவருக்குச் சோமபானத்தைப் புகட்டினார்கள் என்ற பொய்யைப் பரப்பப் பிசாசு தன் ஊழியர்களைப் பயன்படுத்துகிறான். இந்தியாவில் உள்ள ஒரு பெரிய பெந்தெகோஸ்தே சபையினர், தங்கள் ஞாயிறு பள்ளியில் போதிப்பதற்காக, ஞாயிறு பள்ளிப் பாடப்புத்தகத்தில் இந்தப் பொய்யை (மற்றவற்றுடன் சேர்த்து) பிரசுரித்துள்ளனர்.

கன்னிகையின் குமாரனா?

பிரஜாபதியின் ஊழியர்களில் சிலர், வேதங்களில் காணப்படும் தங்கள் ஆண்டவராகிய அந்தப் பிரஜாபதி ஒரு கன்னிகையின் குமாரன் என்று போதிக்கிறார்கள். இவ்விஷயம் வேதங்களிலோ அல்லது மற்ற இந்து நூல்களிலோ எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று யாராலும் சொல்ல முடியாது. உண்மையில், வேதங்களில் இது போன்றது எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இல்லாத ஸ்லோகங்கள் (மந்திரங்கள்)

இந்து வேதங்களில் காணப்படும் ஸ்லோகங்களுக்குக் கொடுத்த தவறான விளக்கங்களுடன், அநேக பிரஜாபதி பக்தர்கள் புதிய ஸ்லோகங்களை உருவாக்கி அவற்றை வேத மந்திரங்களாகப் பரப்பி வருகின்றனர். உதாரணமாக, கன்னிகையின் குமாரனைத் துதிப்பதோடு தொடங்கும் பிரபலமான ஸ்லோகம் ('ஓம் ஸ்ரீ கன்னியாக சுதாய நமஹ') எந்த வேதத்திலும் காணப்படவில்லை. வட இந்தியப் பிராமணர்கள் குளிக்கும்போது ஜெபிப்பதாகச் சொல்லப்படும் மந்திரம் ('பாபோஹம் பாபகர்மாஹம் பாபாத்மா பாபசம்பவம்') என்பதும் பச்சைப் பொய். அப்படியே நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான 'சர்வபாப பரிஹாரோ ரக்தப்ரோக்ஷணம் அவசியம் தத் ரக்தம் பரமாத்மேன புண்ணியதான பலியாகம்' என்ற ஸ்லோகம் பாண்ட்ய மகாபிராமணத்திலோ அல்லது எங்கேயோ உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தகைய பொய்களையும், கற்பனை ஸ்லோகங்களையும் பரவஸ்து சூர்யநாராயணா, பண்டித சி.எச். பிரான்சிஸ் போன்ற பெயர் பெற்ற "பண்டிதர்கள்" பிரபலப்படுத்தினர். இந்தக் காரணத்தினால் மூல நூல்களை ஆராய்ந்து பார்க்காமல் அநேகர் அவை உண்மையாகவே உள்ளன என்று நம்பி ஏமாறுகின்றனர். இத்தகைய பொய் பிரச்சாரங்கள் உண்மையில் சுவாமி விவேகானந்தரிடமிருந்தே தொடங்கின. யோவான் 1:1-ல் உள்ள "வார்த்தை" புருஷ சூக்தத்தில் உள்ள ஓங்கார பிரணவ நாதமே என்று அவர் தன் எழுத்துக்களில் அறிவித்தார். அதுமுதற்கொண்டு நம் ஆட்களும் உள்ளதையும் இல்லாததையும் கலந்து கிறிஸ்துவுக்கும் வேதங்களுக்கும் முடிச்சுப்போடும் வேலையில் இறங்கினர். இந்தக் கட்டுரையில் உள்ள ஆதாரங்களின் வெளிச்சத்தில், பிரஜாபதி என்ற உபபிரிவு ஒரு பொய், அது பொய்களின் மேல் நிறுவப்பட்டுள்ளது, பொய்யர்களால் பரப்பப்படுகிறது.

முடிவுரை

தேவனுடைய சபை இயேசு கிறிஸ்துவுக்கே நியமிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்குள்ள எளிமையை இழந்த உடனேயே நாம் அசுத்தமானவர்கள் ஆகிவிடுகிறோம் (2கொரிந்தியர் 11:2,3). ஓரளவிற்கு இயேசுவைப் போல் இருப்பதாலேயே, நாம் வேறொருவரை இயேசுவாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து வேதங்களில் உள்ள பிரஜாபதி பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இயேசு கிறிஸ்து அல்ல என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். பிரஜாபதி இயேசுவைப் போல் இருந்தாலும் அவர் வேறொரு கிறிஸ்துவே; ஆகையால் நாம் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்விஷயத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: "ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்" (1தீமோத்தேயு 4:1-2). இந்தத் தீர்க்கதரிசனம் நம் கண்முன்னே பிரஜாபதி வழிபாட்டின் வடிவில் நிறைவேறி வருகிறது. இந்நாட்களில் சபைத் தலைவர்கள் இந்தக் கிறிஸ்துவின் விரோத ஆவியை அடையாளம் காணத் தவறிவிட்டனர். 'இவாஞ்சலிக்கல்ஸ்' (சுவிசேஷப் பிரிவினர்) என்று அழைக்கப்படுவோர் கூட, இந்த ஆபத்தான உபதேசத்தைச் சேர்ந்த தலைவர்களை அர்ப்பணிப்புள்ள மிஷனரிகளாக எல்லா இடங்களிலும் அனுமதிக்கின்றனர்.

"நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்தியிலும் பேய்களுடைய போஜனபந்தியிலும் பங்குகொள்ளக்கூடாதே." (1கொரிந்தியர் 10:21).

கிறிஸ்துவின் விரோத ஆவியை அடையாளம் கண்டு, அவனது ஊழியர்கள் உட்பட அவனை வெளியேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

குறிப்பு: பிரஜாபதி இயேசு கிறிஸ்து அல்ல, அத்தகைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை கொண்ட நபர்களுடன் பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒப்பிடுவது மிகவும் கேவலமானது என்று இவ்வளவு விரிவாக விளக்கிய பிறகும், சில பிசாசுக்குரியவர்கள், "நாம் அவருக்குள் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்... நாம் அவருடைய சந்ததியார்" என்று அத்தேனே பட்டணத்தில் பவுல் கிரேக்கத் தெய்வமான ஜூயஸ் (Zeus) குறித்து எபிமெனிடிஸ், அரேட்டஸ் ஆகியோர் கூறிய வார்த்தைகளைக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, ஜூயஸும் ஒழுக்கங்கெட்ட வரலாறு கொண்டவனே, அப்படியிருக்க பவுல் அவனைப் பற்றி எழுதப்பட்ட வார்த்தைகளை பரிசுத்த வேதம் தேவனுக்கு ஏன் உரித்தாக்கினார்? எனவே அவர்களின் வரலாறுகள் நமக்குத் தேவையில்லை, ஒற்றுமைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வாதிடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் இங்கே இரண்டு விஷயங்கள் உள்ளன; முதலாவது - பிரஜாபதிக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே ஒரு ஒற்றுமைகூட இல்லை, அவையெல்லாம் வெறும் கற்பனைக் கதைகளே. அவற்றை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இரண்டாவது - பவுல் சுவிசேஷப் பிரசங்கத்தின் ஒரு பகுதியாக ஜூயஸ் விஷயமாய் எழுதப்பட்ட வார்த்தைகளைக் குறிப்பிடவில்லை. ஏன் அவர் அதை குறிப்பிட்டார் என்பதை ஏற்கனவே நாங்கள் விரிவாக எழுதியுள்ளோம். அதேபோல வேதாகமத்தில் தவிர வேறெங்கும் தேவனுடைய வார்த்தை எழுதப்படவில்லை என்பதையும் வேதாகம வசன ஆதாரங்களுடன் நிரூபித்து மற்றொரு கட்டுரையும் எழுதியுள்ளோம். அதை வாசிக்கவும்.

அத்தேனே பட்டணத்தில் பவுல் செய்த போதனை, சுவிசேஷத்திற்குப் பிறமத நூல்கள் அவசியம் என்ற வாதத்திற்கு ஆதாரமா?

பிறமத நூல்களில் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டிருப்பது உண்மையா?