சோதோம் நகரத்தின் விவாதம்
படிப்புகள்: 11
Print
ஆசிரியர்: G. பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 35 நிமிடங்கள்

சோதோமின் பாவம் குறித்து வேதம் சொல்வது, சோதோமின் பாவத்தை ஆதரிக்கும் வசனங்களாகச் சித்தரிக்கப்பட்ட வேதபகுதிகள், சோதோமிய பாவத்தை எதிர்கொள்வதில் கிறிஸ்தவத்தின் பங்களிப்பு, தொடர்ந்து வாசிக்க...

 

சோதோமிய அக்கிரமம் குறித்த கிறிஸ்தவ நிலைப்பாடு மற்றும் இந்தத் தீமையை அகற்ற அதன் பங்களிப்பும்

சுருக்கமான முகவுரை: சோதோமிய அக்கிரமம் என்பது சோதோமின் (பண்டைய பாலஸ்தீனத்தில் இருந்த ஒரு நகரம்) மக்களால் செய்யப்பட்டு வந்த அருவருப்பான செயலைக் குறிக்கிறது. அவர்கள் செய்த மோசமான பொல்லாப்புகளின் விளைவாக, முற்பிதாவாகிய ஆபிரகாமின் காலத்தில் இந்தப் பட்டணத்தை சர்வவல்ல தேவன் அழித்துப் போட்டார். ஒரே பாலினத்தவர் தம்மில் உடல் உறவு கொள்ளுதல் மற்றும் மனிதர்கள் மிருகங்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்ளுதல் ஆகியன இந்தப் பாவத்தின் செயல்பாடுகள் ஆகும். ஆகவே, இதுபோன்ற பாவத்திற்கு 'சோதோமிய அக்கிரமம்' என்று பெயர் வழங்கப்படுகிறது. ஏனெனில், இந்தப் பட்டணம் மேற்கண்ட பாவத்திற்குப் பெயர் போயிருந்ததாலும், இதன் விளைவாக நித்திய இலச்சைக்கும் தீர்ப்புக்கும் உட்பட்ட முன்னோடியாகவும் இருந்ததால் இப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் பொருளில் பேசுவது நமக்கு மிகப்பெரிய சங்கடத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், இதுபோன்ற தவறான பாவங்களை நடப்பிக்கிறவர்களைக் கடிந்துகொள்வது ஆபாசம் இல்லை. அந்தப் பாவம் எவ்வளவு கொடியதாய் இருப்பினும் அதைப் பற்றிப் பேச வேண்டும். சோதோமிய அக்கிரமம் இன்று உலகில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த அவமானகரமான செயல் எங்கும் அறியப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே, இதை இன்னும் அதிகம் விளக்க அவசியமில்லை. ஆகவே, நமது விவாதத்தின் நோக்கம் என்ன என்பதை விளக்கும்படியாகச் சில விவரங்களை அலசுவோம்.

நோக்கம்: நாம் துவக்கத்திலேயே சோதோமிய அக்கிரமத்தைக் குறித்த கிறிஸ்தவ பார்வையின் நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை நிரூபிக்க விரும்புகிறோம். இதற்குக் காரணம், இன்றைய நவீன உலகில் ஏற்பட்ட இரண்டு துரதிஷ்டவசமான முன்னேற்றங்களே.

முதலாவதாக, மேற்கத்திய வாழ்வுமுறை கிறிஸ்தவ கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு இல்லை என்றாலும், அதுபோன்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. சிலர் இந்தக் கருத்து தவறானது என்று ஒத்துக்கொள்ளவும் விரும்பாத மனநிலையில் இருக்கின்றனர். அதற்குக் காரணம் சுவிசேஷத்தின் பாதையின் மேல் அவர்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத தப்பெண்ணம்தான். பல மேற்கத்திய நாடுகள் சோதோமிய பாவத்திற்குள் அமிழ்ந்து, தன் பாலினத்தவரின் திருமணத்தைச் சட்டமாக்கியிருப்பதால், பல கிறிஸ்தவத்திற்கு எதிரான சக்திகள் இந்த ஒழுக்கச் சீர்கேடுக்கு வேதாகமம் காரணம் என்பது போல விமர்சிக்கிறார்கள். இந்த நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்கிற அடையாளத்துடன் இருப்பதால், அவர்கள் அதீத கற்பனையுடன் விமர்சிக்கிறார்கள். அகமது தீதத் என்கிற இஸ்லாமிய எழுத்தாளர், "கிறிஸ்தவத்தினால் தான் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன" என்று குற்றம் சாட்டுகிறார் (வேதாகமம் தேவனுடைய வார்த்தையா? பக்கம் 47). ஓரினச் சேர்க்கையைச் சட்டமாக்கிய தேசங்களின் மீதான குற்றத்தை மறுக்க எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்றாலும், இச்செயல்கள் தேவ நாமத்தைத் தூஷிக்கக் காரணமாக அமைந்திருந்தாலும் கூட, இந்த செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிற நாடுகள் கிறிஸ்தவ நாடுகளாக இருப்பதாலேயே செய்கிறார்கள் என்று பேசுவது நியாயமாகாது. ஏனென்றால், இதுபோன்ற செயல்களை வேதாகமம் எவ்வித சமரசமும் இன்றி கண்டித்திருக்கிறது (இதைக் குறித்துப் பின்னர் அதிகம் பேசலாம்).

இரண்டாவதாக, இந்த விஷயத்தில் கிறிஸ்தவ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம், உலகத்திலிருந்து வராமல் திருச்சபைக்குள் இருந்து வரும் ஒரு சவாலாகும். ஏனெனில், நம்மில் இருந்தும் விசுவாசிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும்படி, மாறுபாடான விஷயங்களைப் பேசும் மனிதர்கள் எழுந்திருக்கிறார்கள்; மேலும் பலர் தங்கள் பொல்லாத வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அதனால்தான் சத்திய வழி அவதூறாகப் பேசப்படுகிறது. சமீபத்தில், திருச்சபைக்குள் ஒரு அவமானகரமான மற்றும் ஆபத்தான கூட்டம் எழுந்துளளது. அவர்கள் தங்கள் சபைகளில் ஓரினச்சேர்க்கை செய்து, ஓரினச்சேர்க்கை திருமணங்களைச் செய்வது மட்டுமல்லாமல், வேதாகமத்தின் சில பகுதிகளைத் திரித்து, பரிசுத்த வேதாகமத்தில் இருந்தே ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும் துன்மார்க்கத்தைச் செய்கிறார்கள்.

இந்தக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளபடி, அவர்களால் மேற்கோள் காட்டப்பட்ட வேதப்பகுதிகளுக்கு நியாயமான விளக்க முறையைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் யூகங்களைப் பொய்யாக்குவது, ஒரு பாரபட்சமற்ற வேதாகம மாணவருக்குப் பெரிய வேலையல்ல. இங்கே காட்டப்பட்டுள்ள இரண்டு காரணிகளும் ஓரினச்சேர்க்கை குற்றம் குறித்த கிறிஸ்தவ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது போதுமானது. இந்த இரண்டு சவால்களையும் கீழ்க்கண்ட வகையில் எதிர்கொள்ள விரும்புகிறோம்:

  1. முதலில் வேதாகம நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறுவதன் மூலம், முதல் சிக்கலுக்குப் போதுமான வகையில் பதிலளிக்க விரும்புகிறோம்.

  2. அடுத்ததாக, வேதத்தில் ஓரினச்சேர்க்கையைக் குறிப்பதாகத் தவறாகச் சித்தரிக்கப்படும் இரண்டு நிகழ்வுகளை ஆய்வுக்கு உட்படுத்துவோம். இது கிறிஸ்தவத்திற்கு எதிரான அனைத்துக் கூட்டு அவதூறுகளையும் சீர்குலைத்து, அதன் மூலம் இரண்டாவது புதைகுழியைத் தகர்க்க உதவும்.

  3. இறுதியாக, ஓரினச்சேர்க்கை பாவத்தைக் கையாள்வதில் கிறிஸ்தவம் உலகிற்கு அளித்த பங்களிப்புகள் குறித்துச் சில கருத்துக்களை முன்வைப்போம்.

1. சோதோமின் அக்கிரமம் குறித்த வேதாகமத்தின் கருத்து:

எந்த ஒரு காரியத்தைக் குறித்தும் கிறிஸ்தவ நிலைப்பாடைச் சொல்ல விரும்பும் அனைவரும் வேதத்தை வாசித்து, அதிலிருந்து கருத்தைச் சொல்ல வேண்டும். மற்றொருவர் செய்வதை வேதத்திற்குள் திணித்துப் பார்க்கக் கூடாது. கிறிஸ்தவம் என்பது வேதபுத்தகத்தை மையமாகக் கொண்ட மார்க்கம். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பொறுத்தவரை, வேதாகமம் என்ன சொல்கிறதோ அதுவே இறுதியானது. கிறிஸ்தவம் அதைப் பின்பற்றுகிறவர்களால் காலத்திற்கேற்ற பரிணாம வளர்ச்சி அடைகிற மதம் அல்ல. ஆகவே, மேற்கத்திய கலாச்சாரமோ அல்லது வேறெந்த கலாச்சாரமோ கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கான பிரதிநிதியாக இருக்க முடியாது. அது தன்னைக் கிறிஸ்தவம்தான் எனக் காட்டிக்கொண்டாலும், வேதம் காண்பிக்கும் கட்டளைகளுக்கு முழுமையான மற்றும் சமரசமற்ற கீழ்ப்படிதல் இல்லாத எந்தக் கலாச்சாரமும் கிறிஸ்தவம் அல்ல. கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை உருவாக்கவில்லை, கிறிஸ்தவம்தான் கிறிஸ்தவர்களை உருவாக்குகிறது. ஆகவே, சோதோமிய இடறலைக் குறித்தாகிலும் அல்லது மற்ற எந்தக் காரியமாய் இருந்தாலும், வேதாகமம்தான் முழுமையான அதிகாரமுடையது. வேதாகமத்தில் பின்வரும் வேதப்பகுதிகளிலிருந்து, சோதோமிய அக்கிரமத்திற்கு எதிரான தெளிவான மற்றும் குழப்பத்திற்கு இடமில்லாத எச்சரிப்புகளைப் பார்க்க முடிகிறது.

  1. தேவன் இந்தப் பாவச்செயலின் துவக்கத்தில் இருந்தே, தன் சித்தத்தை மிகத் தெளிவாகவும் உரத்த சத்தமுடனும் சோதோம் மற்றும் கொமோரா பட்டணங்கள் மேல் கொண்டுவந்த நியாயத்தீர்ப்பின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனிதக் குடியிருப்புகளில் முதலாவதாக இந்தப் பட்டணங்கள்தான் இவ்வகை அருவருப்புகளால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொண்டவை (ஆதியாகமம் 19; 2 பேதுரு 2:6). அக்கினி, கந்தகத்தின் மழை அந்தப் பட்டணங்களின் மேல் பொழிந்து அவைகள் மறுபடியும் குடியிருப்புக்குத் தகாதவைகளாக மாற்றப்பட்டன. இதிலும் அதிகம் என்னவென்றால், இந்தத் தண்டனை அவர்களுக்கான தற்காலிகத் தண்டனைதான்; இது அவர்களுக்கு முடிவிற்கு வரவில்லை, அவர்கள் தங்களுடைய நித்திய ஆக்கினையை அடைவதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் (மத்தேயு 10:15). வேதாகமத்தின் தேவன் ஒரே சிந்தையாயிருக்கிறார்; அவரைப் போலவே அவருடைய தரமும் மாற்றமில்லாதது. சோதோமின் பாவம் மீதான வெறுப்பு அந்த நேரத்தில் அவருக்கு வந்த ஒன்றல்ல, அவர் நித்தியமாகவே இப்பாவத்தை வெறுக்கிறார். அவரிடம் எந்த ஒரு மாறுபாடும் வேற்றுமையின் நிழலும் இல்லை (யாக்கோபு 1:17). ஆகவே, வேதாகமத்தின் ஆண்டவர் இன்னமும் சோதோமிய அக்கிரமத்தை வெறுப்பது மட்டுமல்லாமல், அதைச் செய்பவர்கள் மீதான கொடுமையான தீர்ப்பைக் குறித்தும் எச்சரிக்கிறார்.

  2. சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் தரப்பட்டபோது, முதலாவதாக மனிதனுக்காக எழுத்தில் தரப்பட்ட கட்டளையில், சோதோமிய அக்கிரமம் செய்கிறவர்கள் மேல் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கர்த்தராகிய தேவன் வெளிப்படையாக அறிவித்தார் (யாத்திராகமம் 22:19, லேவியராகமம் 18:22-30, லேவியராகமம் 20:13-16, உபாகமம் 23:17, உபாகமம் 27:21).

  3. சோதோமிய அக்கிரமம் மரண தண்டனைக்கு உரிய குற்றமாய் இருந்தாலும், இஸ்ரவேல் தேசத்தில் இந்த அக்கிரமத்தைச் செய்கிறவர்கள் இருந்தார்கள் (1 இராஜாக்கள் 14:24). ஒவ்வொரு உண்மையான எழுப்புதலின் போதும், தேவனுக்குப் பயந்த அரசர்கள் இஸ்ரவேலைப் பரிசுத்தப்படுத்தும் போதெல்லாம், இவ்வகைப் பாவம் செய்கிறவர்களைப் புறம்பாக்குவதில் கவனம் செலுத்தினர் (1 இராஜாக்கள் 15:12, 1 இராஜாக்கள் 22:46, 2 இராஜாக்கள் 23:7). மற்ற காரியங்களுக்கு மத்தியில் அவர்கள் தேவனுக்கு முன்பாக உத்தமமாய் வாழ்ந்தார்கள் என்று வேதம் சாட்சி பகிர்கிறது (1 இராஜாக்கள் 15:11, 1 இராஜாக்கள் 22:43, 2 இராஜாக்கள் 22:2).

  4. தேவன் எப்போதும் தமது பரிசுத்தத்தில் மாற்றமில்லாதவராக இருப்பதால் புதிய ஏற்பாடிலும் இதே தரம் தொடர்கிறது. தேவனுடைய கோபாக்கினை தெய்வ பக்தியில்லாத காரியங்களின் மேல் வெளிப்படுகிறது என்கிற எச்சரிக்கை ரோமர் 1:18–32-ல் காணமுடிகிறது. இந்தக் குறிப்புகளில் சோதோமியப் பாவங்களான ஓரினச் சேர்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது (வச. 26–28). இந்த அக்கிரமங்களை நடப்பிக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க இயலாது என்றும் புதிய ஏற்பாடு எச்சரிக்கிறது (1 கொரிந்தியர் 6:9). இந்த அக்கிரமத்திற்கு நித்தியமான தண்டனை உண்டு என்கிற குறிப்பையும் நாம் காணமுடிகிறது. அவர்கள் பரலோகம் செல்ல இயலாது. தீட்டான எதுவும், அருவருப்பை நடப்பிக்கிற யாவரும் அதில் பிரவேசிக்க முடியாது (வெளிப்படுத்தல் 21:27).

  5. சோதோமிய அக்கிரமங்கள் மீதான வேதாகமத்தின் கண்டனங்களை விளங்கிக்கொள்ளும்படியாக, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அப்படியே அதன் பக்கங்களில் இருந்து வாசிப்பது நல்லது. இங்கே சில உதாரண வசனங்கள் அப்படியே தரப்பட்டுள்ளன:

    • அ. பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது (லேவியராகமம் 18:22).

    • ஆ. ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல, ஆணோடே சம்யோகம் பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக (லேவியராகமம் 20:13).

    • இ. ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலை செய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள். ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலை செய்யப்பட வேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக (லேவியராகமம் 20:15–16).

    • ஈ. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது... இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்... இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள் (ரோமர் 1:18, 26-29, 32).

    • உ. "அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்... தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை" (1 கொரிந்தியர் 6:9–10).

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேத வசனங்களின் அடிப்படையில், சோதோமிய அக்கிரமம் குறித்த வேதாகமப் புரிதல் என்ன என்பதை மிகத் தெளிவாக நிலைநிறுத்தியிருக்கிறோம். இந்த உலகத்தில் உள்ள ஒரே தீர்க்கதரிசன சத்தம் இது மட்டுமே. சோதோமியப் பாவத்தில் வாழ்கிறவர்கள் தேவனுடைய கோபாக்கினையில் பங்கடைய வேண்டியதாயிருக்கும் என்று இது தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது. கிறிஸ்தவ நிலைப்பாட்டில் இவ்வளவு தெளிவு இருந்தும், கிறிஸ்தவத்திற்கு எதிரான மனநிலையில் உள்ள சிலர், பிடித்து அழிக்கப்பட வேண்டிய கொடிய மிருகங்களைப்போல, தாங்கள் அறியாதவைகளைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த அக்கிரமத்தில் அழிந்துபோவார்கள்.

2. சோதோமியச் செயல்களை அங்கீகரிப்பதாகத் தவறாகச் சித்தரிக்கப்படும் வேதப்பகுதிகள்:

இந்த இரண்டாவது தடங்களுக்குத் தீர்வு காணும்படியாக, வேதாகமத்தில் இருந்து சில சோதோமிய விரும்பிகளால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிற வேதப்பகுதிகளை நாம் இங்கே குறிப்பிடுவோம். தங்கள் செயல்களை நியாயப்படுத்த நினைக்கிற இவர்கள், தேவன் சொல்லாதவைகளை அவருடைய வாய்க்குள் திணிக்கிறார்கள். வேதம் காண்பிக்கிற தெளிவான எச்சரிப்புகளின் வழியாக, தேவன் அவர்களுடைய அழிவுக்குரிய செயல்களை வெறுக்கிறதை நாம் விளங்கக் கூறுவோம்.

1. தாவீது மற்றும் யோனத்தான்: "என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" (2 சாமுவேல் 1:26).

இந்த வேதப்பகுதி, தாவீது தன் நண்பன் யோனத்தான் துரதிஷ்டவசமாக மரித்ததைக் குறித்துப் பாடிய புலம்பலின் ஒரு பகுதியிலிருந்து வருகிறது. தாவீது இந்தப் பகுதியில் யோனத்தானின் அன்பு ஒரு பெண்ணின் அன்பைப் போல இருந்ததாக விளக்குவதை, சில கிறிஸ்தவர்கள் தங்கள் சோதோமிய அக்கிரமத்தை நியாயப்படுத்தும் விதத்தில், தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே ஓரினச் சேர்க்கை இருந்துவந்தது என்று தவறாகச் சித்தரிக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் இவர்களுடைய தவறுக்குத் தப்பும் வாய்ப்பு இருப்பதாக நம்பி, பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பரிசுத்த வசனத்தைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள். இது மாதிரியான குற்றச்சாட்டில் ஒருவேளை உண்மை இருக்குமானால் (அது கூடாதே), அவ்வாறான வாதம் மிக மோசமான வாதம்தான். தாவீது விபச்சாரம் செய்ததால் விபச்சாரம் பாவம் அல்ல; பொய் சொல்வது குற்றமில்லை, ஏனெனில் ஆபிரகாம் பொய் சொன்னார்; மோசே தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதால் நாமும் தாராளமாகத் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழலாம் என்று வாதம் செய்வதற்குச் சமம்தான் மேலே சொல்லப்படும் வாதமும். தங்களுடைய தவறினிமித்தம் அவர்களின் மனசாட்சி வாதிக்கக்கூடாது என்பதற்கான மூடலாக வேதாகமத்தின் பரிசுத்தவான்களுடைய தவறுகளை உபயோகிக்கிறார்கள். இது எப்படி இருந்தாலும், தாவீது – யோனத்தான் நட்பில் உள்ள தூய்மையை நாம் நிரூபிக்க முயல வேண்டிய தேவை இருப்பதுடன், சோதோமியப் பாவத்தில் இருப்பவர்களின் பாதங்களின் கீழ் ஒளிந்திருக்கும் மாய வலையை வெளிக்கொண்டு வருவதும் நம் தேவையாக இருக்கிறது.

2. பரிசுத்த முத்தம்: “பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான். அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள். தாவீது மிகவும் அழுதான்” (1 சாமுவேல் 20:41).

இந்த வசனமும் தாவீது மற்றும் யோனத்தான் குறித்துப் பேசுகிறது. சோதோமியப் பிரியர்களுக்கு முக்கியமாக இங்கே தெரியும் ஒரே காரியம் அவர்கள் முத்தம் செய்தார்கள் என்கிற விஷயம். இந்தச் சிந்தனையை எதிர்கொள்ளச் சிறந்த வழி, முத்தமும் ஓரினச் சேர்க்கையும் ஒன்றுதானா என்று கேட்பதாகும். பாலுறவைத் தவிர்த்து முத்தத்திற்கு வேறு எங்கும் இடமில்லையா? வேதாகமம் பல்வேறு வகையிலான முத்தங்களைக் குறித்தும் எழுதி வைத்துள்ளது. தீர்க்கதரிசன முத்தம் (1 சாமுவேல் 10:1), பிதாவின் முத்தம் (2 சாமுவேல் 14:33), இரட்சிப்பிற்கான முத்தம் (சங்கீதம் 2:12), இறையியல் முத்தம் (சங்கீதம் 85:10), பாராட்டின் முத்தம் (நீதிமொழிகள் 24:26), பரிசுத்த முத்தம் (1 கொரிந்தியர் 16:20) என இன்னும் பல முத்தங்களை வேதத்தில் காணமுடிகிறது. இதற்கு எதிர்மறையான முத்தங்களையும் நாம் வேதத்தில் காணலாம். விக்கிரக ஆராதனைக்குரிய முத்தம் (1 இராஜாக்கள் 19:18), மோக இச்சையின் முத்தம் (நீதிமொழிகள் 7:13), வஞ்சக முத்தம் (நீதிமொழிகள் 27:6) ஆகியவைகளைக் குறித்த எச்சரிப்பும் தரப்பட்டுள்ளது. முந்தைய உதாரணத்தில் கண்டதுபோல, தாவீது மற்றும் யோனத்தானின் உறவு நிரூபணமான ஒன்றுதான். இவர்களுடைய உறவு சகோதர உறவு; இவர்களது முத்தமும் பரிசுத்தமான முத்தம்தான். அவர்கள் பிரிவதற்கு முன்னர் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு வாழ்த்தினர். ஆனால் காமாலை உடையவன் காண்பது அனைத்தும் மஞ்சளாகத் தெரிவதுபோல, சோதோமியன் ஒவ்வொரு செயலிலும் சோதோமியத்தைக் காண்கிறான்.

3. ரூத் மற்றும் நகோமி: “அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்” (ரூத் 1:16-17).

இந்த வார்த்தைகள் நகோமியிடம் ரூத்தால் சொல்லப்பட்டது. ரூத் நகோமியின் மருமகள். அவளுடைய கணவன் மரித்தபோது, ரூத் தன் தாயார் வீட்டுக்குத் திரும்பி மறுமணம் செய்யும்படி நகோமி அறிவுறுத்துகிறாள். ஆனால் ரூத்தோ, இந்த ஆலோசனைக்குச் செவிகொடுப்பதைவிட, தன் மாமியாருடன் செல்வதில் உறுதியாக இருந்தாள். இந்த உரையாடலில் இருந்து, ரூத்தும் நகோமியும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று சோதோமிய அக்கிரமக்காரர்கள் சொல்கிறார்கள். இது சோதோமியருக்கு மட்டுமே அப்படித் தோன்றும். ஆனால் ஏனையவர்கள் மிகத் தெளிவாக, ரூத்தின் நம்பிக்கை நகோமியின் தேவனைச் சார்ந்துகொண்டது என்பதைப் புரிந்துகொள்வார்கள். ஏனெனில் நகோமியிடம், “உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று அறிக்கை செய்தாள். இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பிரமாணத்திற்குக் கட்டுப்படாமல், அவரை ஒருவரும் தனக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. மற்ற பாவங்களைப் போல, தேவன் சோதோமிய அக்கிரமத்தையும் தடை செய்வதுடன், சபிக்கவும் செய்கிறார். ஆகவே, இந்த வசனப் பகுதியிலும் சோதோமியர் தங்களுடைய அவலமான நடவடிக்கையை நியாயப்படுத்தும் முனைப்புடன், தூய்மையான உறவைக் காமவிகாரத்துக்கு ஏதுவாகத் திருப்புகிறார்கள்.

இதுபோன்று இன்னமும் சோதோமியர்கள் திரித்துக் கூறும் வேறு வசனப் பகுதிகளும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தேவனுடைய வசனத்தை எவ்வளவு அபத்தமாகக் கையாளுகிறார்கள் என்பதற்கு மேலே சொன்ன சான்றுகளே போதுமானது. இந்தப் பகுதியின் இறுதியில், நாம் இந்த முக்கிய சத்தியத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஆதியில் மனிதனைப் படைத்தவர் அவனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவை திருமண பந்தத்தில் கட்டமைத்தார். தேவனுடைய ஏற்பாட்டிற்கு எதிராக இந்த உறவு செயல்படும்போதெல்லாம் தேவன் அதை வன்மையாக எதிர்க்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை நினைவில் வையுங்கள். தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையேதான் பாலுறவு இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்; ஆதாமுக்கும், ஏதோமுக்கும் இடையே இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


3. சோதோமிய அக்கிரமத்தைக் கையாளுவதில் கிறிஸ்தவத்தின் சமூகப் பங்களிப்பு

சோதோமியப் பாவம் குறித்த கிறிஸ்தவ நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய நாம், இந்தத் தீமையை அகற்றுவதில், கிறிஸ்தவ வேதாகமம் சமுதாயத்திற்குத் தந்திருக்கும் தனித்துவமான பங்களிப்பு என்ன என்பதை இங்கே காணவிருக்கிறோம். இதன் தொடர்பாக நாம் மூன்று கருத்துக்களை முன்வைக்கப் போகிறோம்.

  1. சோதோமிய வாழ்வுமுறை பாவம் என்பதை விளக்கும் ஒரே புத்தகம் வேதாகமம்.

  2. சோதோமிய அக்கிரமத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றியுள்ள ஒரே புத்தகம் வேதாகமம்.

  3. சோதோமிய செயல்பாடுகளில் இருந்து சீர்திருத்தம் தரும் ஒரே புத்தகம் வேதாகமம்.

1. சோதோமிய வாழ்வுமுறை பாவம் என்பதை விளக்கும் ஒரே புத்தகம் வேதாகமம்

தேவன் ஒவ்வொருக்கும் நன்மை தீமையைக் குறித்த அறிவைத் தந்திருக்கிறார். தேவன் தம்முடைய பிரமாணத்தை இருதயத்தில் எழுதி வைத்துள்ளார் என்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 2:14-15). இந்த மனசாட்சியின் வழியாக ஒருவர் தன் செயலை விளக்க அல்லது குற்றப்படுத்த முடிகிறது. சிலர் இதை இயற்கையின் வெளிச்சம் என்றும், சிலர் இதை இயற்கை நியதி என்றும் சொல்கிறார்கள். ஆனால் நன்மை தீமையைப் பகுத்துணர தேவன் தந்திருக்கிற வெளிச்சம் என்று வேதம் சொல்கிறது. இருப்பினும், இந்த தெய்வீக ஒளி ஒவ்வொரு மனிதனையும் சாக்குப்போக்கு இல்லாமல் விட்டுவிட்டு, அறியாமையின் வேண்டுகோள் இல்லாமல் விட்டுவிட்டாலும், மனசாட்சியை மழுங்கடித்து, அதன் சாட்சியத்தை மௌனமாக்க முடியும் என்பதைக் கவனிக்க வேண்டும். மனசாட்சியில் சூடுண்ட பொய்யராய் இருப்பது சாத்தியம் (1 தீமோத்தேயு 4:2), மேலும் ஒருவரின் சொந்த அக்கிரமத்தால் மனசாட்சியைக் கூட கறைபடுத்துவது சாத்தியமாகும் (தீத்து 1:15). மனிதன் இயல்பாகவே பாவமுள்ளவனாக இருப்பதால், எப்போதும் தனது மனசாட்சியை மட்டுப்படுத்தி அல்லது கெடுத்து, தன் சொந்த இச்சைகளுக்கு ஏற்ப வாழ்வான். ஆகையால், தேவன் தனது இரக்கத்தால், தான் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தின் தரங்களை எழுத்தில் தெரிவிக்க இறங்கினார். இதனால் மனிதனின் அக்கிரமம் கொண்டு இயற்கையின் ஒளியை மறைத்தாலும், எழுதப்பட்ட சட்டம் ஒரு இருண்ட இடத்தில் பிரகாசித்து, தெய்வீக நீதியின் அளவீடுகளை நிலைநிறுத்தும். இந்த எழுதப்பட்ட வெளிப்பாடுதான் வேதாகமம்.

இந்தக் கட்டுரையின் இரண்டாவது பகுதியில், இன்றைய உலகில் உள்ள ஒரே தீர்க்கதரிசனக் குரல் வேதாகமம் மட்டுமே என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். இது இந்த அக்கிரமத்தைச் செய்பவர்களுக்கு, வரவிருக்கும் தேவ கோபத்தைப் பற்றித் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்தக் கூற்றை இங்கே நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம், தேவனை எரிச்சலடையச் செய்யும் பாவம், இந்த அருவருப்பைப் பின்பற்றுபவர்கள் மீது அவருடைய கோபம் இறங்கி வருகிறது என்ற அறிவின் ஒரே ஆதாரம் வேதாகமம் மட்டுமே. இந்த அறிவின் ஒரே ஆதாரம் பைபிள் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பின்வரும் குறிப்புகள் இந்தக் கூற்றைப் போதுமான தெளிவுடன் புரிந்துகொள்ள உதவும்.

மேலே எடுத்தாளப்பட்ட இந்த வாதங்களின் அடிப்படையில், சோதோமியப் பாவம் தேவனுக்கு எதிரான குற்றம் என்பதை விளக்குவதற்கு உலகத்திற்கு இருக்கும் ஒரே அறிவின் ஆதாரம் வேதாகமம் மட்டுமே என்று தைரியமாகச் சொல்ல முடியும்.

2. சோதோமிய அக்கிரமத்துக்கு எதிரான ஒரே பிரமாண ஆதாரம் வேதாகமமே

முந்தைய வாதம் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கிறது. ஏனென்றால், சரி தவறு பற்றிய அறிவு இல்லாத இடத்தில், தவறு என்பதைத் தடைசெய்யும் ஒரு சட்டம் இருக்க முடியாது.

வரலாற்றின் பக்கங்களை ஆராய்ந்தால், நற்செய்தியால் பாதிக்கப்படாத பண்டைய நாகரிகங்களின் சட்டங்களை நோக்கினால், சோதோமியப் பாவத்துக்கோ அல்லது அதன் உறுதியான செயல்பாடுகளுக்கு எதிரான எந்தச் சட்டமும் வெளிப்படையாக இல்லை என்பது தெளிவு.

3. சோதோமிய அக்கிரமத்தைச் செய்பவர்களைத் திருத்தும் ஒரே ஆதாரம் வேதாகமம் மட்டுமே:

சீர்திருத்தம் என்று நாம் இங்கு கூறுவது, அந்த வார்த்தையின் பொதுவான பயன்பாட்டை விட மிகப் பெரியது. சீர்திருத்தம் என்பது ஒருவருடைய நடத்தையின் வெளிப்புற சுத்திகரிப்பு என்று நாம் பொருள் தரவில்லை; மாறாக மனித இதயத்தின் மாற்றத்தையே குறிக்கிறோம். இங்கே அவசியமானது மரத்தை வெட்டுவது என்பதல்ல, மாறாக அதை வேரோடு பிடுங்குவது. நமது மருத்துவ விஞ்ஞானிகள் பலர், சோதோமிய அக்கிரமத்தின் அறிவியல் காரணத்தைக் கண்டறியும் ஒரு பயனற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ்விதமான அனைத்து அனுமானங்களையும் நம்பத்தகுந்த வகையில் முறியடிக்கும் அறிவியல் மற்றும் தர்க்கரீதியான வாதங்கள் உள்ளன என்பதை, திரு. ஜார்ஜ் ஆண்டனி பால் இதே விஷயத்தில் எழுதிய கட்டுரையில் நிரூபணம் செய்கிறார். வேதாகம வரலாறு முழுவதும், சோதோமிய அக்கிரமம் மற்றும் பிற அசுத்தங்களிலிருந்து மனிதர்களை விடுவித்ததற்கான ஒரு நிலையான முன் உதாரணம் உள்ளது.

மனிதனுடைய இருதயம்தான் அனைத்துத் தீமைக்கும் ஆதாரமாக இருக்கிறது என்று வேதாகமம் போதிக்கிறது. ஆகையால் இதற்கான சிகிச்சை இருதயத்தில் செய்யப்பட வேண்டியது, மரபணுவிலோ அல்லது மனதிலோ அல்ல. ஆண்டவர் இதைக் குறித்துச் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்: “மனிதனுடைய இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தைகளும், விபச்சாரங்களும், வேசித்தனமும்... உண்டாகிறது” (மாற்கு 7:21) என்கிறார். இந்த வேசித்தனத்தின் ஒரு பாகமாக இருக்கும் சோதோமிய அக்கிரமங்களும் இருதயத்தில் இருந்துதான் துவங்குகிறது என்று இயேசு அறிவிக்கிறார். பைபிள் கற்பிக்கிறது: ஒரு மனிதனின் விருப்பங்கள் இயல்பிலேயே தேவனுடைய பிரமாணத்திற்கு எதிரானவை (ரோமர் 8:7). எனவே அது ஆண்டவருக்குச் சத்துருவாக அழைக்கப்படுகிறது.

எந்தக் கட்டத்தில் ஒரு மனிதன் அக்கிரமம் நிறைந்த பாவியாகிறான்? அவன் பாவியாகவே பிறந்திருக்கிறானா அல்லது அதைக் கற்றுக்கொண்டானா? குழந்தைகள் பாவம் அறியாதவர்களாகப் பிறக்கிறார்களா? 'இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்’ (சங்கீதம் 51:5). ‘துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்’ (சங்கீதம் 58:3). தேவனுக்கு அந்நியராகும் நிலை கருவில் இருந்தே தொடங்கிவிடுகிறது. நாம் பாவம் செய்வதால் பாவிகள் அல்ல, நாம் பாவிகளாய் இருப்பதால் தான் நாம் பாவம் செய்கிறோம் (ஜிம் மெக்லார்ட்டி).

ஒரு ஓரினச்சேர்க்கையாளர் தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிந்து செல்வதை உறுதி செய்துகொள்ள முடியும், ஏனெனில் அவ்வாறு அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் (1 கொரிந்தியர் 6:9). ஆனால், சோதோமிய அக்கிரமம் பாவம் என்பதைக் கண்டிக்கும் புத்தகமாகவும், அதன் கற்பனைகள் பாவத்திற்கு எதிரான எச்சரிக்கையின் மதிப்பீடாக மட்டும் இருக்குமானால், இந்தப் பாவத்தால் சிக்கியவர்கள் திருந்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். இந்தக் காரியத்தைக் குறித்த எல்லா சந்தேகங்களையும் இயேசு நீக்கிவிட்டார். ஏனெனில் அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை... நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்றார் (மத்தேயு 9:12–13). இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமே இதுதான்: இந்த வைத்தியருக்கு உங்களை அறிமுகம் செய்து, அவரால் உங்களை இந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளியே கொண்டுவர முடியும்.

அவர் சுயநீதி உள்ளவர்களை அழைக்க வரவில்லை; அவரை உண்மையாய் நாடித் தேடுகிறவர்களுக்கு இரங்கி மன்னிப்பையும் விடுதலையையும் தர ஆண்டவர் விரும்புகிறார். “என்னிடத்தில் வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளேன்” என்கிறார் இயேசு (யோவான் 6:37). நொருங்குண்டு, நறுங்குண்ட ஆத்துமாவை அவர் அசட்டை செய்யமாட்டார் (சங்கீதம் 34:18, ஏசாயா 66:2). ஓரினச் சேர்க்கை பாவம் என்று அறிவித்தவர், அதன் மீதான அவருடைய கடுமையான தண்டனையைச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், தங்கள் பாவத்தை வெறுத்து அவரிடம் மனந்திரும்புகிறவர்களுக்கு மன்னிப்பையும் வாக்குப்பண்ணியிருக்கிறார்.

ஓரினச்சேர்க்கை என்னும் பாவ வியாதியைக் குணப்படுத்த, மனிதனுடைய இருதயத்திற்குத்தான் முதலில் சிகிச்சை தர வேண்டியது அவசியம். இந்த தெய்வீக மருத்துவர் தன்னிடம் பாவ உணர்வுடன் பணிந்தவராய் வருகிற எவருக்கும் மன்னிப்பைத் தருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” (எசேக்கியேல் 36:26).

ஆண்புணர்ச்சிக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்று சொல்லப்பட்ட அதே வேதப்பகுதியின் அடுத்த வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் கிருபையாய்த் தொடர்ந்து தரும் செய்தியைப் பாருங்கள்: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (1 கொரிந்தியர் 6:11). இந்த வசனம் எழுதப்பட்டதன் காரணம் மனந்திரும்புகிற பாவிக்கு நம்பிக்கையின் உறுதியைத் தருவதுதான்.

கிறிஸ்தவ மார்க்கம் ஒன்றுமட்டுமே ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களைச் சரிப்படுத்த இருக்கும் ஒரே ஆதாரம். இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எந்தச் சக்தியாலும் உங்கள் கடந்தகாலக் குற்ற உணர்ச்சியிலிருந்து உங்களை மீட்கவும் சுகமாக்கவும் முடியாது. கிறிஸ்துவுக்கு மாறாக நீங்கள் உபயோகப்படுத்திய அனைத்தும் அவருடைய வருகையின்போது, உங்களிலிருந்து உரிந்து போடப்படும். இயேசு கிறிஸ்து இல்லாமல், உங்களுடைய பாவத்திற்கான மன்னிப்பும் மாற்றமும் இல்லை. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12).