பாமாலைகள்

கோட்டையைக் காத்து நில்

(Hold the fort)

பாடல்: P.P. பிளிஸ்

பாடல் பிறந்த கதை

 1. தோழரே, நல் வீரரே, வான் நோக்கிப் பாருமே
போர் உதவி கிட்டிச் சேரும் வெற்றிச் சின்னமே
 
     கோட்டையைத் துணிந்து காத்து
     பின்னிடாமல் நில்;
     நின் கிருபையால் நிற்போமேன்று
     இயேசுவுக்குச் சொல்.
 
2. சாத்தானின் எதிரிப் படை முன்னேறிடுதே
நம் பலவான் வீரர் மாள, சோர்ந்து போனோமே
                                                          - கோட்டையை
 
3. வெற்றிக் கொடி பறந்தாட எக்காள தொனி
கேட்டு இயேசு நாமத்தாலே ஜெயம் பெறுவோம்
                                                          - கோட்டையை
 
4. நீண்ட கடும் போரானாலும் வெற்றி நமதே !
தளபதி இயேசு வாரார் ! ஆர்ப்பரிப்போமே !
                                                         - கோட்டையை

1864-ம் வருடம் அக்டோபர் மாதம் அமெரிக்க உள்நாட்டுப் போர் கடுமையாக  நடந்து கொண்டிருந்தது.  ஜெனரல் ஹீட் தந்திரமாகப் போரிட்டு, ஜெனரல் ஷெர்மனின் பின்னணியத்தை வளைத்துக் கொண்டார்.  வடக்குப் பகுதிக்குச் செல்லும் ரயில் பாதையை அழித்துவிடக் கட்டளையிட்டார்.  அல்டூனா கணவாய் என்ற இடத்தில், ஜெனரல் கோர்ஸ்  தன்னுடைய 1500 போர் வீரர்களுடன், 15 லட்சம் உணவுப்பங்குகள் அடங்கிய பெரிய கிட்டங்கியைக் காத்து நின்றார்.  அவருடைய முகாமையும், அதினருகே இருந்த போர் முனைகளையும் காக்க, ஜெனரல் ஷெர்மன் தன் படைகளுடன் விரைந்தார்.

ஆனால், அதற்குள்ளாக, ஜெனரல் ஹீட்,  அவ்விடங்களைக் கைப்பற்றுமாறு  தனது ஜெனரல் பிரெஞ்சை, 6000 போர்வீரர்களுடன் அனுப்பிவிட்டார்.  எனவே, ஜெனரல்  கோர்ஸின்  முகாம் சுற்றி வளைக்கப்பட்டது.  ஜெனரல் கோர்ஸ்  தன்னிடம் சரணடைய வேண்டுமென, ஜெனரல்  பிரெஞ்சு கட்டளையிட்டார்.  ஜெனரல் கோர்ஸ் மறுக்கவே, மிகக்கடுமையான யுத்தம் ஆரம்பமானது.  ஜெனரல் கோர்ஸின் படை தாக்குப்பிடிக்க முடியாமல், பின்வாங்கி, ஒரு குன்றின் மேலுள்ள கோட்டைக்குள் புகுந்தது.

நிலைமை மோசமாகிக்கொண்டே போனதால், கோட்டைக்குள்ளிருந்தவர்களின் நம்பிக்கை தளர்ந்து போனது.  தோல்வி கண்ணெதிரே தோன்றிய அந்நிலையில், 20 மைல்களுக்கப்பால் இருந்த மலையில், ஒரு வெள்ளைக் கொடி தெரிவதை ஒரு அதிகாரி கண்டார்.  உடனடியாக, இரு மலை உச்சிகளுக்கும் கம்பியில்லாத் தந்தித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.  அங்கிருந்து ஜெனரல் ஷெர்மன், ''கோட்டையை உன் கைவசம் காத்து நில்.  இதோ, நான் வருகிறேன்'' என்று செய்தி அனுப்பினார்.

இச்செய்தி தந்த உற்சாகத்தினாலும், நம்பிக்கையினாலும், ஜெனரல் கோர்ஸின் படை வீரர்கள் அடுத்த 3 மணி நேரங்கள் தொடர்ந்து தைரியமாய்ப் போரிட்டு, கோட்டையை வீரத்துடன் பாதுகாத்தனர்.  ஜெனரல் ஷெர்மனின் படை வந்து சேரவே, ஜெனரல் பிரெஞ்சு தன் படைகளுடன் பின் வாங்கினார்.  இவ்வாறு அந்நாளில் ஜெனரல் கோர்ஸின் படைக்கு சிறப்பான ஒரு வெற்றி கிடைத்தது.

ஆறு வருடங்களுக்குப் பின், இல்லினாய்ஸ்  மாநிலத்திலுள்ள ராக்போர்ட்டில் நடந்த ஒய்.எம்.சி.ஏ. கூட்டத்தில், இப்போரில் பங்கேற்ற மேஜர் விட்டில், வெளிப்படுத்தல் 2:25-ன் அடிப்படையில் செய்தி கொடுக்கும்போது, தனது போர் அனுபவமாக இச்சம்பவத்தைக் கூறினார்.  அக்கூட்டத்தில், பிரபல பாடலாசிரியரான பிலிப் ட. பிளிஸ் கலந்து கொண்டு, இச்செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  ஜெனரல் ஷெர்மன் அனுப்பிய '' கோட்டையைக் காத்து நில்.  இதோ, நான் வருகிறேன்'' என்ற நம்பிக்கையூட்டும் செய்தி, அவர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.  அன்றே, இரவு நித்திரைக்கு முன், இப்பாடலை அவர் எழுதி, அதற்கான ராகத்தையும் அமைத்து முடித்தார்.

மறுநாள் சிக்காகோவில் நடந்த ஒய்.எம்.சி.ஏ. கூட்டத்தில், மேஜர் விட்டில் செய்தி அளிக்குமுன், பிளிஸ் மேடையேறி, இப்பாடலின் பல்லவியை கரும்பலகையில் எழுதிவிட்டுப் பாடினார். கூட்டத்தினர் அனைவரும், இப்பல்லவியை அவரோடு சேர்ந்து, உற்சாகமாய்ப் பாடினார்கள்.  பின்னர், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் நடைபெற்ற, மூடி பிரசங்கியாரின் நற்செய்திக் கூட்டங்களில், பிரபல பாடகர் சாங்கி இப்பாடலைப் பாடினார்.  1874-ம் ஆண்டு, பிரிட்டிஷ் தீவுகளில் மூடியின் கூட்டங்கள் முடிவடைந்தபோது, ஷாப்டெஸ்பரி பிரபு சாங்கியைப் பார்த்து ''இப்பாடலை நீங்கள் அறிமுகம் செய்தது, எங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக விளங்குகிறது'' என்று கூறினார்.

இப்பாடலை எழுதிய பிளிஸ், இதனைப் பெரிய சாதனையாகக் கருதவில்லை.  ஆனால், அவரது அகால மரணத்திற்குப் பின், பென்சில்வேனியாவிலுள்ள ரோமில் கட்டப்பட்ட அவரது நினைவுச் சின்னத்தில், P.P. பிளிஸ் -'கோட்டையைக் காத்து நில்' என்ற பாடலின் ஆசிரியர்'' என்று சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.