திருவிவிலியக் கதைகள்

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட பிறகு, தான் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து அநேகருக்கு காட்சி அளித்தார். இயேசு உயிர்த்தெழுந்து விண்ணுலகிற்கு சென்ற பின், இஸ்ரவேல் நாட்டில் வாழ்ந்த அநேக யூதர்களும் மற்ற நாடுகளில் வாழ்ந்த யூதர் அல்லாத மக்களும் இயேசுவின் போதனைகளைக் கேட்டும் அற்புதங்களைக் கண்டும் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். இப்படி அநேகர் கிறிஸ்தவர்களாக மாறுவதை யூத மதத் தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. புதிதாக கிறிஸ்தவர்களாக மாறியவர்களை பயமுறுத்தியும் துன்புறுத்தியும், புதிதாக எவரும் கிறிஸ்தவர்களாக மாறுவதை தடுத்து வந்தனர்.

யூத மத தலைவர்களில் சவுல் என்னும் பெயர் உள்ள ஒருவன் இருந்தான். அவன் அக்காலத்தில் உலகப்புகழ் பெற்ற தர்சு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவனும், யூத மத திருச்சட்டத்தில் தேறினவனுமாய் இருந்தான். அவன் யூதர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவனும் யூத மத சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தான். யூதர்கள் இயேசுவை நம்பி கிறிஸ்தவர்களாக மாறுவதை கடுமையாக எதிர்த்தான். அதனால் புதிதாக இயேசுவை நம்பி கிறிஸ்தவர்களாக மாறியவர்களை கைது செய்து யூதர்களின் தலைமையகமான எருசலேமிற்கு கொண்டு வரும்படி மத தலைவர்களிடமிருந்து அதிகாரத்தை பெற்றான்.

ஒரு நாள் அவன் தமஸ்கு என்ற ஊருக்கு கிறிஸ்தவர்களை கைது செய்யும்படி சென்று கொண்டிருந்தான். திடீரென்று அவன் சுற்றிலும் மிகப்பெரிய வெளிச்சம் உண்டாயிற்று. மேலும் வானத்திலிருந்து, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார்? என்றான். அதற்குக் இயேசு: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; என் மக்களை துன்புறுத்துவது உனக்கு நல்லதல்ல என்றார். உடனடியாக அவன், ஆண்டவரே நான் என்ன செய்ய நீர் விரும்புகிறீர் என்று கேட்டான். நீ எழுந்து நேர் தெரு என்ற தெருவுக்கு செல்; நீ செய்ய வேண்டியது அங்கே உனக்கு சொல்லப்படும் என்று இயேசு சொன்னார். கீழே விழுந்த சவுல் எழுந்தவுடன் அவனால் பார்க்க முடியவில்லை அவனுடைய கண் பார்வை இழந்திருந்தது. ஆகவே சவுலுடன் வந்த மனிதர் அவனை கை பிடித்து நேர் தெருவுக்கு அழைத்து சென்றனர்.

சவுலை தன்னுடைய சீடனாக மாற்றப் போவதை முன்னரே அறிந்திருந்த இயேசு, ஏற்கனவே கிறிஸ்தவராக இருந்த அனனியா என்பவரிடம் சவுலைப் பற்றி கூறியிருந்தார். சவுலை தன்னுடைய திருப்பணிக்கென்று இயேசு தேர்ந்தெடுத்திருப்பதையும் அனனியாவிடம் சொன்னார். அனனியாவோ பயம் அடைந்தவனாய், ஆண்டவரே, இந்த சவுல் தானே கிறிஸ்தவர்களான எங்களையெல்லாம் துன்பப்படுத்தி கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான். இவனை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது என்று கேட்டான். இயேசுவோ, இவன் அநேகருக்கு என்னைப் பற்றி சொல்லி என்னுடைய திருப்பணியை செய்வதற்கென்று நான் தெரிந்துக்கொண்ட மனிதனாயிருக்கிறான் என்று அனனியாவிற்கு சொன்னார். மேலும் தற்போது சவுல் இருக்கும் இடத்தை அனனியாவிற்கு தெரிவித்து, “அனனியா என்னும் பேருள்ள ஒருவன் தன்னிடத்தில் வரவும், தன் கண் குணமடைந்து பார்வையடையும்படி தனக்காக அவன் வேண்டுதல் செய்யும்படியும் அவன் தரிசனங்கண்டான்” என்று இயேசு சொன்னார்.

இயேசு சொன்னபடியே அனனியா சவுலிடம் சென்று அவன் கண் குணமாகி பார்வை அடையும்படி அவனுக்காக வேண்டுதல் செய்தான். உடனடியாக அவன் கண்களில் இருந்து மீன் செதில்கள் போன்றவை கீழே விழுந்தது; முன்பு போல் பார்க்கும்படி தெளிவான பார்வையை பெற்றான். தனக்கு நேரிட்ட இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் மூலம் இயேசுவே கடவுள் என்பதை சவுல் அறிந்து கொண்டார். உடனடியாக அந்த இயேசுவை நம்பிய சவுல் தன்னுடைய பெயரை பவுல் என்று மாற்றிக் கொண்டார். ஒரு காலத்தில் தான் கடுமையாக எதிர்த்த இயேசுவை நம்பி அவருடைய சீடனாகவே மாறினார் பவுல்! அது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ திருமறையில் உள்ள 66 நூல்களில் கிட்டத்தட்ட 13 நூல்களை இந்த பவுலே எழுதி இருக்கிறார். தன்னை வெறுத்த மனிதனையும் தன்னுடைய சீடன் ஆக்கினார் இயேசு! ஒருவர் இயேசுவை நம்பும் பொழுது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழைய தீய குணங்கள் கழிந்து புதிய நற்குணங்கள் புகுந்தன என்று திருமறை கூறுகிறது!

இந்த கட்டுரை இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பிதழுக்காக எழுதப்பட்டு, ஆகஸ்ட் 10, 2023 அன்று வெளிவந்துள்ளது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.