திருவிவிலியக் கதைகள்

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது அநேக அற்புதங்களை ஜனங்கள் மத்தியில் செய்து, கொடிய வியாதி உள்ள மக்களையும் குணமாக்கினார். மேலும் அவரின் உபதேசம் அக்காலத்தில் இருந்த யூத மத தலைவர்களின் உபதேசத்தை விட மிகவும் வித்தியாசமானதாய் இருந்ததால் அநேக மக்கள் இயேசுவின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். அதனாலேயே இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து ஒரு மக்கள் கூட்டம் சென்று கொண்டே இருந்தது. இப்படியாக தொடர்ச்சியாக மக்களை சந்தித்துக் கொண்டே இருந்த இயேசு, ஒரு முறை ஓய்வு எடுக்கும்படி ஊரை விட்டு வெளியே பாலைவனமான ஒரு இடத்திற்கு சென்றார். இதை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருடைய போதனைகளை கேட்கும் படி அந்த பாலைவனத்திற்கும் சென்றனர்.

தன்னைப் பின் தொடர்ந்து வந்த மக்கள் கூட்டத்தை கரிசனையுடன் பார்த்த இயேசு, அவர்களுக்கு போதனை செய்யத் தொடங்கினார். காலை தொடங்கி மாலை வரை இயேசுவின் போதனையை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சுகவீனமாய் இருந்த மக்களின் வியாதியையும் குணமாக்கினார் வந்திருந்த மக்கள் யாரும் மதிய உணவோ இரவு உணவோ கொண்டு வரவில்லை. இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, மாலை பொழுதாயிற்று மக்கள் உணவு சாப்பிடும் படி அவர்களை ஊருக்குள் அனுப்பி விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசுவோ, நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று சொன்னார். இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுக்கும்படி நம்மிடம் உணவும் இல்லை, கடையில் வாங்கி கொடுக்க பணமும் இல்லை என்று சொன்னார்கள். உங்களிடம் இப்பொழுது என்ன இருக்கிறதோ அதை கொண்டு வாருங்கள் என்று சொன்னார்.

அந்திரேயா என்ற இயேசுவின் சீடன் வந்து, இங்கே உள்ள ஒரு சிறுவனிடம் இரண்டு அப்பங்களும் ஐந்து மீன்கள் மட்டுமே உண்டு, அதை வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு எப்படி உணவளிக்க முடியும்? என்று கேட்டார். அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, மக்கள் எல்லோரும் சாப்பிடும் படி வரிசையாக உட்கார கட்டளையிட்டார். அவைகளை கையில் வாங்கிய இயேசு, வானத்தை அனார்ந்து பார்த்தது, தன் விண்ணுலக தந்தையிடம் வேண்டுதல் செய்து, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வந்திருந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கச் சொன்னார். மக்களுக்கு கொடுக்க கொடுக்க கையில் இருந்த அப்பங்களும் மீன்களும் பெருகிக்கொண்டே இருந்தன. அன்று உணவு சாப்பிட்டவர்களில் ஆண்கள் மட்டும் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள். வந்திருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களையும் கணக்கில் எடுத்தால் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அன்று உணவருந்தி இருந்தனர். இவர்கள் சாப்பிட்டது மட்டுமல்லாமல், மீதமிருந்த உணவை 12 கூடை நிறைய எடுத்தனர். மீதமிருந்த உணவை வீணடிக்காமல் அதை பாதுகாப்பாக வைக்கும் படி தன்னுடைய சீடர்களுக்கு இயேசு கட்டளையிட்டார்.

ஒரு தேவையோடு தன்னுடைய போதகத்தை கேட்க வந்த மக்களின் ஆன்மீக பசியை மட்டுமல்லாமல் அவர்களின் வயிற்றுப் பசிக்கும் உணவளித்தார் இயேசு! அன்று போலவே இன்றும் தம்மை உண்மையாய் தேடி வருகிற யாவருக்கும் விண்ணுலகில் இருந்து அவர்களின் தேவையை சந்திக்கிற கடவுளாய் இருக்கிறார் இயேசுநாதர்! மேலும் இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது“ என்று சொன்னார்.

இந்த கட்டுரை இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பிதழுக்காக எழுதப்பட்டு, ஜூன் 29, 2023 அன்று வெளிவந்துள்ளது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.