தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

01. வேதவாக்கியங்களும் பாவமும்

வேதவாக்கியங்களும் பாவமும்

கடந்த பல ஆண்டுகளாக வேதவாசிப்பிலும் வேதஆராய்ச்சியிலும் ஈடுபட்ட பலருக்கு அது ஆவிக்குறிய ஆதாயங்களைத் தரவில்லை என்று சொல்லுவதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு. ஆம்! சற்று முன்னோக்கி செல்வோம்; பல சமயங்களில் அது ஆசீர்வாதமாக அமைவதற்கு பதிலாக சாபமாகவே அமைந்திருக்கிறது என்ற பயமும் உண்டு. இது சற்று கடினமான வார்த்தைதான், ஆனாலும் நமக்கு நன்றாகத் தெரியும், நாம் சாபத்தைப் பெற்றுக்கொள்வதைவிட இது கடினமான வார்த்தையல்ல. ஆவிக்குறிய வரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது, தேவனுடைய இரக்கமும் தவறுசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இக்காலங்களில் பலருடைய கனிகளை நாம் பார்க்கும்பொழுது இது உறுதிபடுகிறது. மனிதன் சாதாரணமாக ஏதோ அறிவியலைப் படிப்பதுபோல் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வேதத்தை ஆராய்ச்சி செய்யலாம் (பலமுறை செய்கிறான்). இப்படி ஒருவன் செய்யும்பொழுது அவனுடைய அறிவு அதிகரிக்கிறது, அவனுடைய பெருமையுடன் சேர்த்து! ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆர்வத்தைத் தூண்டும் வேதிவினைகளை செய்வதுபோல, வேதத்தை அறிவுப்பூர்வமாக தெரிந்துகொள்ள வாசிப்பவரும் அதிலே சில காரியங்களை கண்டுபிடிக்கும்பொழுது ஆனந்தமடைகிறார்! ஆனால் வேதத்தை அறிவுப்பூர்வமாக வாசிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளருக்கு உள்ள மகிழ்ச்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; இது ஆவிக்குறிய மகிழ்ச்சியுமல்ல. மேலும், எப்படி ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி வெற்றிபெறும்போது, அது அவர் தன்னை மற்றவர்களை விட சற்று மேலானவராகவும், தன்னை ஒரு முக்கியமானவராக காட்டிக்கொள்ளவும் வகைசெய்கிறதோ, அதைப்போலவே வேதத்தை அறிவுப்பூர்வ கணக்கீடுகள், வார்த்தை ஜாலங்கள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் பல கோணங்கள் பற்றி அறிந்துகொள்ள படிப்பவரும் இருக்கிறார்.

பல நோக்கங்களுக்காக வேதவசனங்களை ஒருவர் வாசிக்கலாம். சிலர் தங்கள் இலக்கிய அல்லது மொழிப் பெருமையை திருப்திபடுத்திகொள்ள வாசிக்கலாம். சில வட்டங்களில் வேதவசனங்கள் தெரியாமலிருந்தால் பெரும் குறையாக கருதப்படுவதால் சிலர் மதிப்பிற்காகவும், பிரஸ்தாபத்திற்காகவும் வேதத்தின் பகுதிகளை வாசிக்கலாம். எல்லா புத்தகங்களையும் படித்துவிட வேண்டுமென்கிற உள்ளார்ந்த ஆர்வத்தினால் சிலர் வேதபுத்தகத்தையும் படிக்கலாம். சிலர் தாங்கள் சார்ந்திருக்கும் சபைபிரிவின் பெருமையை திருப்திபடுத்திக்கொள்ள வாசிக்கலாம். அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சபைபிரிவின் போதனைகளை உறுதிபடுத்தும் வேதவசனங்களைத் தேடி அவைகளை நன்கு அறிந்து வைத்திருப்பது தங்கள் கடமையாக கருதுவதால் வேதத்தை வாசிக்கலாம். தங்களின் வேதக்கருத்துக்களிலிருந்து மாறுபடுபவர்களிடம் வாதம் செய்ய வசதியாக சிலர் வேதத்தை ஆராயலாம். இவை எல்லாவற்றிலும் தேவனுடைய நினைவே இல்லை; ஆவிக்குறிய வளச்சிக்காக எந்த ஆதாயமும் இல்லை; அதனால் ஆத்துமாவிற்கு எந்த உண்மையான பயனும் இல்லை. அப்படியானால், வேதத்திலிருந்து உண்மையான ஆதாயம் பெறுதல் எதை உள்ளடக்கியது? 2தீமோ 3:16,17ம் வசனங்கள் இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலைக் கொடுக்கிறது. இங்கே நாம் வாசிக்கிறோம், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேரினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’. இந்த வசனத்தில் எது விடப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும்: பரிசுத்த வேதஎழுத்துக்கள் அறிவுசார்ந்த முன்னேற்றத்திற்காகவும், மாம்ச வியூகங்களுக்காகவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, உபதேசித்து, கடிந்துகொண்டு, சீர்திருத்தி, எந்த நற்கிரியையும் செய்ய தகுதியாக்கும்படியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தைக்குறித்து உணர்த்தப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.

இதுதான் வேதத்தின் முதல் நோக்கம்: நம்முடைய குறைவையும், ஒன்றுமில்லாமையையும், மோசமானதன்மையையும் வெளிப்படுத்துவதே. ஒரு மனிதனுடைய வெளிப்படையான நன்னடத்தை கண்டிக்கப்படதக்கதாயிராமலும், சகமனிதர்களுடனான உறவு சுமூகமானதாயும் இருக்கலாம்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் வேதவசனத்தை அவன் இருதயத்திலும் மனதிலும் வெளிப்படுத்தி, அவனது பாவத்தின் குருடான கண்களைத் திறந்து, தேவனுடனான அவனது உறவையும், மனப்போக்கையும் காண்பிக்கும்பொழுது, ‘எனக்கு ஐயோ, நான் பாவி’ என்று கதறுகிறான். இப்படியாகத்தான் உண்மையாக இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும் தனக்கு கிறிஸ்து தேவை என்ற வெளிப்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. ‘பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை’ (லூக்கா 5:31). ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய தெய்வீக வல்லமையால் ஒருவனில் வேதவசனத்தை வெளிப்படுத்தாதவரை அவன் மரணத்துக்கேதுவான வியாதிபட்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்வதில்லை.

ஒருவன் மனந்திரும்புவதற்கு முன்னர் ஏற்பட்ட, மனுகுலத்திற்கு பாவம் கொண்டுவந்த கொடிதான விளைவுகளை குறித்த இந்த உணர்த்துதலானது தன்னுடைய அந்த முதல் அனுபவத்தோடு நிறுத்திக்கொள்ளப்பட வேண்டியதல்ல. ஒவ்வொருமுறையும் என் இருதயத்தில் தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிக்கும்போது, தேவன் என்னிடத்தில் எதிர்பார்க்கிற தரமான, ‘உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்’ (1பேது 1:15) என்பதிலிருத்து, நான் எவ்வளவு பின் தங்கியிருகிறேனென்பதை உணர்கிறேன். ஆகவே, இது நாம் செய்ய வேண்டிய முதல் சோதனை: ஒவ்வொரு முறையும் வேதத்தில் மற்றவர்களுடைய தோல்வியை நான் வாசிக்கும்பொழுது, நானும் எத்தனை பரிதாபமாக அவர்களைப்போலவே தோல்வி கண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துகிறதா? ஆசீர்வதிக்கப்பட்ட, பரிபூரண கிறிஸ்துவின் வாழ்க்கையை நான் வாசிக்கும்பொழுது, சற்றும் நான் அவரைப்போல இல்லை என்பதை எனக்கு உணர்த்துகிறதா?

2. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.

கற்பாறை நிலத்தின் மேல் விழுந்த விதைகளுக்கு ஒப்பிடப்பட்டவர்களைக்குறித்து, அவன் வசனத்தைக் கேட்டு, உடனே அதை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டாலும், தனக்குள்ளே வேரில்லாதவனாய் கொஞ்சகாலம் மாத்திரம் நிலைத்திருப்பான் (மத் 13:20,21) என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் பேதுருவினுடைய போதனையின் மூலம் மனந்திரும்பியவர்கள், அவர்கள் இருதயத்திலே ‘குத்தப்பட்டவர்களானார்கள்’ (அப் 2:37) என்று எழுதப்பட்டிருக்கிறது. இதே வேறுபாடு இன்றைக்கும் இருக்கிறது. பலர் பூப்போன்ற அழகான பிரசங்கத்தையோ அல்லது செய்தி கொடுப்பவர் தனது பேச்சாற்றலாலும் அல்லது அறிவுசார்ந்த திறமையாலும் பல பின்னனிய அறிவுசார்ந்த உண்மைகளை உள்ளடக்கி கொடுக்கும் ஒரு பிரசங்கத்தையோ கேட்பதில், பொதுவாக நம்முடைய இருதத்தை ஆராய்ந்து நடைமுறைப் படுத்துவதற்க்கென்று எதுவுமில்லை. பிரமிக்கத்தக்க ஆச்சரியத்துடன் அந்த செய்தி உள்வாங்கப்பட்டாலும், ஒருவரும் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தவோ அல்லது தேவனுடன் நெருங்கி நடக்கவோ அது உதவிசெய்வதில்லை. கிருபையினாலே, தன்னுடைய அறிவுக்கூர்மையினிமித்தம் எந்த புகழ்ச்சியையும் விரும்பாத தேவனுடைய ஊழியக்காரன் வேதபோதனை மூலமாக நம்முடைய குணத்தையும், நடக்கையையும், மிகச்சிறந்த தேவனுடைய மக்களின் தோல்வியையும்கூட வெளிப்படுத்தட்டும்; மக்கள் கூட்டம் அந்த செய்தியாளரைப் புறக்கணித்தாலும், உண்மையாக மனந்திரும்பியவர்கள், ‘நிர்பந்தமான மனுஷன் நான்’ என்று தேவனுக்கு முன்பாக அவர்களை மனஸ்தாபப்படவைத்ததினால் அவர்கள் அந்த செய்திக்காக நன்றியுள்ளவர்களாகவே இருப்பார்கள். ஆகவே, என்னுடைய தனிப்பட்ட வேதவாசிப்பில், பரிசுத்த ஆவியானவர் வேதவாக்கியங்கள் மூலமாக என்னுடைய உள்ளார்ந்த அசுத்தத்தை உணரவைக்கும்பொழுது, நான் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்படுகிறேன்.

‘நான் என்னை அறிந்துகொண்டதற்குப்பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருகிறேன், வெட்கி நாணிகொண்டுமிருக்கிறேன்’ என்று எரேமியா 31:19ல் உள்ள வார்த்தைகள் எத்தனை உன்னதமானவைகள்! எனது வாசகரே, இதேப்போன்ற ஒரு அனுபவம் உங்களுக்கும் உண்டா? உங்களுடைய வேதஆராய்ச்சி, உங்கள் இருதயத்தை நொறுக்கி, தேவனுக்கு முன்பதாக உங்களைத் தாழ்மைப்படுத்துகிறதா? தினம் தினம் உங்களை மனந்திருப்புதலுக்கு நேராக வழி நடத்தும் விதமாக உங்கள் பாவங்களை உணர்த்துகிறதா? பஸ்கா ஆட்டுக்குட்டியானது ‘கசப்பான கீரை’ யுடன் சாப்பிட வேண்டியதாயிருந்தது (யாத் 12:8); ஆகவே, நாம் உண்மையாக சாப்பிடும்பொழுது, அது நமக்கு இனிமையைத் தருவதற்கு முன்பாக, பரிசுத்த ஆவியானவர் அதைக் கசப்பாக்குகிறார். வெளி 10:9ல் உள்ள வரிசையைக் கவனியுங்கள்: ‘நான் தூதனிடத்தில்போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்குத் இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்’. இது தான் எப்பொழுதுமே உள்ள அனுபவ வரிசை: ‘ஆறுதலுக்கு முன்னால் துயரப்படவேண்டும்’ (மத் 5:4) ‘உயர்வுக்கு முன்னால் தாழ்மை வேண்டும்’ (1பேது 5:6).

3. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தை அறிக்கைசெய்ய வழி நடத்தப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.

உண்மையான ஆத்துமா தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளும்பொழுது, வேதவாக்கியங்களிலிருந்து ‘கடிந்துகொள்ளுதல்’ (2தீமோ 3:17) என்னும் ஆதாயத்தைப் பெற்றுக்கொள்கிறது. ‘பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான் தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான்’ (யோவா 3:20) என்று மாம்சத்திற்குறியவர்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ‘பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்’ என்பதே குத்தப்பட்ட ஒவ்வொரு இருதயத்தின் கதறுதலாயும், ஒவ்வொரு முறையும் நாம் வசனத்தினால் உயிர்ப்பிக்கப்படும்பொழுது ஒரு புதிய வெளிப்பாடும், தேவனுக்கு முன்பாக நம்முடைய குற்றங்களைக் காணவும் முடிகிறது. ‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ (நீதி 28:13). மறைவான பாவங்களை நம்முடைய மார்பிலே நாம் மறைத்து வைத்திருக்கும்வரை எந்த ஒரு ஆவிக்குறிய ஆசீர்வாதமோ அல்லது கனிகளோ (சங் 1:3) நம் வாழ்வில் இருக்க முடியாது; தேவனுக்கு முன்பாக நாம் அவற்றை முழுமையாக அறிக்கை செய்யும்பொழுது மட்டுமே நாம் தேவனுடைய இரக்கத்தில் மகிழ முடியும்.

அறிக்கை செய்யப்படாத பாவ பாரத்தை நாம் நம்மில் புதைத்திருக்கும் வரை, நம்முடைய மனதிற்கு உண்மையான சமாதானமோ அல்லது இருதயத்திற்கு இளைப்பாறுதலோ இல்லை. தேவனுக்கு முன்பாக இருதயத்தைத் திறக்கும்பொழுதே விடுதலை கிடைக்கிறது. ‘நான் அடக்கி வைத்த மட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எழும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று’. (சங் 32:3,4) என்ற சங்கீதக்காரனின் அனுபவத்தை கவனியுங்கள். இந்த ஓவியமான ஆனால் கடினமான வார்த்தைகள் உங்களுக்கு அர்தத்தைக் கொடுக்கிறதா? அல்லது உங்கள் சொந்த ஆவிக்குறிய வரலாற்றை விவரிக்கிறதா? இதன் உடனடி தொடர்சியாக, ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ (சங் 32:5) என்பது ஒருவனின் அனுபவமாக இருக்கும்பொழுது அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

4. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தின் மீது ஆழமான வெறுப்பை ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.

‘கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களே; தீமையை வெறுத்துவிடுங்கள்’ (சங் 97:10). தேவன் வெறுப்பதை நாம் வெறுக்காமல் அவரில் அன்புக்கூற முடியாது. நாம் தீமையைத் தவிர்த்து, அதிலே தொடர மறுத்துவிடுவது மட்டுமல்ல, அதற்கு எதிராக நம் கைகளை உயர்த்தி, நம்முடைய இருதயத்திலிருந்து அதை வெறுக்க வேண்டும் (சி.ஹெச்.ஸ்பர்ஜன்). மனமாற்றம் அடைந்திருக்கிறேன் என்று சொல்லும் ஒருவனுக்கு உள்ள உண்மையான பரீசைகளில் ஒன்று பாவத்தைக்குறித்த அவனது மனப்போக்கு. பரிசுத்தம் என்னும் சித்தாந்தம் நாட்டப்பட்டிருக்கிற இடத்திலே அசுத்தத்தைக்குறித்த வெறுப்பு நிச்சயமாக இருக்கும். தீமையை குறித்த நம்முடைய வெறுப்பு உண்மையாக இருக்கும்பொழுது, நம்மிடத்தில் இல்லை என்று நினைத்த தீமையைக்கூட வேதவசனம் நம்மைக் கண்டிக்கும்பொழுது நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போம்.

‘உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்; ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்’ (சங் 119:104) என்பதே தாவீதின் அனுபவமாயிருந்தது. நன்றாக கவனியுங்கள், ‘நான் விலகியிருக்கிறேன்’ என்றல்ல, ‘நான் வெறுக்கிறேன்’ என்கிறார்; ஏதோ குறிப்பிட்ட சில வழிகளையல்ல, ‘எல்லாப் பொய் வழிகளையும்’ என்கிறார். ‘எல்லாவற்றை பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளையும் செம்மையென்று எண்ணி, சகல பொய் வழிகளையும் வெறுக்கிறேன்’ (சங் 119:128). ஆனால் துன்மார்கரைப் பொறுத்த மட்டில் இது முற்றிலும் எதிரானது. ‘சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்து போடுகிறாய்’ (சங் 50:17). நீதிமொழிகள் 8:13ல் நாம் வாசிக்கிறோம், ‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்’. உபாகமம் 17:18,19ம் வசனங்களைப் படிக்கும்பொழுது, இந்த கர்த்தருக்குப் பயப்படும் பயம் வேதத்தை வாசிப்பதினாலேயே வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

5. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தை விட்டு விலகும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.

‘கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவன்’ (2தீமோ 2:19). தேவனை எது மகிழ்விக்கிறது, எது அவரை துக்கப்படுத்துகிறது என்பதை கண்டுக்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வேதத்தை படிக்கும்பொழுது, நாம் இன்னும் அதிகமாய் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள முடியும். நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாக இருக்கும்பொழுது, நம்முடைய வழிகள் உறுதிப்படும். அப்பொழுது நாம் ‘சத்தியத்தில் நடக்கிறவர்களாயிருப்போம்’ (3யோவா 4). அவிசுவாசிகளிடம் இருந்து விலகி, பிர்த்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிற விசுவாசிகளுக்கு 2கொரிந்தியர் 6ம் அதிகாரத்தின் இறுதியில் சில மதிப்புமிக்க வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் அந்த வாக்குத்தத்தங்களை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். ‘இந்த வாக்குத்தத்தங்களால் தேற்றப்பட்டு, திருப்தியாயிருங்கள்’ என்று அவர் சொல்லவில்லை. மாறாக, ‘இப்படிபட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மை சுத்திகரித்துகொண்டு, பரிசுத்தமாகுதலை, தேவபயத்தோடே பூரணபடுத்தக்கடவோம்’ (2கொரி 7:1) என்றே சொல்லுகிறார்.

‘நான் உங்களுக்கு சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்’ (யோவா 15:3). இங்கே நம்மை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டிய இன்னுமொரு முக்கியமான விதி இருக்கிறது. என் வேதவாசிப்பும், வேதஆராய்ச்சியும் என் வழிகளை சீர்படுத்த உதவுகிறதா? நமக்கு நன்கு தெரிந்த கேள்வியான, ‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?’ என்பதற்கு ஆவிக்குறிய பதில் ‘உம்முடைய வசனத்தினால் தன்னைக் காத்துக்கொள்கிறதினால்’ என்பதே. நாம் படிப்பதினாலோ, விசுவாசிப்பதினாலோ அல்லது மனப்பாடம் செய்வதினாலோ அல்ல, நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் வேத வசனத்தை நடைமுறைப்படுத்தும்பொழுதே அது சாத்தியம். அதாவது, ‘வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்’ (1கொரி 6:18), ‘விக்கிரகாராதனைக்கு விலகியோடுங்கள்’ (1கொரி 10:14), ‘பண ஆசைக்கு விலகியோடுங்கள்’ (1 தீமோ 6:11), ‘பாலியத்துக்குறிய இச்சைகளுக்கு விலகியோடி’ (2தீமோ 2:22), போன்ற எச்சரிப்புகளுக்கு கீழ்ப்படியும்பொழுது, நடைமுறை வாழ்க்கையில் ஒரு கிறிஸ்தவன் பாவத்திலிருந்து விலகி வாழமுடியும்; ஏனென்றால், பாவத்தை அறிக்கை செய்வது மட்டுமல்ல, அதை விட்டுவிடவும் வேண்டும் (நீதி 28:13).

6. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்திலிருந்து பாதுகாக்கப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.

பரிசுத்த வேத எழுத்துக்கள் நம்முடைய உள்ளார்ந்த பாவத்தை வெளிப்படுத்துவதற்காக மட்டுமல்ல, பலப்பல வழிகளில் நாம் ‘தேவமகிமையற்றவர்களாயிருப்பதால்’ (ரோம 3:23), பாவத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்பதையும், நாம் எப்படி தேவனை துக்கப்படுத்தாமல் இருக்கலாம் என்பதையும் கற்றுக்கொடுக்க கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிக்கு, உம்முடைய வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்’ (சங் 119:11). நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது இதுதான்: ‘அவர் வாயினின்று பிறந்த வேதபிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்’ (யோபு 22:22). முக்கியமாக கட்டளைகளையும், எச்சரிப்புகளையும், அறிவுரைகளையும் நாம் நம்முடையதாக்கி இருதயத்திலே புதைத்துவைக்க வேண்டும்; அவைகளை மனப்பாடம் செய்ய வேண்டும், தியானிக்க வேண்டும், அவைகளைக் குறித்து ஜெபம் செய்ய வேண்டும், பிறகு வாழ்க்கையிலே நடைமுறைப்படுத்த வேண்டும். நல்ல விதைகளை விதைப்பதே ஒரு நிலத்தை களைகள் விளையாதபடி பாதுகாக்கும் சிறந்த வழியாகும். ‘தீமையை நன்மையினாலே வெல்லு’ (ரோம 12:21). எந்த அளவிற்கு கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசம் செய்கிறதோ (கொலோ 3:16) அந்த அளவிற்கு மிகக் குறைவான இடமே பாவத்திற்கு நம்முடைய இருதயத்திலும் வாழ்விலும் இருக்கும்.

வேதவாக்கியங்களின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதுமானதல்ல, அவைகளை நமது உணர்வுகளுடன் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ‘இரட்சிக்கப்படதக்கதாய் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால்’ (2தெச 2:10) என்று கிறிஸ்துவை மறுதலிப்பவர்களைக்குறித்து பரிசுத்த ஆவியானவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். வேதவாக்கியங்களைக்குறித்து பேசவும் அல்லது வியூகங்களை வகுக்கவும் அவைகள் நமது நாவிலேலும் அல்லது மேலோட்டமாக மனதளவிலேயும் மட்டும் இருக்குமென்றால், அது விரைவில் நம்மைவிட்டு சென்றுவிடும். வெளியில் கிடக்கும் விதைகளை ஆகாயத்து பறவைகள் பட்சித்துவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம். ஆகவே இருதயத்தில் ஆழமாக புதையுங்கள்; அங்கிருந்து கதிர்விட்டு நம்முடைய மனதிற்கும் பிறகு இருதயத்திற்கும் வரட்டும்; இன்னும் அதிகமாக வேர்விடட்டும்.

‘அவன் தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை’ (சங் 37:31) என்ற வசனத்தின்படி, நம்முடைய உணர்வுகளுடன் உள்வாங்கிக்கொண்ட தேவனுடைய வார்த்தையைத்தவிர, இந்த உலகத்தின் பாவ தொற்றுவியாதியிலிருந்து எதுவும் நம்மை பாதுகாக்கவோ அல்லது சாத்தானின் சோதனையிலிருந்து விடுவிக்கவோ முடியாது. சத்தியம் நமக்குள் கிரியை செய்யும்வரை, நமது மனதை தூண்டிவிடும்வரை, மேலும் இது நம்மால் விரும்பப்படும்வரை, நாம் தவறிவிழ மாட்டோம். யோசேப்பு போத்திபாரின் மனைவியாலே சோதனைக்குட்பட்டபோது, ‘நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?’ (ஆதி 39:9) என்று சொன்னான். வேதவசனம் அவன் இருதயத்திலே இருந்தபடியால், தனது இச்சைகளில் விழுந்துவிடாதபடி அவனுக்கு வல்லமை இருந்தது. உன்னதமான பரிசுத்தமும், மிகப்பெரும் தேவனுடைய வல்லமையும், இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லமைபெற்றது. நாம் எப்பொழுது சோதிக்கப்படுவோம் என்று நம்மில் ஒருவருக்கும் தெரியாது; ஆகவே சோதனைக்கு எதிராக எப்பவுமே ஆயத்தமாயிருப்பது அவசியம். ‘உங்களில் இதற்கு செவிகொடுத்து, பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்?’ (ஏசா 42:23). வேத வசனங்களை நம்முடைய இருதயத்திலே பதித்துவைத்து, வருகிற அவசர காலங்களுக்கு எதிராக நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

7. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்திற்கு நேர் எதிரானதை நடைமுறை படுத்தும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.

‘நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்’ (1யோவா 3:4). தேவன் சொல்கிறார், ‘நீ இதை செய்’, பாவம் சொல்கிறது, ‘நான் செய்யமாட்டேன்’; தேவன் சொல்கிறார், ‘நீ இதை செய்யாதே’, பாவம் சொல்கிறது, ‘நான் செய்வேன்’. ஆகவே, பாவம் தேவனுக்கு எதிரான கலகம், சொந்த வழியை தெரிந்தெடுக்கும் தீர்மானம் (ஏசா 53:6). ஆவிக்குறிய வாழ்க்கையில் பாவமானது சட்டத்தை மீறி தேவனுக்கு எதிராக சிகப்புக் கொடியை ஆட்டுகிறது. எப்படி சட்டத்தை மீறுவதின் எதிர்ப்பதம் அதற்கு கீழ்ப்படிவதோ, அதைப்போல தேவனுக்கெதிராக பாவம் செய்வதற்கு எதிர்ப்பதம் அவருக்குக் கீழ்ப்படிவதே. ஆகவே பாவத்திற்கு எதிரானதை நடைமுறைபடுத்துவதென்பது கீழ்ப்படிதலின் பாதையில் நடப்பதே. வேதவாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருபதற்கான இன்னுமொரு முக்கியக்காரணம், நம்மைக்குறித்து தேவனுக்குப் பிரியமான வழியை நமக்குத் தெரியப்படுத்தவே. வேதவாக்கியங்கள் கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் மட்டும் ஆதாயம் தருவதல்ல, நீதியை நடப்பித்தலுக்கும் தான்.

நம்மை அடிக்கடி சோதித்துப்பார்த்துகொள்ள வேண்டிய இன்னும் ஒரு விதி இங்கே இருக்கிறது. என்னுடைய நினைவுகளும், என்னுடைய இருதயமும், என்னுடைய வழிகளும் வேலைகளும் தேவனுடைய வார்த்தையினாலே கட்டுப்படுத்தப்படுகிறதா? தேவன் இதைத்தான் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார்: ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்’ (யாக் 1:22). கிறிஸ்துவின் மீதுள்ள அன்பும் நன்றியுணர்வும் இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது: ‘நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்’ (யோவா 14:15). இதற்கு தேவனின் உதவி நமக்குத் தேவை. தாவீது ஜெபித்தார், ‘உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்’ (சங் 119:35). நமக்குத் தேவை நம்முடைய வழிகளைத் தெரிந்துகொள்ள வெளிச்சம் மாத்திரமல்ல, அதிலே நடக்கத் தேவையான இருதயமும் அவசியம். நம்முடைய மனக்கண் குருடாயிருப்பதால் வழி நடத்துதல் அவசியமே; நம்முடைய இருதயத்தின் பெலவீனத்தால் வல்லமையான தேவனுடைய கிருபையும் அவசியம். ‘உண்மையை நாம் தழுவி அதிலே தொடராவிட்டால், அதைக்குறித்த அறிவு நமக்கு எந்தவிதத்திலேயும் பலன்தராது’ (மாண்டன்). இது அவரது கற்பனைகளின் வழி: சுயமாக தெரிவு செய்த ஒன்றல்ல; ஆனால் நிச்சயமாகக் ‘குறிக்கப்பட்ட’ வழி; இது பொதுவான சாலை அல்ல, ஒரு தனிப்பட்ட வழி, என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.

இதை எழுதியவரும் படிப்பவரும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு காரியங்களையும், தேவனுடைய பிரசன்னத்திலே, உண்மையுடனும் பொறுப்புடனும் ஆராய்ந்து பார்க்கக்கடவர்கள். உங்களுடைய வேதவாசிப்பு மேலும் உங்களைத் தாழ்மையாக்கியிருக்கிறதா? அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட வேதஅறிவினாலே மேலும் பெருமையுள்ளவர்களாக மாற்றியிருக்கிறதா? உங்கள் சகமனிதர்களின் மத்தியில் உங்கள் மதிப்பை உயர்த்தியிருக்கிறதா? அல்லது தேவனுக்கு முன்பாகத் தாழ்மையான இடத்தைத் தெரிந்துகொள்ள உங்களை நடத்தியிருக்கிறதா? சுயத்தைக்குறித்த ஆழமான வெறுப்பை உள்ளத்தில் கொடுத்திருக்கிறதா? அல்லது மேலும் உங்களைத் திருப்தி படுத்தியிருக்கிறதா? உங்களைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நீங்களும், ‘உம்முடைய வேதத்தின் அறிவு எனக்கும் இருக்கிறது’ என்று சொல்லச்செய்கிறதா? அல்லது என்னுடைய நண்பருக்கோ, ஆசிரியருக்கோ கொடுத்திருப்பதுபோல எனக்கும் விசுவாசத்தையும், கிருபையையும், பரிசுத்தத்தையும் தாரும் என்று ஜெபம் செய்யச்செய்கிறதா? இந்த வார்த்தைகளை தியானம் செய்; உன்னை முழுவதுமாக அவைகளுக்கு ஒப்புவி; உன்னுடைய ஆதாயம் மற்றெல்லாருக்கும் தெரிந்திருப்பதாக.